தென்னிந்தியாவில் வலுவான அடித்தளம் அமைக்க, பல ஆண்டுகளாகப் போராடிவரும் பா.ஜ.க., கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியைத் தன்வசம் வைத்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் இன்னமும் பா.ஜ.க-வுக்கு பெரிய அளவிலான ஆதரவு கிடைக்காத நிலையே நிலவுகிறது.
இதனால், இன்று நடந்து முடிந்த, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல், தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. கர்நாடகத்தில் மொத்தம், 5.31 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், மொத்தம் 224 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.

‘காங்கிரஸுக்குச் சாதகமான கருத்துக்கணிப்பு!’
தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி முதல் எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில், காங்கிரஸ் 108 – 120 இடங்கள், பா.ஜ.க 65 – 90 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம், 24 – 34 இடங்கள் வரை பெறுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கர்நாடகா உளவுத்துறையும், ‘தேர்தல் களம் காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கிறது’ என பா.ஜ.க அரசுக்குத் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கருத்துக்கணிப்பை பொய்யாக்கவும், தென்னிந்தியாவுக்குள் பரவி விரிய, தங்களுக்கிருக்கும் துருப்புச்சீட்டான கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவும், பா.ஜ.க ‘மோடி அலையை’ உருவாக்கி, அதிதீவிர பிரசாரம் மேற்கொண்டது.

Exit Poll – முந்திய காங்கிரஸ்!
இன்று, தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், ஐந்து ஊடகங்கள், Exit Poll-ஐ நடத்தி முடித்து, சர்வே முடிவை வெளியிட்டிருக்கின்றன. 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க, 113 இடங்களில் பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் அதிகபட்சமாக, 118 இடங்களைப் பிடிக்கும் என ஊடகங்கள் இந்த சர்வேயில் தெரிவித்திருக்கின்றன. மூன்று ஊடகங்கள் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும், இரண்டு ஊடகங்கள் பா.ஜ.க அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும் முடிவை வெளியிட்டிருப்பதுடன், Exit Poll நடத்திய ஊடகங்கள் அனைத்தும், தொங்குநிலை நிலவுமென கணித்திருக்கின்றன.
இதனால், 2018-ம் ஆண்டுபோல காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுவதுடன், தொங்குநிலையால் மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, முதல்வர் பதவிக்கு காய்நகர்த்தி மீண்டும் ‘கிங் மேக்கர்’ ஆகும் வாய்ப்பிருக்கிறதா என்ற சந்தேகப்புயலை கிளப்பியிருக்கிறது.

பா.ஜ.க-மீது குமாரசாமி அதிருப்தி?
தேர்தல் களத்தில் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்மீது, ‘மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் பேரன் வரையில் போட்டுயிடுவார்கள், குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி. கர்நாடகத்தில் காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றுதான்' என்பவை போன்று, பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வாக்குச் சேகரித்தனர்.
ஆனால், காங்கிரஸோ அத்தகைய குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை முன்வைக்காமல், ஜனதா தளத்தினுடன் சுமுகமாகச் செல்வது போன்றுதான் பிரசாரத்தை மேற்கொண்டது. இது ஒருபுறமிருக்க, கடந்த முறை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ-க்கள் வெளியேறி, குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்தே, குமாரசாமி, பா.ஜ.க-மீது கடும் கோபத்திலேயே இருந்துவந்ததுடன், பா.ஜ.க-மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். தேர்தல் களத்தில், ‘பா.ஜ.க 40 சதவிகித ஊழல் ஆட்சி’ என்பதை, மேடைதோறும் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார்.

இதனால், தொங்குநிலை நீடித்தால், அதிருப்தியிலிருக்கும் குமாரசாமி பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிப்பாரா... இல்லை காங்கிரஸுடன் மீண்டும் இணைவாரா என பா.ஜ.க-வும் காங்கிரஸும் குழப்பக்கடலில் மூழ்கியிருக்கின்றன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்குப் பிந்தைய Exit Poll என எந்த சர்வேயாக இருந்தாலும் இவை யூகங்கள்தானே தவிர, இறுதி முடிவு அல்ல. எனவே வரும், 13-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில்தான் தெரியும், மக்களின் மனநிலை என்ன, எந்தக் கட்சி ஆட்சிக்கட்டிலில் அமரும் என. முடிவுகளைக் காண்பதற்குப் பொறுத்திருப்போம் மூன்று நாள்கள்!