Published:Updated:

`ராஜீவ்காந்தி புகழை இருட்டடிப்பு செய்கிறார்!’ - புதுவை சிற்றுண்டித் திட்ட சர்ச்சை

புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்
புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

``மாப்பிள்ளை அவர்தான். ஆனால், அவர் அணிந்திருக்கும் சட்டை என்னோடது என்பதைப் போல ராஜீவ்காந்தி பெயரில் இருக்கும் திட்டத்துக்கு கருணாநிதி பெயர் வைத்திருக்கிறார்."

புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதல்வர் நாராயணசாமியின் அறிவிப்பு காங்கிரஸ், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினரிடையே சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

2002-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்த லட்சுமி நாராயணன் ஆகியோரின் கூட்டு முயற்சியாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலையில் பால் மற்றும் பிஸ்கட் வழங்கும் சிற்றுண்டித் திட்டத்தைக் கொண்டு வந்தனர். மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பெயரில் இந்தியாவிலேயே முதல்முறையாகச் செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை, அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாகாந்தி புதுச்சேரியில் துவக்கி வைத்தார். அதன்பிறகு புதுச்சேரி அரசில் நிலவிய கடும் நிதிப்பற்றக்குறை காரணமாக 2013-ம் ஆண்டில் அந்தத் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது. சில மாதங்கள் கழித்து பால் மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது.

புதுச்சேரி
புதுச்சேரி

இந்நிலையில்தான், நேற்று முன்தினம் புதுச்சேரி சட்டப்பேரவையின் 2020-21 நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவ மாணவியருக்குத் தற்போது காலையில் பால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம் என்ற பெயரில் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி எனச் சிற்றுண்டி வழங்கப்படும்” என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புதான் தற்போதைய சர்ச்சைக்குக் காரணம். 2002-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்தவரும் தற்போது முதல்வர் நாராயணசாமியின் நாடாளுமன்றச் செயலராக இருக்கும் லட்சுமி நாராயணன், தனது முகநூல் பக்கத்தில், `நான் கல்வி அமைச்சராக இருந்தபோது 2002-ல் திருமதி சோனியாகாந்தி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி சிற்றுண்டித் திட்டம், இன்று முடக்கப்பட்டுவிட்டது’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

 ``மாப்பிள்ளை அவர்தான். ஆனால், அவர் அணிந்திருக்கும் சட்டை என்னோடது என்பதைப் போல ராஜீவ்காந்தி பெயரில் இருக்கும் திட்டத்துக்கு கருணாநிதி பெயர் வைத்திருக்கிறார் நாராயணசாமி. அவர், காங்கிரஸ் கட்சியின் முதல்வரா அல்லது தி.மு.க தொண்டரா என்று தெரியவில்லை. தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவில்தான் நாராயணசாமி முதல்வராக இருக்கிறார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், இங்கிருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இவரது ஆட்சியை அடிக்கடி விமர்சித்து வருகிறார்கள். அதனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும், அடுத்த தேர்தலிலும் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் தலைவர் ராஜீவ்காந்தி பெயரில் இருந்த திட்டத்தை கலைஞர் பெயரில் அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் முதல்வர் என்பதைக்கூட மறந்து தி.மு.க தொண்டனைப்போல அக்கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்” என்று ஃபேஸ்புக்கில் கொந்தளித்து வருகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

புதுச்சேரி: `149 பக்க பட்ஜெட்; 3 மணிநேர உரை' - கிரண் பேடிக்கு அதிர்ச்சி கொடுத்த நாராயணசாமி

இதுகுறித்து நேற்று பேரவையில் பேசிய அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ அன்பழகன்,``புதுச்சேரி மாநில முதல்வர் எப்போதும் ஒரு மாநிலத்தின் முதல்வராகச் செயல்படாமல், அரசியல்வாதி போல் செயல்பட்டு, இந்த மாநில வளர்ச்சியையே கெடுத்து சீரழித்துவிட்டார். அந்த வரிசையில் தற்போது, தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க-விற்கு கூஜா தூக்க அமரர் ராஜீவ் காந்தியின் புகழையே அடமானம் வைத்துள்ளார். தமிழ் மக்களின் நன்மைக்காக வாழ்ந்து மறைந்தவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா. அவர் மறைந்த பிறகு அவரின் பெயர் நிலைத்து இருக்க புதுச்சேரி அரசின் சார்பில் அவரது திருவுருவ சிலையும், வீதி அல்லது அரசு கட்டிடங்களுக்கோ, ஏதேனும் ஒரு அரசு திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் கோரிக்கை வைத்து வருகிறோம்.

இதே சட்டசபையில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த முதல்வர், இன்றுவரை எதையும் செய்யவில்லை. ஆனால், அவர்களின் மறைவிற்கு பிறகு, மரணம் அடைந்த தி.மு.க தலைவருக்கு சிலை அறிவித்து, அதற்கான கமிட்டியும் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கையும், புதுச்சேரியிலும், காரைக்காலில் உள்ள இரண்டு வீதிகளுக்கு அவரது பெயரையும் புதுச்சேரி அரசு சூட்டியிருக்கிறது. 2002-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது மாணவ, மாணவியர்களுக்கு பால் மற்றும் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சோனியா காந்தியை வைத்து அமரர் ராஜீவ்காந்தி பெயரால் துவக்கி வைத்தனர். தற்போது, அதே திட்டத்தை டாக்டர் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்து திட்டம் என அறிவித்துள்ளீர்கள். அமரர் ராஜீவ்காந்தி பெயரை நீக்கிவிட்டு, கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவதை மானமுள்ள எந்த காங்கிரஸ்காரரும் மன்னிக்க மாட்டார்கள்” என்று கூறி சக எம்.எல்.ஏ-க்களுடன் வெளிநடப்பு செய்தார்.

புதுச்சேரி எம்.எல்.ஏ-க்கள்
புதுச்சேரி எம்.எல்.ஏ-க்கள்

இந்நிலையில், மறைந்த ராஜீவ்காந்தியின் புகழை முதல்வர் நாராயணசாமி இருட்டடிப்பு செய்கிறார் என்று புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி சிலையின் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கையில் தீப்பந்தம் ஏற்றி நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்ஜெட் புத்தகத்தில் 13-வது பக்கத்தில் 11-வது வரியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி பால் உற்பத்தி மேம்பாட்டு திட்டம், மேம்படுத்தப்பட்ட ராஜீவ்காந்தி காலை சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்து திட்டம் என்று தலைப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதே பட்ஜெட் புத்தகத்தின் 45-வது பக்கத்தில், இதே பட்ஜெட்டில் ராஜீவ்காந்தி பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை மாற்றி மேம்படுத்தப்பட்ட டாக்டர் கலைஞர் கருணாநிதி காலைச் சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்து திட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததுதான் `ஹைலைட்’.

புதுச்சேரி:`ராஜீவ்காந்தி திட்டத்துக்கு கருணாநிதி பெயர்?’- கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்
அடுத்த கட்டுரைக்கு