Published:Updated:

`மம்தா உங்களுக்கு என்ன ஆனது... வெறுப்பை என்னிடம் காட்டுங்கள்!' - டெல்லியில் நீண்ட உரை கொடுத்த மோடி

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளர்.

மோடி
மோடி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டம் நடந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மோடி தன் உரையில் குடியுரிமை சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்.

போராட்டம்
போராட்டம்

மோடி பேசுகையில், `வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனிச் சிறப்பு. உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் என் மீது வெறுப்பைக் காட்டுங்கள். ஏழைகளின் வீடுகளையும் அவர்களின் தொழில்களையும் அழிக்காதீர்கள். ஏழை மக்களையும் தொழிலாளர்களையும், காவல்துறையினரையும் தாக்குவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்தோம். மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இந்த மசோதா நிறைவேறியது. மக்கள் நாடாளுமன்றத்தை மதிக்க வேண்டும். மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளை நான் மதிக்கிறேன். ஆனால், சில அரசியல் கட்சிகள் வதந்திகளைப் பரப்புகின்றன. குடியுரிமை சட்டத்திருத்தம் இந்திய குடிமகன் யாரையும் பாதிக்காது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. காங்கிரஸ் மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் வதந்திகளைப் பரப்புகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல, மக்களுக்கு குடியுரிமையை வழங்குவதாகும்.
மோடி

தடுப்பு மையங்கள் குறித்து பொய்களைப் பரப்புகின்றன. குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தியாவில் எந்தத் தடுப்பு மையங்களும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல, மக்களுக்கு குடியுரிமையை வழங்குவதாகும்.

நாட்டுக்குள் ஊடுருவ முயல்பவர்கள் தனது அடையாளத்தை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். அகதியாக வருபவர்கள் தன்னுடைய அடையாளத்தை மறைக்க மாட்டார்கள். இது மிகச்சிறிய வித்தியாசம்தான். ஊடுருவியவர்கள்தான் இப்போது வெளியில் வந்து பேசுகிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைப் பேசவில்லை. அவர்களின் உண்மை வெளியில் வரும் என அச்சப்படுகிறார்கள்.

மோடி
மோடி

மம்தா உங்களுக்கு என்ன ஆனது. ஏன் மாறினீர்கள். வங்காள மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஏன் எடுத்தீர்கள். காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நாங்கள் செய்கிறோம். ஓட்டு வங்கி காரணமாக அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. சிலர் தங்கள் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். முதலில் சட்ட வல்லுநர்களிடம் கேளுங்கள் உங்களால் இதைச் செய்ய முடியுமா என்று. ஜனநாயக நாட்டில் மக்களின் கைகளில் குச்சிகளும் கற்களும் இருப்பது என்னைக் காயப்படுத்துகிறது.

இஸ்லாம் நாடுகள் என்னை ஆதரிப்பது காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் என்னை ஆதரித்தால் இஸ்லாம் மக்களை எப்படிப் பயமுறுத்த முடியும் என காங்கிரஸ் கட்சியினர் அச்சமடைந்துள்ளனர். இந்திய இளைஞர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். வதந்திகளை நம்பாதீர்கள். வதந்திகள் என்னை வருத்தமடையச் செய்கின்றன” எனக் கூறினார்.