Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: `நாங்க என்ன சொல்றோம்னா..?’ - காங்கிரஸ், தி.மு.க Vs பா.ஜ.க

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்

டீசல், பெட்ரோல் விலை உயர்வு, போக்குவரத்தில் தொடங்கி ஒவ்வொரு பொருளின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது... இது தொடர்பாக காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்..?

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

கோபண்ணா, காங்கிரஸ் மாநில நிர்வாகி

``2014-ல் சர்வதேசச் சந்தையில் 110 டாலராக கச்சா எண்ணெய் விலை இருந்தபோது காங்கிரஸ் அரசால் 71 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுக்க முடிந்தது. ஆனால், தற்போது விலை குறைந்து 68 டாலராக இருக்கும்போதும் பா.ஜ.க அரசு லிட்டர் 100 ரூபாய்க்கு உயர்த்தி உள்ளது. மேலும் நாட்டில் 138 மாவட்டங்களில் 100 ரூபாய்க்கும் அதிகமாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் பெருந் தொற்றால் பொருளாதார பாதிப்பால் அவதிப்படும் இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளனர்.

கோபண்ணா
கோபண்ணா

விலை உயர்வுக்குக் காரணமாக இருப்பது கலால்வரிதான். மத்திய அரசு தன்னுடைய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகப்படுத்தி மக்களை வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கெனவே கடுமையான பாதிப்பிலிருக்கும் மக்கள் மீது மேலும் சுமையை வைப்பது மக்கள் விரோத நடவடிக்கை. மக்கள் பாதிக்கப்படாத வகையில் கலால்வரியைக் குறைக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதுமுள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 4,800 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. நெடுஞ்சாலைகளில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களைத் தவிர மக்கள் நடமாட்டம் இருக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மக்களுடைய கோபத்தைக் குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்.''

ரவீந்திரன், தி.மு.க

``காங்கிரஸின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிர்ப்பு போராட்டம் வரவேற்கத்தக்கது. கொரோனா காலகட்டம் என்பதால் சட்ட விதிகளின்படி நடந்தது. மேலும், இந்திய மக்களின் உணர்வை காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். 130 கோடி மக்களில் ஒரு சதவிகித பணக்காரர்களைத் தவிர மீதமுள்ள மக்கள் அனைவரையும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக பாதித்துவருகிறது.

டீசல், பெட்ரோல் விலை உயர்வு, போக்குவரத்தில் தொடங்கி ஒவ்வொரு பொருளின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது. திமுக பதவி ஏற்று 33 நாள்களைக் கடந்துள்ளது. இந்தக் குறுகிய காலகட்டத்தில் மக்களுக்கு என்னவெல்லாம் சிறப்பாகக் கொடுக்க முடியுமோ அவற்றையெல்லாம் அரசு அளித்துவருகிறது. கொரோனா காலகட்டத்தில் உதவித்தொகை தொடங்கி படிப்படியாகத் திட்டங்களைச் செய்து வருகிறோம். எனவே, அடுத்தகட்டமாக பெட்ரோல் விலையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

பெட்ரோல் நிலையம்
பெட்ரோல் நிலையம்

ஒன்றிய அரசால் கண்டிப்பாக இன்றைய சூழ்நிலையில் குறைந்தபட்சம் லிட்டருக்கு 20 ரூபாய் வரைக்கும் குறைக்க முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு நிறுவனங்கள்தான் காரணம் என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைக்கும்போது மத்திய அரசு கலால்வரியைக் குறைக்காமல் இருப்பதே விலை உயர்வுக்குக் காரணம். 23 கோடிப் பேர் இந்த பா.ஜ.க அரசு ஆட்சி காலத்தில் வறுமை கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும் என உறுதியாக எங்களால் சொல்ல முடியும். காரணம் பருப்பு ஏலம் நடந்தபோது கடந்த ஆட்சியில் 143 ரூபாய்க்கு வாங்கியது அதிமுக அரசு. ஆனால், அதே தரமுள்ள பருப்பை தற்போது 86 ரூபாய்க்கு வாங்கி 115 கோடியை மிச்சம் செய்துள்ளோம். மேலும், முன்களப் பணியாளர்களான மருத்துவர், செவிலியர்களுக்கான உணவகங்கள், விடுதிக்காக ஒதுக்கிய நிதியில் முன்பு இருந்த தரத்தைவிட சிறப்பாக அமைத்து மாதம் 10 கோடி ரூபாய் சேமித்துள்ளோம்.

முக்கியமாக நான் குறிப்பிட நினைப்பது, அ.தி.மு.க ஆட்சியில் மக்களிடமிருந்து வரி வசூல் முறையாகச் செய்தார்கள். ஆனால் அது தமிழக கஜானாவுக்கு முழுமையாக வந்து சேரவில்லை. 10.5 சதவிகித வரி குறைந்துகொண்டே இருந்தது.

நம் நாட்டின் பட்ஜெட் இரண்டரை லட்சம் கோடி என வைத்துக்கொண்டாலும், இந்த 10.5% வரி கஜானாவுக்கு முறையாக வராமல் போனதால், 25,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அந்தப் பணம் எங்கேயோ லீக்கேஜ் ஆகியுள்ளது. அதை நாங்கள் சரியான முறையில் கஜானாவுக்குக் கொண்டு சேர்ப்போம். இதன் மூலம் இந்த அரசால் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முடியும். மக்களுக்கு வரியை அதிகரிக்காமல் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் வரி விகிதத்தை வைத்து 25,000 கோடியை உள்ளே கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, முனைப்புடன் செயல்பட்டுவரும் திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை கூடிய விரைவில் குறைக்கும்.”

நாராயணன் திருப்பதி, பா.ஜ.க

``கடந்த 2014 ஆகஸ்ட் முதல் 2016 வரை சுமார் 15-20 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த விலைக் குறைப்பு சமயத்தில் மக்களுக்குச் சாதகமாகப் பெருநிறுவனங்கள் கொடுக்கவில்லை என்பதால், மத்திய அரசு இந்த கலால்வரியை விதித்தது. நாட்டு மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கலால்வரி அவசியமாக இருப்பதால், மத்திய அரசு கலால்வரியைத் தேவைக்கு ஏற்றவாறு விதித்துவருகிறது. இதன் மூலம்தான் கட்டடத் தொழிலை பெருக்கியது. மேலும், கிராமங்களில் 1,76,000 கிலோமீட்டருக்கு சாலை வசதி அமைத்துக் கொடுத்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் பெட்ரோலின் மீதுள்ள கலால்வரி உயர்ந்த காரணத்தால் அதன் மீதான மதிப்புக் கூட்டு வரி மாநிலங்களில் உயர்ந்தது. எனவே, தவிர்க்க முடியாத காரணத்தால்தான் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் 2015-16-ல் இருந்து கச்சா எண்ணெய் விலைக்கும் இப்போதுள்ள விலைக்கும் வித்தியாசம் உள்ளது. இந்தக் காரணங்களால்தான் பெட்ரோல் டீசல், விலை தற்போது உயர்ந்துள்ளது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்தியாவின் வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டிய இடத்தில் மத்திய அரசு உள்ளது. மேலும், அரசாங்கத்துக்கான செலவும் அதிகப்படியாக உள்ளது. எனவே அரசால் இந்த கலால்வரியை எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆகையால் தற்போது மின் வாகனங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் இல்லாத நிலைமை வரப்போகிறது. அந்த நிலைமையை இந்தியாவிலும் கொண்டு வர முயல்வோம். பெட்ரோல், டீசலில் ஏற்படும் மாசால் புவிவெப்பமயமாகிறது. பூமி வெப்பமயமாதலால் பருவநிலை மாற்றம் உருவாகிறது. இதன் காரணமாகத்தான் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்புகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படுகிறது.

இதன் அடிப்படையில்தான் பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைப்பதற்கான ஒப்பந்தங்களில் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. எனவே, அனைத்து நாடுகளிலும் பெட்ரோல், டீசலின் வரியை உயர்த்தி அதன் விலையை அதிகப்படியான விலையில் வைத்து நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். வளர்ச்சியடையாத நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோலின் விலை இன்னும் குறைவாகத்தான் உள்ளது. இங்கிலாந்தில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 140 ரூபாய். 175 நாடுகளில் பெட்ரோல் விலையில் இந்தியா 86-வது (விலை உயர்வில் ) நாடாகத்தான் உள்ளது.

ரூ.100.17... தமிழ்நாட்டிலும் `செஞ்சுரி' அடித்த பெட்ரோல் விலை - எந்த மாவட்டத்தில் தெரியுமா?!

விலை உயர்வு என்று சொல்வதைவிட வரி வகுப்புக்கான பல்வேறு காரணங்கள் இதில் உள்ளன என்பதைப் பலமுறை சொல்கிறோம். காங்கிரஸ் அரசுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின்போது அனைத்து நாடுகளும் கச்சா எண்ணெய் தயாரிப்பை நிறுத்தியபோதும் நம்மிடம் ஒன்பது மடங்கு சேமிப்பு இருந்தது. மேலும் கச்சா எண்ணெயிலும் கூடிய விரைவில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.”

அடுத்த கட்டுரைக்கு