Published:Updated:

`மத்தியில் மோடி செய்வதை, கேரளத்தில் பினராயி செய்கிறார்!’ - முகுல் வாஸ்னிக் காட்டம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக்

மத்தியில் மோடி செய்வதை கேரளத்தில் பினராயி விஜயன் செய்கிறார் என்றார் 'ஸ்பீக் அப் கேரளா' போராட்டத்தைத் தொடக்கி வைத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக்.

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் ஆகியோரிடம் என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன் இந்த வழக்கில் சிக்கியிருப்பது அரசியல் ரீதியாக புயலைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாகத் தலைமைச் செயலக சிசிடிவி கேமரா பதிவுகளை என்.ஐ.ஏ ஆய்வுசெய்து வருகிறது. இதற்கிடையில் பினராயி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

கடந்த மாதம் போராட்டம் அறிவித்தது எதிர்க்கட்சியான காங்கிரஸ். ஆனால், கொரோனா காரணமாகப் போராட்டத்தை மாற்றி வைத்தது. இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கு மற்றும் அரசின் ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை கேட்டும், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் `ஸ்பீக் அப் கேரளா’ என்ற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று நடந்தது. காங்கிரஸ் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா
போராட்டத்தில் கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா

இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் முகுல் வாஸ்னிக் பேசுகையில், ``பினராயி விஜயன் கேரளத்தின் மோடி போன்று செயல்படுகிறார். மத்தியில் மோடி செய்வதைக் கேரளத்தில் பினராயி விஜயன் செய்கிறார்" என்றார். திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் ஹவுஸில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா போராட்டம் நடத்தினார்.

போராட்டத்தில் ரமேஷ் சென்னித்தலா பேசும்போது, ``விசாரணை தன்னை நோக்கி திரும்பும் என்பதால் முதல்வர் பினராயி விஜயன் விஜிலென்ஸ் விசாரணைக்கு அனுமதி அளிக்கவில்லை. இன்னும் இரண்டு நாள்களில் விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடாமல் இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். கேரளத்தின் நம்பிக்கையைத் தகர்த்த அரசு இது. நான்கு ஆண்டு ஆட்சியில் பல ஊழல்கள் நடந்துள்ளன. சொந்தக்காரர்களுக்கும் கட்சியினருக்கும் பின் வாசல் வழியாகப் பணி நியமனம் வழங்குகிறார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

தலைமைச் செயலகம் வரை வந்த என்.ஐ.ஏ எப்போது வேண்டுமானாலும் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லலாம். இத்தனை ஆண்டுகளாக முதல்வரின் நாக்காகவும் கண்ணாகவும் இருந்த முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் தங்கம் கடத்தும் கும்பலுக்கு உதவி செய்திருக்கிறார். நாட்டை ஆள்பவர் சொந்த அலுவலகத்தை ஆளமுடியவில்லை என்றால் இனியும் அதிகாரத்தில் தொடர அவருக்கு தகுதி இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு