Published:Updated:

துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநருடனான போட்டியில் முந்தினாரா முதல்வர் ஸ்டாலின்?!

முதல்வர் - ஆளுநர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 30-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது.

துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநருடனான போட்டியில் முந்தினாரா முதல்வர் ஸ்டாலின்?!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 30-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது.

Published:Updated:
முதல்வர் - ஆளுநர்

அரசு பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஆளுநர் ரவி, மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசு எதிர்க்கும் நீட், புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை தொடர்பாகவும் தொடர்ந்து பேசிவருகிறார். அதேநேரத்தில், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த மாநில அரசு முனைப்பு காட்டிவருகிறது.

ஆளுநர் தலைமையில் துணைவேந்தர் மாநாடு
ஆளுநர் தலைமையில் துணைவேந்தர் மாநாடு

இதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை சார்பாக தமிழ்நாட்டிலுள்ள மாநில அரசின் 13 பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்துப் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியிலுள்ள ராஜ்பவனில் கடந்த ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி ஆளுநர் பேசியிருந்தார். அதேபோல, துணைவேந்தர்களிடம் தனித்தனியாகவும், ஐந்து பேர்கொண்ட குழுவாகவும் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மாநாட்டுக்குப் பிறகு ஆளுநரின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.  இதனால், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு, இணைவேந்தர் என்ற அடிப்படையில் துணைவேந்தர் மாநாட்டை நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முனைப்பு காட்டினார். மேலும், ஆளுநர் அதிகாரங்களைக் குறைப்பதற்காக, துணைவேந்தர்களை அரசு நியமிப்பதற்காக சட்ட மசோதாவை தி.மு.க அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

அதன்படி, துணைவேந்தர்களுக்கான மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆகஸ்ட் 17-ம் தேதி நடத்தத் திட்டமிட்டப்பட்டது. ஆனால், செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடிக்க உதவியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றதால், மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 13 பல்கலைக்கழகங்களும் இதர துறையின் கீழ் இயங்கும் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், பதிவாளர்களும் கலந்துகொண்டனர். மேலும், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முதல்வர் தலைமையில் துணைவேந்தர் மாநாடு
முதல்வர் தலைமையில் துணைவேந்தர் மாநாடு

மாநாட்டில் கலந்துகொண்ட பதிவாளர்கள் சிலர் கூறுகையில், "மாநாடு நடப்பதற்கு முன்பாகவே, துணைவேந்தர்கள் அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால், ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு என்ற போட்டிக்குள் நாங்கள் எவ்வாறு சிக்கியிருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேசுவதற்கு துணைவேந்தர்கள் மிக ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் ஆகிய ஐந்து பேருக்கு தலா நான்கு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது. இதனால், தங்கள் தரப்பு பிரச்னை குறித்து துணைவேந்தர்களால் மனம்விட்டுப் பேச முடியவில்லை. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசும்போது, 'உங்கள் பல்கலைக்கழக விடுதியில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் போராட்டம் செய்கிறார்களே' என்று அவரிடம் முதல்வர் கேட்டார். அவ்வளவுதான்... பேச வாய்ப்பு கிடைத்த துணைவேந்தர்களும் என்ன பிரச்னை என்று தெளிவாகப் பேசவில்லை.

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு நிதி வேண்டுமென்று சொல்லி வைத்தாற்போலேவே பேசினார்கள். அதற்கு ஏற்றாற்போல், 'ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு' என்று முதல்வர் அறிவித்தார். அதேபோல முதல்வர் பேசும்போது, மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்றும், மாநில அரசின் கொள்கை முடிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இது எங்களுக்கு தெம்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது" என்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வரின் இந்தப் பேச்சு ஆளுநர் மாளிகைக்கு அவர் விட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், ஆளுநர், அரசு என இரு பக்கமும் மத்தளம்போல அடி வாங்கும் துணைவேந்தர்களுக்கு முதல்வரின் பேச்சு மூலம் அரசுமீது ஒரு பிடிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் ஆளுநர் மாளிகையின் அடுத்தகட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே துணைவேந்தர்களுக்கு முதல்வர் கொடுத்த சத்து டானிக்கின் செயல்பாடு தெரியவரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.