கல்லூரி மாணவிகளுக்குத் தமிழக அரசு வழங்கும் ரூ.1,000 உதவித்தொகை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருப்பதும், அதற்குக் கட்சித் தலைமையிடமிருந்து எந்த விளக்கமும் கண்டனமும் வராமல் இருப்பதும்... தி.மு.க-வின் `பெண்கள் நலம்’, `பெண்கள் பாதுகாப்பு’, `பெண்களுக்கான மரியாதை’ முகங்களை மீண்டும் ஒருமுறை வெளுக்க வைத்துள்ளது.

அமைச்சர் துரைமுருகன், ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசியிருக்கும் வீடியோவை, பா.ஜ.க-வைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 40 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், குடும்பப் பெண்களுக்கு வழங்கும் உரிமைத்தொகை பற்றிப் பேசுகிறார் அமைச்சர். அதைத்தொடர்ந்து கல்லூரிப் பெண்களுக்கு வழங்கும் உதவித் தொகையைப் பற்றி அவர் உதிர்த்துள்ள வார்த்தைகள், கண்டிக்கத்தக்கவை, நாகரிகமற்றவை, ஆணாதிக்கமானவை.
`குடும்பத்தைக் காப்பாத்துறதுக்கு உங்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்குறோம்’ என்று கூட்டத்திலிருக்கும் பெண்களைப் பார்த்துச் சொல்லும் அமைச்சர் துரைமுருகன், அதைத் தொடர்ந்து பேசியிருப்பவை, அரசியல்வாதி, அமைச்சர் என்ற தகுதிகளையெல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய, பொறுப்பற்ற, மலிவான பேச்சு. `உங்க பொண்ணு கல்லூரியில படிச்சா, அவளுக்கு ஒரு ஆயிரம் ரூபா கைல கொடுக்குறோம். உங்க அம்மாகிட்ட போய் பஸ்ஸுக்குக் கேட்காத, பசங்களோட சினிமாவுக்குப் போனா பணம் கேட்காத, ஒரு செல்போன் வாங்கி வெச்சுக்கோ, நைசா பேசு, என்ன வேணா பண்ணுனு அதுக்கு ஒரு ஆயிரம் கொடுக்குறோம்’ என்று கீழ்த்தரமாகப் பேசியுள்ளார் துரைமுருகன்.

முன்னதாக, பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பப்பட்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அப்போது இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனாலும், பெண்களுக்குத் திருமணத்தைவிட கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி அரசு முன்னெடுத்த இந்தத் திட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து, இதன் முக்கியத் துவத்தை எடுத்துரைத்தனர். இப்போது அமைச்சர் துரைமுருகனோ 1,000 ரூபாய் கல்லூரி மாணவிகளுக்கு எதற்காக வழங்கப்படுகிறது என்பதற்குப் புது விளக்கம் கொடுத்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.
ஒரு மேடையில் பேசும் அமைச்சர், தாய்மார்களிடம், `உங்கள் பெண் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க அரசு உதவுகிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்லவும், பெண் கல்வி குறித்தும், உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும் கடமைப்பட்டிருப்பவர். ஆனால் அவரோ, `உங்க பொண்ணுங்களுக்கு எல்லாம் எதுக்கு 1,000 ரூபாய் கொடுக்குறோம் தெரியுமா? பசங்களோட சினிமாவுக்குப் போகலாம், செல்போன்ல `நைசா’ பேசலாம், என்ன வேணா பண்ணலாம்’ என்று அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். கல்லூரி மாணவிகளையும் அவமானப்படுத்தி, அவர்கள் அம்மாக்களையும் கலவரப்படுத்தியிருக்கிறார். மேலும், `நைசா பேசு, என்ன வேணா பண்ணு’ என்று சொல்லும்போது அவர் உடல்மொழியின் ஆபாசம்... மிகுந்த கண்டனத்துக்குரியது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தை `ஓசி’ என்று மேடையில் பேசினார். இப்போது மூத்த அமைச்சர் துரைமுருகன், கல்லூரிப் பெண்களையும் அவர்கள் தாய்மார்களையும் இதைவிட இழிவுபடுத்த முடியாது என்ற அளவுக்கு வார்த்தைகளை உதிர்த்துள்ளார். வழக்கம்போல கட்சித் தலைமையிடமிருந்து இதற்கு விளக்கமோ, கண்டன அறிக்கையோ வரவில்லை. துரைமுருகனும், தான் எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை என்று இருக்கிறார் போல.
மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்கும் அரசுக்கும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்லும் அரசின் பிரதிநிதிகளுக்கும் அதுகுறித்த பொறுப்புணர்வு வேண்டும் என்று அறிவுறுத்தும் நிலையில் நம்மை வைக்கவில்லை இந்த தி.மு.க பிரமுகர்கள். மாறாக, ஆணவப்போக்கோடுதான் நடைபோடுகிறார்கள். அதிலும், மூத்த அமைச்சர்கள் என்று சொல்லப்படுபவர்களின் கடைவாயில், எஜமானத்தனம் வழிந்தோடுகிறது. இத்தனைக்கும் இந்த `திராவிட மாடல்'கள் எல்லாம் பாட்டாளிகளாகவும் ஏழைகளாகவும் இருந்தவர்கள்தான். ஆனால், ஆட்சிக்கட்டிலில் ஏறி உட்கார்ந்து, இன்றைக்கு பங்களாவாசிகளாக மாறிவிட்ட காரணத்தால், ஏழை மக்களை `ஓசிப்பார்ட்டி' என்றும், `நாங்க போடுற பிச்சை' என்பது போலவும் வாயைத் திறக்கிறார்கள்.

`நான் மக்களுக்காக உழைக்கிறேன். மக்களைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வேன்' என்றெல்லாம் மேடைக்கு மேடை முழங்கும் முதலமைச்சரோ... இந்த `வாய்க்கொழுப்பு'களுக்கு எதிராக வாயைக்கூட திறக்காமல் மௌனித்துக் கிடக்கிறார். வாக்களித்து அமைச்சர்களாக உட்கார வைத்த மக்களை, ஏளனமாகவும் இளக்காரமாகவும் மூத்த அமைச்சர்களே பேசினால்... பிறகு, அந்த நலத்திட்டங்களை வழங்குமிடத் திலிருக்கும் அதிகார வர்க்கம் எப்படி மதிக்கும்?
வாய்தவறி சொல்லிவிட்டால் மன்னிக்கலாம். ஆனால், வாய்க்கொழுப்பில் பேசுவதை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது. பதிலடிதான் கொடுக்க முடியும்.
காத்திருப்போம் காலம் வரும்வரை!
- அவள்
#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!