Published:Updated:

காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்த பா.ஜ.க! - இது தெலங்கானா சீக்ரெட்

சத்யா கோபாலன்

``தெலங்கானா சட்டமன்றம் இவ்வளவு அழகாக இருக்கையில் இதை விடச் சிறந்தது தேவையா''

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

தற்போதைய இந்திய அரசியலில் பரம எதிர்க்கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் முதலில் அனைவரின் நினைவுக்கு வருவது காங்கிரஸ் - பா.ஜ.க தான். இப்படிப்பட்ட கட்சிகள் ஒன்றாகக் கைகோத்துள்ளன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், இது தெலங்கானாவில் சாத்தியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து காங்கிரஸும், பா.ஜ.கவும் ஒன்றாக இணைந்துள்ளன.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து ஆந்திரா, தெலங்கானா என மாற்றப்பட்டது. தெலங்கானா எனத் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் தற்போது வரை அங்கு சந்திரசேகர ராவ்தான் முதல்வராக ஆட்சியமைத்து வருகிறார். முதல் ஆட்சிக்காலம் முடிய ஆறு மாதங்கள் இருந்த நிலையில் அதற்கு முன்னதாக ஆட்சியைக் கலைத்து, தேர்தல் நடத்தி மீண்டும் முதல்வரானார் சந்திரசேகர ராவ்.

சந்திரசேகர ராவ் அம்மாநில மக்களின் நலனுக்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டுவந்ததின் மூலம் மக்கள் மனதில் அசைக்கமுடியாத இடம் பிடித்துவிட்டார். சமீபத்தில் அவரது திட்டத்தில் உருவான காலேஸ்வரம் அணையை பிற மாநிலங்களும் உற்றுநோக்கி வருகின்றன. அந்த அணை முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் அளவுக்குக் கட்டப்பட்டுள்ளது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

இதைத்தொடர்ந்து தன் அடுத்த கட்ட பணிகளில் இறங்கியுள்ளார் சந்திரசேகர ராவ். தெலங்கானாவில் தற்போது செயல்பட்டு வரும் சட்டமன்றக் கட்டடத்தையும், பழம் பெரும் கட்டடமான எரும் மன்ஸில் (Errum Manzil) கட்டடத்தையும் இடித்துவிட்டு புதிதாக ஒரு கட்டடம் கட்டி அங்கு தெலங்கானா சட்டப்பேரவை செயல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

புதிய சட்டமன்ற கட்டடம் கட்டக் கூடாது என பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று ஹைதராபாத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த இரு கட்சிகளும் இணைந்து சந்திரசேகர ராவின் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

எர்ரம் மன்ஸில்
எர்ரம் மன்ஸில்

இது தொடர்பாகப் பேசியுள்ள தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உட்டம் குமார் ரெட்டி, ``நான் ஐந்து வருடங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்தேன். அதனால் தெலங்கானா சட்டப்பேரவை பற்றி அனைத்தும் எனக்குத் தெரியும். நான் பல மாநிலங்களில் சட்டமன்ற வளாகத்தைப் பார்த்துள்ளேன். தற்போது நாடாளுமன்றத்தையும் பார்த்து வருகிறேன். தற்போது தெலங்கானாவில் உள்ள சட்டமன்றமும், நாடாளுமன்றமும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே உள்ளது. தெலங்கானா சட்டமன்றம் இவ்வளவு அழகாக இருக்கையில் இதை விடச் சிறந்தது தேவையா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரசேகர ராவ் இடிக்கவுள்ளதாகக் கூறப்படும் எர்ரம் மன்ஸில் கட்டடம் 1870-ம் ஆண்டு கட்டப்பட்டது. 150 வருடக் கட்டடத்தை அரசுதான் பாதுகாக்க வேண்டும். அதைவிடுத்து அதை இடிக்க நினைப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதைப்பற்றி சற்றும் கவலைப்படாத சந்திரசேகர ராவ் கடந்த ஜூன் 27-ம் தேதி 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதை எதிர்க்கவே அம்மாநில காங்கிரஸும், பா.ஜ.கவும் இணைந்துள்ளனர்.