Published:Updated:

`வளர்ச்சியே இல்லாத 100 நாள்களுக்கு வாழ்த்துகள்’ - பிரதமரை விளாசிய ராகுல் காந்தி

சத்யா கோபாலன்

மத்திய அரசின் முதல் 100 நாள்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Rahul Gandhi
Rahul Gandhi ( Twitter/@RahulGandhi )

மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 100 நாள்களில் மத்திய அரசு பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளதாக பா.ஜ.க பெருமையாகத் தெரிவித்துவருகிறது.

Modi
Modi
Twitter/@BJP4India

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை மசோதா, உபா சட்டத்திருத்தம், ஜல் சக்தி அமைச்சரவை உருவாக்கம், 75 மருத்துவக் கல்லூரிகள் கட்ட ஒப்புதல், பிளாஸ்டிக் தடை போன்ற பல சாதனைகளை நிகழ்த்தப்பட்டுள்ளதாகப் பெருமையாகப் பேசிவருகின்றனர். ஆனால், மறுபுறம் இந்த 100 நாள்களில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

`எங்கள் குழந்தைகள், வீட்டில் சிறைப்பட்டுள்ளனர்!’ - விமானத்தில் ராகுல் காந்தியிடம் கதறிய பெண்

தங்கள் 100 நாள் ஆட்சி பற்றிப் பேசிய பிரதமர் மோடி, `` பா.ஜ.க ஆட்சியின் முதல் 100 நாள்களில் நாட்டில் மிகப் பெரும் மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளன. வேளாண்மை, தேசப் பாதுகாப்பு போன்றவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான சட்ட மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 100 நாள்களில் எடுக்கப்பட்டுள்ள துணிச்சலான முடிவுகள் வருங்காலத்தில் பா.ஜ.க அரசின் பெருமையைச் சொல்லும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதே பா.ஜ.க அரசின் 100 நாள்களைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `` 100 நாள்களில் எந்த வளர்ச்சியும் இல்லாத மோடி அரசுக்கு வாழ்த்துகள். ஜனநாயகத்தைத் தொடர்ச்சியாகக் கீழே தள்ளி அழித்து, ஊடகங்களின் விமர்சனங்களை மூழ்கச் செய்யும்படி குரல் வளையை நெறித்து, உறுதியான தலைமை இல்லாமல் பறிபோன நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களும் வழிகாட்டுதலும் இல்லாத அரசுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.