Published:Updated:

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்... சைலன்ட் தி.மு.க! - மக்கள் நீதி மய்யத்தின் ரியாக்‌ஷன் என்ன?

காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம்
காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம்

காங்கிரஸ் தலைவர்கள் கமலைத் தொடர்ந்து கூட்டணிக்கு அழைப்பதற்குப் பின்னாலுள்ள காரணம் என்ன?

``கமல்ஹாசன் மதச்சார்பு இல்லை என்று பேசிவருகிறார். அவர் தனியாகப் பேசுவதைவிட, ஏற்கெனவே மதச்சார்பின்மை கூட்டணியாக இருக்கும் எங்கள் கூட்டணிக்கு வந்து அவர் பேச வேண்டும். எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன்'' என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதேபோல. கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பரமக்குடியில், ``கமல் எங்கள் கூட்டணிக்கு வந்தால்தான் வெல்ல முடியும்'' எனக் கருத்து தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் கமலுக்கு அழைப்பு விடுத்திருந்தார் கே.எஸ்.அழகிரி. ஆனால், அந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்தே களமிறங்கியது. இந்தநிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அழைப்புவிடுக்கத் தொடங்கியிருக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. தற்போதுவரைஅந்தக் கூட்டணி தொடர்கிறது. கிட்டத்தட்ட பத்துக் கட்சிகள் தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே இருக்கின்றன. இந்தநிலையில், கமலைத் தொடர்ந்து கூட்டணிக்கு அழைப்பதற்குப் பின்னாலுள்ள காரணம் என்ன?

``தி.மு.க கூட்டணியில் தங்களது பேரத்தை வலிமைப்படுத்துவதற்காக, கமலைவைத்து காங்கிரஸ் கட்சியினர் காய்நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள்... அதாவது, `எங்களுக்குக் குறைவான சீட்டுகளை ஒதுக்கினால் நாங்கள் கமலுடன் சென்றுவிடுவோம்’ என தி.மு.க-வை மறைமுகமாக மிரட்டுவதே இந்த அழைப்புக்குக் காரணம். கூட்டணிக்கு அழைப்பதென்றால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மட்டுமே அத்தகைய குரலைத் திரும்பத் திரும்ப உயர்த்துவதால்தான் சந்தேகம் எழுகிறது'' என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கியமான காரணம், ``புதுச்சேரில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க போர்க்கொடி உயர்த்திருப்பது தவிர வேறொன்றும் இல்லை'' என்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

இந்தநிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி செல்வப்பெருந்தகையிடம் பேசினோம்.

``மதச்சார்பற்ற அரசியலில் கமல் உறுதியாக இருக்கிறார். அப்படியிருக்கும்போது அவர் எங்கள் கூட்டணியில் இருந்தால் சரியாக இருக்கும் என்கிற கருத்தைத்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சொல்லிவருகிறார்கள். கூட்டணிக்கு வருவது குறித்த முடிவை கமல்தான் எடுக்க வேண்டும். காங்கிரஸ் தற்போதிருக்கும் கூட்டணியில்தான் வரும் தேர்தலிலும் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை ''என்கிறார் அவர்.

இந்தநிலையில், காங்கிரஸின் இந்த அழைப்பை தி.மு.க எப்படிப் பார்க்கிறது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனுஷ்யபுத்திரனிடம் பேசினோம்.

``ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும். கமல் எங்கள் கூட்டணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கலாம். ஆனால், அவர்கள் நினைப்பதை அப்படியே கூட்டணிக் கட்சிகளும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கூட்டணி இறுதி செய்யப்படும் வரை இது போன்ற கருத்துகள் வரத்தான் செய்யும். அதேவேளையில், 2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக் கூட்டணி. அதே பலத்தோடும், மனவுறுதியுடனும் தொடர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. கமல் எங்கள் கூட்டணிக்கு வருவது பற்றி எங்கள் கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
Jerome

இந்தநிலையில், 'தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு வரவேண்டும் என்கிற காங்கிரஸின் அழைப்பை எப்படிப் பார்க்கிறீர்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்,

''இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க நாங்கள் விரும்புகிறோம். அதற்கு, எங்களுடன் காங்கிரஸ் கட்சி வருவதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகளை மட்டுமல்ல, தி.மு.க-வில் இருக்கும் நல்லவர்களையும் எங்கள் கூட்டணிக்கு அழைக்கிறோம்.

`தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்?' - விளக்கும் கமீலா நாசர்

காங்கிரஸின் இந்த அழைப்பை தி.மு.க-வுக்கு எதிரான ஒரு சமிக்ஞையாகவே பார்க்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எங்கள் தலைவர் ஆகியோர் சுற்றுப்பயணம் சென்றனர். அதில் யாருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.
மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.

ஏதோவொரு கூட்டணிக்குப் போய், அவர்கள் கொடுக்கும் இடங்களை வாங்கி தேர்தலில் நிற்க நாங்கள் விரும்பவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வர உதவுவதற்காகவா நாங்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறோம்... நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறோம். வெற்றியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கிறோம். எங்கள் தலைவரை முதலமைச்சர் ஆக்க விரும்புகிறோம்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு