Published:Updated:

`பா.ஜ.க, தே.மு.தி.க போனால் போகட்டும்; ஆனால் பா.ம.க?!' - அ.தி.மு.க-வின் கூட்டணி கணக்கு

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...
எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...

பா.ம.க அதிக சீட்டுக்காக இந்த மோதல் போக்கை ஆரம்பித்துள்ளதா, உண்மையிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

``தமிழகத்தில் 80 சீட்டுகளைப் பிடித்தால் நாம்தான் ஆட்சி அமைப்போம்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அதிரடியாகப் பேசி கூட்டணிக் கட்சிகளுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சமீபகாலமாக அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும்கட்சியைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்ற வேளையில், பா.ஜ.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் கூட்டணியைவிட்டு சென்றாலும் பா.ம.க மட்டும் நம்மைவிட்டு சென்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க என்கிறது அக்கட்சி வட்டாரம்!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க-வின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம் தி.நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "பா.ம.க என்ற கட்சியைத் தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை, ஒருமுறைகூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. 2021-ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 70 முதல் 80 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம். அதில், எந்த மாற்றமும் இல்லை. அதற்காக நாம் இப்போதே கடுமையாக உழைக்க வேண்டும். பா.ம.க ஆட்சி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் யாராவது இருந்தால், கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

எடப்பாடி, ஓ.பி.எஸ்
எடப்பாடி, ஓ.பி.எஸ்

திறமையான நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம். திட்டமிட்டு வேலை செய்தால் தமிழகத்தில் வேறு கட்சிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பா.ம.க முதலாவது இடத்துக்கு வர வேண்டும். அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்" என்று பேசினார்.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் பா.ம.க அதிக சீட்டுக்காக இந்த மோதல் போக்கை ஆரம்பித்துள்ளதா, உண்மையிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியையும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், ``பா.ம.க எங்களது கூட்டணியில்தான் இருக்கிறது. அவர்கள் எங்களை விட்டு விலகும் எண்ணத்தில் இல்லை என்றும் அவர்களது கட்சித் தொண்டர்களைத் தேர்தலில் வேலை செய்வதற்காக முடுக்கிவிட்டிருக்கிறார். அவ்வளவுதானே தவிர நீங்கள் யூகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது'' என்று மழுப்பலான பதிலைப் பத்திரிகையாளரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கலநிலவரம் வேறு என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.

பிரேமலதா
பிரேமலதா
என்.ஜி.மணிகண்டன்

இதற்கு முன்புகூட அ.தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர் பொன்னார், `தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகத் திகழ்வதாக'த் தொடர்ந்து தமிழக அரசைக் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார். தற்போது அந்த வரிசையில் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, நரேந்திரன் உள்ளிட்டோர் சேர்ந்துகொண்டு அரசின் குறைகளைப் பட்டியலிடத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல் தே.மு.தி.க-வின் பிரேமலதா, "நாங்கள் குட்டக்குட்ட குனிய மாட்டோம். எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருக்கிறது" என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்திருக்கிறார்.

பழனிசாமி, பன்னீர் செல்வம்
பழனிசாமி, பன்னீர் செல்வம்

அப்படி இருக்கையில், பா.ம.க செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதற்கு மட்டும் அ.தி.மு.க பதறிப்போய் உடனே மறுப்பு வெளியிடுகிறது என்றால் என்ன காரணம். பா.ஜ.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியைவிட்டுப் போனாலும் பரவாயில்லை.

பா.ம.க மட்டும் கூட்டணிக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. காரணம் அவர்களுடைய சமுதாய பலம். அதை நம்பியே நகர்ப்புற தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளலாம் என்ற கனவில் இருக்கிறதாம் அ.தி.மு.க இதைத் தெரிந்துகொண்டுதான் பா.ம.க அடுத்தடுத்த நெருக்கடிகளைப் பேச்சுகள் மூலமாகக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

முதல்கட்டமாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வைத்தது நாங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்திருக்கிறோம் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறது. இதேபோல் இன்னும் பலவிதத்தில் ஆளும்கட்சிக்கு நெருக்கடிக் கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு