Published:Updated:

ஸ்ட்ராங் ஸ்டாலின்.. பதறும் எடப்பாடி & கோ! - கொடநாடு கொலை வழக்கும் சில சம்பவங்களும்

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

``கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருக்கிறது'' என்று சயானும், மனோஜும் குற்றம்சாட்டினர். கொடநாடு வழக்கு தூசு தட்டப்பட்டதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி பதற்றத்துடன் காணப்படுவது ஏன்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் தமிழ்நாட்டின் முக்கியச் செய்தியாக மாறியிருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கின் விசாரணையை தற்போது வேகப்படுத்தியிருப்பதுதான் பரபரப்புக்குக் காரணம். இந்த வழக்கு தூசி தட்டப்பட்டு, மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து நேற்று சட்டமன்றத்துக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
``அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இது'' என்று செய்தியாளர்களிடம் கொதித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி. ``மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம் இருக்கும்'' என்று பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். கொடநாடு வழக்கின் மறுவிசாரணையில் தி.மு.க அரசு உறுதியாக இருப்பதையடுத்து, எடப்பாடி & கோ கவலையில் இருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த நேரத்தில், கொடநாடு வழக்கு தொடர்பான சில சம்பவங்களை இங்கே காணலாம்!

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயிருக்கும் கொடநாடு எஸ்டேட்டை, 1991-96 காலகட்டத்தில், தான் முதலமைச்சராக இருந்தபோது வாங்கினார் ஜெயலலிதா. இந்த கொடநாடு எஸ்டேட் சொத்துக்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது.

அ.தி.மு.க-வின் பல அதிரடி முடிவுகள் போயஸ் கார்டனில் மட்டுமிருந்து எடுக்கப்படவில்லை, கொடநாட்டிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால், அ.தி.மு.க தொண்டர்களிடையே கொடநாடு எஸ்டேட்டுக்கென்று தனி மவுசு உண்டு. அப்படியிருக்கும் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் அ.தி.மு.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொடநாடு பங்களா
கொடநாடு பங்களா
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 பிப்ரவரியில் சிறை சென்றார் சசிகலா. அதன் பிறகு 2017, ஏப்ரல் 24 அன்று நள்ளிரவில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் அரங்கேறியது இந்தக் கொலை, கொள்ளை சம்பவம்.
கொடநாடு
கொடநாடு

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் புகுந்த கும்பல் ஒன்று, காவலாளி ஓம் பகதூரைக் கொன்றுவிட்டு, மற்றொரு காவலாளி கிருஷ்ணா பகதூரை கட்டிப் போட்டுவிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தையொட்டி 11 பேர்மீது வழக்கு பதியப்பட்டது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு பங்களாவில், அதுவும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின்போது இந்தச் சம்பவம் அரங்கேறியதால் பெரும் சர்ச்சையக் கிளப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கில் முக்கிய நபராக குற்றஞ்சுமத்தப்பட்ட கனகராஜ், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர். இந்தச் சம்பவம் நடந்த மூன்று நாள்களில், சேலம் அருகே விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார் கனகராஜ். அதே நாளில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான சயான் சென்ற காரும் கேரளாவில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சயானின் மனைவியும், குழந்தையும் உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்துக் கொண்டார்.

அதையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி காட்சிகளைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்த தினேஷ் என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக உயிரிழக்க, சந்தேகங்கள் வலுத்துக் கொண்டே சென்றன.

சயான், வாளையார் மனோஜ்
சயான், வாளையார் மனோஜ்

எடப்பாடிமீது குற்றச்சாட்டு!

2019-ம் ஆண்டு, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், நாரதா டேப்கள் மூலம் மம்தாவின் அமைச்சர்களைச் சிக்க வைத்தவருமான மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் கொடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, சயானும், வாளையார் மனோஜும் பேசியிருந்தனர்.

மேத்யூ சாமுவேல்
மேத்யூ சாமுவேல்
டவிட்டர்
52 மணி நேர வீடியோ டேப்... ஸ்டிங் ஆபரேஷனுக்கு உதவிய திரிணாமுல் எம்.பி-`நாரதா' வழக்கில் நடந்தது என்ன?
``கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருக்கிறது'' என்று சயானும், மனோஜும் அந்த வீடியோவில் தெரிவித்தனர். முதல்வர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டது, அந்தச் சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை இது தொடர்பாக சாமுவேல், சயான், மனோஜ் ஆகிய மூவர்மீதும் வழக்கு பதிந்தது.

தூசு தட்டப்பட்ட வழக்கு!

இதன்பிறகு, கொடநாடு வழக்கில் பெரிதாக முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க அரசு. கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, தமிழ்நாடு அரசு தரப்பில், `கொடநாடு வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும்' எனத் தொடுக்கப்பட்டிருந்த மனுவுக்கு அனுமதி அளித்தது உதகை நீதிமன்றம். இதையடுத்து ஆகஸ்ட் 17-ம் தேதியன்று சயானிடம் மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

ஸ்ட்ராங் ஸ்டாலின்... பதறும் எடப்பாடி..!

இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 18-ம் தேதியன்று சட்டமன்றத்தில், ``கொடநாடு விவகாரத்தை தி.மு.க எதற்காக தற்போது கையிலெடுத்திருக்கிறது?’’ என்று கேள்வியெழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ``எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அ.தி.மு.க-வினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்படத் தேவையில்லை. நீதிமன்ற அனுமதியுடன்தான் விசாரணை நடைபெற்றுவருகிறது. உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும்,

நீங்கள்தான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்று தொடர்ந்து கேட்டீர்கள், அதில் ஒன்றுதான் கொடநாடு வழக்கு விசாரணை. இன்னும் நிறைய இருக்கிறது!
ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Twitter/@Udhaystalin

இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினர் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பேசிய எடப்பாடி, ``கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் எனது பெயரைச் சேர்க்க முயன்றுவருகின்றனர். இந்தக் கொலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்துவருவது தி.மு.க-தான். கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கெனவே கொலை, கொள்ளை, போதை மருந்து வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்களுக்கு ஆளும் தி.மு.க அரசு ஆதரவளிப்பது ஏன் என்று தெரியவில்லை'' என்று காட்டமாகப் பேசினார்.

ஆளுநர் சந்திப்பு!

தொடர்ந்து ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகிய இருவரும் இன்றைக்கு (ஆக. 19) ஆளுநரைச் சந்தித்திருக்கின்றனர். தி.மு.க அரசு மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் கொண்டு சேர்க்கத்தான் இந்தச் சந்திப்பு என அ.தி.மு.க வட்டாரங்கள் கூறினாலும், கொடநாடு வழக்கு தொடர்பாகத்தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, ``தேர்தல் அறிக்கைக்கும் கொடநாடு வழக்குக்கும் என்ன சம்பந்தம். நீதிமன்றத்திலிருக்கும் வழக்கைத் தேர்தல் வாக்குறுதியாக எப்படிக் கொடுத்தார்கள். கொடநாடு கொலை வழக்கு குற்றவாளி சயானுக்கு ஆதரவாக தி.மு.க வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். வழக்கு முடியும் தறுவாயில் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்த நினைக்கிறது தி.மு.க அரசு'' என்று பேசினார்.

எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் மனு
எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் மனு
கொடநாடு வழக்கில் கவனம் செலுத்தும் திமுக அரசு... 'ஸ்கெட்ச்' யாருக்கு?

எடப்பாடி பதறுவது ஏன்?

`கொடநாடு வழக்கு தூசு தட்டப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி பதற்றத்துடன் காணப்படுவது ஏன்?' என்ற கேள்விக்கு சில தகவல்களைச் சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ``சஜீவன் என்ற மர வியாபாரியின் பெயர் கொடநாடு வழக்கில் அடிபட்டு வருகிறது. சஜீவன்மீது ஏற்கெனவே மர கடத்தல் வழக்குகள் இருக்கின்றன. கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு சஜீவனுக்கு அ.தி.மு.க மாநில வர்த்தக பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் சகோதரருக்கு, சஜீவன் நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்த வழக்கில் சஜீவனின் பெயர் சேர்க்கப்பட்டால், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது சிக்கல் ஏற்படுமோ என்கிற அச்சத்தில்தான் பதற்றமடைகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

ஏற்கெனவே பல திருப்புமுனைகளைச் சந்தித்த கொடநாடு வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. ``வரும் காலங்களில் இந்த வழக்கு, தமிழக அரசியலில் மீண்டும் பல பரபரப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு