2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2019, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாமை குறிவைத்து தகர்த்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், ``பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக மத்தியிலிருக்கும் பா.ஜ.க அரசு கூறினாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பல பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும் கூறுவார்கள். ஆனால், அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை" என பா.ஜ.க அரசை சாடியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்தியப் பிரதேச பா.ஜ.க முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ``மீண்டும் திக்விஜய் சிங், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரத்தைக் கேட்டிருக்கிறார். சில சமயங்களில் ராமர் இருந்ததற்கான ஆதாரத்தையும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததற்கான ஆதாரத்தையும் காங்கிரஸ் கேட்கிறதே இது தேசபக்தியல்ல.
காங்கிரஸின் டி.என்.ஏ பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. திக்விஜய் சிங் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குலைக்கும் பாவத்தைச் செய்கிறார். பாகிஸ்தானுடன் அவர் நிற்பதாகக் காட்டுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ என்ன மாதிரியான யாத்திரை என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.