காங்கிரஸ் கமிட்டி முன்னதாக அறிவித்தபடியே, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், காங்கிரஸின் மூன்று நாள் சிந்தனை அமர்வுக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வின் தொடக்க நாளான இன்று காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகப் பேசிய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ``நாடு எதிர்கொண்டுவரும் கடும் பிரச்னைகளை மூடி மறைக்க இந்த மோடி அரசாங்கம், மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீது மதவெறியைப் பரப்புகிறது.

நாட்டை திசைதிருப்ப நாளும் ஒரு புதிய இந்து-முஸ்லிம் சர்ச்சை உருவாக்கப்படுகிறது. மேலும், இந்து-முஸ்லிம் பிரச்னையை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க தனது தேர்தல் வெற்றியை தேடிக்கொண்டிருக்கிறது. புல்டோசர், ஒலிபெருக்கி, கோயில் Vs மசூதி, தெருக்களுக்குப் பெயர் மாற்றம் செய்தல், உணவு மற்றும் ஆடை பழக்கவழக்கங்களில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றைக்கொண்டு வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் தேர்தல்கள் இனி நடக்காது" என பா.ஜ.க-வைக் கடுமையாகச் சாடினார்.