Published:Updated:

காங்கிரஸை சாய்க்கும் ரிசார்ட் அரசியல்... என்ன நடக்கிறது மத்தியப் பிரதேசத்தில்?

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. பா.ஜ.க குதிரைபேர அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அதற்குப் பிறகு பல மாநிலங்களில் ரிசார்ட் அரசியல் யதார்த்தமானது. கர்நாடகா, குஜராத், கோவா வரிசையில் தற்போது மத்தியப் பிரதேசத்திலும் ரிசார்ட் அரசியல் சூடுபிடித்திருக்கிறது.

கூவத்தூர்
கூவத்தூர்

2018 டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நூலிழையில் பா.ஜ.க-வை வீழ்த்தி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதல்வராகப் பொறுப்பேற்றார். 230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 114 உறுப்பினர்களும் பா.ஜ.க-வுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். சமாஜ்வாடி 1, பகுஜன் சமாஜ் 2 மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 4 பேரின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில், கர்நாடகத்தைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. கூட்டணிக் கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவோடுதான் காங்கிரஸுக்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது. அதோடு மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்குள்ளேயே வெளிப்படையான மோதலும் இருந்து வருகிறது. 

காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க ஹரியானாவில் மறைத்துவைத்து ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும் அடக்கம். ஒரு எம்.எல்.ஏ-க்கு 50 முதல் 60 கோடி வரை வழங்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மாஃபியாக்களின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயல்வதாக கமல்நாத் தெரிவித்தார்.

கமல்நாத் - சிவராஜ் சிங் சவுகான்
கமல்நாத் - சிவராஜ் சிங் சவுகான்

குதிரை பேர குற்றச்சாட்டை பா.ஜ.க முற்றிலுமாக மறுத்துவிட்டது. இது காங்கிரஸுக்குள் நடைபெறுகிற உட்கட்சி மோதல். இதற்கும் பா.ஜ.க-வுக்கும் சம்பந்தமில்லை என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காணாமல் போன காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளில் இறங்கினார் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங். இதில் நான்கு பேர் காங்கிரஸ் கூட்டணிக்குத் திரும்ப வந்துவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நான்கு எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்ததும் திக்விஜய் சிங் பெங்களூரு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் திரும்பிவிடுவர் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. `நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடனே இருக்கிறோம். கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யும்’ என்கிறார் திக்விஜய் சிங்.

ஜெயலலிதாவுக்கு 19.92 லட்சம்; ராமசாமி படையாச்சிக்கு 20 லட்சம்... எடப்பாடி ஆட்சியின் என்ன கணக்கு இது?!

காங்கிரஸ் உட்கட்சி மோதல்:

வருகிற மார்ச் 26-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் மூன்று மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் - பா.ஜ.க ஒவ்வொரு இடத்தைப் பெறுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், மூன்றாவது இடத்தை யார் பெறுவது என்பதில்தான் சிக்கல் எழுந்துள்ளது. பா.ஜ.க-வுக்கு போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லை. எனவே, மூன்றாவது இடம் காங்கிரஸுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

சிந்தியா - திக்விஜய் - கமல்நாத்
சிந்தியா - திக்விஜய் - கமல்நாத்

மத்தியப்பிரதேச முதல்வர் கமல் நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி ஜோதிராவ் ஆதித்ய சிந்தியா ஆகிய மூவருக்குள்ளும் அதிகாரப்போட்டி நிலவுகிறது. இதை அறுவடை செய்துகொள்ள பா.ஜ.க முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை பதவி விலகச் செய்து ஆட்சியைக் கவிழ்த்து இடைத்தேர்தலைச் சந்திக்கும் அதே கர்நாடக ஃபார்முலாவை இங்கும் பரிசோதித்துப் பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மத்தியப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற்றபோதே யார் முதல்வராக நியமிக்கப்படுவார் என்பதில் குழப்பம் நிலவியது. ``தனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டால் அதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்வேன்'' என்று ஜோதிராவ் ஆதித்ய சிந்தியா வெளிப்படையாகவே தெரிவித்தார். நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கமல்நாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் சிந்தியாவுக்கும் அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் ஏமாற்றம். தனக்கு மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியாவது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளார் சிந்தியா. ஆனால், அதுவும் தற்போதுவரை கமல்நாத் வசம்தான் உள்ளது.

சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்
சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்

சிந்தியா செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்பதில் திக்விஜய் சிங்கும் குறியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சிந்தியா சில சமயங்களில் வெளிப்படையாகவே மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசை விமர்சிக்க ஆரம்பித்தார். இந்தப் பிளவுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றே பா.ஜ.க காத்திருக்கிறது. தற்போதைய குழப்பங்கள் வெறும் ராஜ்யசபா தேர்தலுக்கான முன்னோட்டமே, இது சாத்தியப்பட்டால் அடுத்து ஆட்சிக்கும் நெருக்கடி கொடுக்க பா.ஜ.க முயலும் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஆட்சியைக் காப்பாற்றிவிட்டாலும் இனிவரும் நாள்கள் காங்கிரஸுக்கும் கமல்நாத்துக்கும் நெருப்பாற்றில் அடிக்கக்கூடிய நீச்சலாகவே இருக்கும்..

ரிசார்ட் அரசியல் தொடருமா.. காங்கிரஸ் கரை சேருமா.. மற்றுமொரு கர்’நாடகத்துக்கு’ தயாராகவே இருப்போம்..

அடுத்த கட்டுரைக்கு