Election bannerElection banner
Published:Updated:

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி; கே.எஸ்.அழகிரி கண்ணீர் - காங்கிரஸை அவமதித்ததா தி.மு.க? - நிலவரம் என்ன?

காங்கிரஸ்
காங்கிரஸ்

``குறைவான தொகுதிகளை ஒதுக்குவதாகப் பேசுவதுகூடப் பரவாயில்லை. பேச்சுவார்த்தையின்போது தி.மு.க நம்மை நடத்தும் விதம்தான் வேதனையாக இருக்கிறது’’ என கே.எஸ்.அழகிரி பேசியிருக்கிறார்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை கன்னித்தீவு கதையைவிடப் பெரியதாக நீண்டுகொண்டே செல்கிறது. காங்கிரஸ் 54 தொகுதிகள் வேண்டும் என ஆரம்பிக்க, தி.மு.க 12 தொகுதிகள், 18 தொகுதிகள் எனத் தொடங்க, தொகுதி எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தை ஓர் உடன்பாட்டுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. குறைந்தது கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களையாவது கேட்டுப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சீனியர் உறுப்பினர்களிடம் கறார் காட்டியிருக்கிறார்.

கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் கூட்டணியில் கூடுதலாகக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் சார்பில் 41 இடங்கள் அல்லது அதற்கு மேல் கேட்டுப் பெற்றால் மற்ற கட்சிகளுக்கான ஒதுக்கீட்டில் சிக்கல் வரும் என்ற நடைமுறைச் சிக்கல்களை சீனியர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அதிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு காங்கிரஸ் தலைமை 30 தொகுதிகள் ஒதுக்கினால் போதும் என்று இறங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

தி.மு.க நிர்வாகிகள்
தி.மு.க நிர்வாகிகள்

தி.மு.க தலைமை 20 முதல் 24 இடங்களுக்குள்தான் ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்கும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

சென்னை சத்தியமூர்த்திபவனில் கடந்த இரண்டு நாள்களாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி , காங்கிரஸ் கட்சியை தி.மு.க நடத்தும்விதம் குறித்துக் கண்ணீர்விட்டார். இனி காங்கிரஸ் என்ன செய்யவிருக்கிறது... கூட்டணியிலிருந்து விலகி மூன்றாவது அணியை அமைக்கும் திட்டமா... கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் அவமானப்படுத்தப்படுகிறதா... கே.எஸ்.அழகிரியின் கண்ணீருக்கு காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: காங்கிரஸ் கேட்பது எத்தனை... தி.மு.க தர நினைப்பது எத்தனை?

``தி.மு.க உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே இருக்கிறது. கட்சி மேலிடம் குறைந்தது 30 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. ஆனால், தி.மு.க தரப்பிலோ 21 சட்டமன்றத் தொகுதிகளோடு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கித் தருகிறோம். அதற்குமேல் முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கிவிட்டார்கள், பா.ஜ.க-வுக்கு கிட்டத்தட்ட அவர்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்குவதாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தி.மு.க கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான். அப்படியிருக்கும்போது பா.ம.க-வைவிட குறைந்தது ஒரு தொகுதியாவது கூடுதலாகக் கொடுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் துரைமுருகன் உள்ளிட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ள தி.மு.க தலைவர்கள்,`கடந்த முறை எத்தனை சீட் வாங்குனீங்க, எத்தனைல ஜெயிச்சீங்க, இதையெல்லாம் யோசிச்சுப் பேசுங்க’ என்று நம்மைக் கேலியாகப் பேசுகிறார்கள். அதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’’ என்றவரின் குரல் தழுதழுத்தது. பின் சுதாரித்துக்கொண்டு , ``நிச்சயம் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்று இந்தத் தேர்தலில் வெற்று பெறுவோம் என்றார் அழகிரி’’ என்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி
Arun.K

கே.எஸ்.அழகிரியின் குரல் உடைவதைப் பார்த்த தொண்டர்கள் ``இந்த அளவுக்கு அவமானப்பட்டு தி.மு.க கூட்டணியில் நீடிக்க வேண்டிய தேவை இல்லை. நாம் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று உறுதியாகத் தெரிந்த, 40 முதல் 50 வரையிலான தொகுதிகளில் தனித்துப்போட்டியிடுவோம். குறைந்தது 20 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் கௌரவமான எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவோம். அப்போது தெரியும் தி.மு.க-வுக்கு நம்முடைய அருமை” என்று கொதித்திருக்கிறார்கள். ``கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. அது இறுதியாகும் வரை நாம் அமைதியாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆறுதல்படுத்தியிருக்கிறார் அழகிரி.

கண்ணீருக்கு இது ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு காரணம் மன உளைச்சல் என்கின்றனர் அழகிரிக்கு நெருக்கமானவர்கள். ``தான் தலைவராக இருக்கும்போது நடக்கும் தேர்தலில் கௌரவமான இடங்களை வாங்கிக் கொடுத்து கூடுதல் இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் கே.எஸ்.அழகிரியின் விருப்பம். ஆனால், நடப்பதெல்லாம் அவர் நினைப்புக்கு எதிராகவே இருக்கின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகூட தேசியத் தலைவர்கள் மட்டத்திலேயே நடக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சியிலும் தனக்கு எந்த மரியாதையும் இல்லை என்று பெரிய மன உளைச்சலில் இருக்கிறார்.

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

தன்னுடைய காலத்தில் ஒரு கூட்டணியைக்கூட இறுதி செய்ய முடியாத நிலையில்தான் தன்னுடைய நிர்வாகத் திறமை இருக்கிறது என்று மேலிடத்தில் தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பார்கள் என்றும் வேதனையில் இருக்கிறார். அந்த வேதனைதான் தொண்டர்களைப் பார்த்ததும் கண்ணீராக வெளிவந்துவிட்டது” என்றனர்.

தி.மு.க தரப்பில் இது பற்றிப் பேசினோம்,``தி.மு.க இந்த சட்டமன்றத் தேர்தலை சந்திக்க மிகப்பெரிய அளவில் திட்டங்களை வகுத்திருக்கிறது. தொகுதிவாரியாக வெற்றி வாய்ப்பு யாருக்கு, எத்தனை சதவிகிதத்தில் வாக்குகள் உள்ளன போன்ற டேட்டா எங்கள் கையில் இருக்கிறது. கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சியுடனும் நடக்கும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை அந்த டேட்டா அடிப்படையில்தான் நடக்கிறது. அதன்படிதான் தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது.

காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தையையும் அப்படித்தான் நடத்திக்கொண்டிருக்கிறோம். அதை அவர்கள் அவமதிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கேட்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் குடும்பத்துக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று சிவகங்கை தொகுதியில் கே.எஸ்.அழகிரியை போட்டியிடச் சொல்லி ராகுல் காந்தியே மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ஆனால், அப்போது வேண்டாம் எனச் சொல்லிவிட்டு இப்போது ராஜ்யசபா சீட் தனக்கு வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயம் என நீங்களே சொல்லுங்கள்” என்கின்றனர்.

`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி
`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி

மேலும், ``தங்களின் தகுதி தெரிந்து ஆசைப்பட வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கான இடம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதை நாங்கள் சொல்லத் தேவையில்லை. ஆனால், அவர்களுக்குத்தான் அது இன்னும் புரியவில்லை. காங்கிரஸ், தங்களின் தகுதியை உணர்ந்திருந்தால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போதோ இறுதி செய்யப்பட்டிருக்கும்” என்றனர்.

காங்கிரஸ், கூட்டணியைவிட்டு விலகுகிறதா அல்லது கொடுக்கும் தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு கூட்டணியில் தொடர்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு