"எந்த லட்சியத்துக்காக வாழ்கிறானோ, அந்த லட்சியத்துக்காகத் தன் உயிரையும் கொடுப்பதற்கு ஒருவன் தயாராக இருக்க வேண்டும்" என்றதுடன், தன் வார்த்தையின்படியே வாழ்ந்து, அதற்காகத் தன் உயிரையும் ஈந்தவர், அவர்.

ராஜாஜி முதல்வராய் இருந்த சமயம். சட்டசபை கூடியிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதியின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுகின்றனர். சிலர், "கூடுதலாய் மருத்துவமனைகள் வேண்டும்" என்கின்றனர். இன்னும் சிலரோ, "ரேஷன் கடைகளை அதிகமாய்த் திறக்க வேண்டும்" என்கின்றனர். அனைத்தையும் கேட்ட பின், எழுந்து ராஜாஜி பதிலளிக்கிறார். "இன்று விவாதத்தில் பேசிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதிக்கு, 'அது வேண்டும்... இது வேண்டும்' என்றீர்கள். இது, வருந்தத்தக்க நிலைமை. தொகுதி கண்ணோட்டம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், பரந்துவிரிந்த இந்த மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லாமல் போயிற்றே" என்கிறார். அத்துடன் அன்றைய சட்டசபைக் கூட்டம் நிறைவுபெறுகிறது.
மறுநாள் தொடங்கிய கூட்டத்தில் நம்மவர் எழுந்து, "நேற்று... நம் முதல்வர் அவர்கள், 'எம்.எல்.ஏ-க்களுக்கெல்லாம் தொகுதிக் கண்ணோட்டம்தான் இருக்கிறது, மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டார். அவர், வருத்தப்படத்தான் செய்வார். ஏனென்றால், இங்கே பேசிய ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதியில் ஓட்டு வாங்கி வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்கள். அவர்கள் அந்தத் தொகுதியில் கடமையாற்ற வேண்டியது அவசியம்.

ஆக, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்காகத்தான் பேசுவார்கள். ஆனால், பாவம் நமது முதல்வருக்கு தொகுதியே கிடையாது. அவர், எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற்று வரவில்லை. மக்களிடம் ஓட்டு வாங்கி வரவில்லை. பரிதாபத்துக்குரியவர். அவருக்கே தொகுதி இல்லை. அதனால், தொகுதிக் கண்ணோட்டத்தை நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது" என்றாராம். அதைக் கேட்டு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிரித்ததுடன், மேஜையையும் தட்டி ஆர்ப்பரித்திருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் இப்படியெல்லாம், ஜாம்பவானாகத் திகழ்ந்த அவர், இன்றைய அரசியல்வாதிகளைப்போல் நட்சத்திர அந்தஸ்துள்ள சொகுசு பங்களாக்களில் வாழ்ந்தவர் இல்லை. சாதாரண ஒரு வீட்டில், அதுவும் மழைநீர் ஒழுகும் ஒரு வீட்டில் வாழ்ந்த எளிய மனிதர். அப்போதைய முதல்வர் காமராஜர், நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் வீட்டுப் பக்கமாகச் சென்றபோது, அவரது நிலைமையைப் பார்த்து, "நீங்கள் இந்தக் குடிசையில்தான் இருக்கிறீர்களா... நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன், வருகிறீர்களா?" என்று கேட்டதற்கு அவர், "இல்லை. இந்த நாட்டிலே வசிக்கிற எல்லா மக்களும் வீடுகட்டி வாழும்போது நானும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருகிறேன்" என்றாராம்.
இப்படி, கடைசிவரை எளிமை வாழ்வை வாழ்ந்த அவர், ஒருநாள் தன் அண்ணன் மகனை அழைத்து, "உன்னிடம் ஒரு சிறிய உதவி கேட்பேன், செய்வாயா?" என்றாராம். அதற்கு அண்ணன் மகன், "கேளுங்கள் அப்பா" என்றாராம். "200 ரூபாய் பணம் கொடு. பத்மாவதி சம்பளம் வாங்கியவுடன் தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார். அதைக் கேட்டதும், அண்ணன் மகன் அழ ஆரம்பித்துவிட்டார்.
அதைப் பார்த்த நம்மவர், "எதற்கு அழுகிறாய்... அப்படி என்ன நான் கேட்டுவிட்டேன். நான் கேட்டதில் தவறும் எதுவுமில்லையே?" என்று வினவியுள்ளார். ஆனாலும் அவர் அழுதபடியே, "நீங்கள் ஒரு விரல் அசைத்தால் கொண்டுவந்து கொட்டுவதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் என்னிடம் போய் இந்த 200 ரூபாயைக் கேட்டீர்களே" என்று வருத்தப்பட்டுக் கூறினாராம். யாரிடமும் கேட்காதவர், தன்னிடம் கேட்கிறாரே என்கிற வேதனையில்தான் அவருடைய அண்ணன் மகன் அழுதிருக்கிறார்.

அப்படிப்பட்டவர், கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியபோது "சாவு என்னை நெருங்கிவந்தாலும் விரட்டியடிப்பேன். நான் ஏற்றுக்கொண்டிருக்கிற லட்சியத்தை, ஏந்தியிருக்கிற செங்கொடியை, நான் சார்ந்திருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியை, வாகைசூடவைத்துவிட்டுத்தான் நான் மடிவேன்; சாவையும் விரட்டியடிப்பேன்" என்றவரைத்தான் சாவு முந்திக்கொண்டு அள்ளிக்கொண்டுபோய்விட்டது. அவர்தான்... மக்கள் இதயங்களை வென்றெடுத்த மாமனிதர், ப.ஜீவானந்தம். அவருடைய பிறந்த தினம் இன்று.