Published:Updated:

காங்கிரஸை ‘கை’ தூக்கிவிடுமா சிந்தனை அமர்வு மாநாடு?

ராகுல் காந்தி, சோனியா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``மாநிலக் கட்சிகளுக்குச் சித்தாந்தங்கள் கிடையாது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து மாநிலக் கட்சிகளால் போரிட முடியாது.

காங்கிரஸை ‘கை’ தூக்கிவிடுமா சிந்தனை அமர்வு மாநாடு?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``மாநிலக் கட்சிகளுக்குச் சித்தாந்தங்கள் கிடையாது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து மாநிலக் கட்சிகளால் போரிட முடியாது.

Published:Updated:
ராகுல் காந்தி, சோனியா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ஆட்சிசெய்த காங்கிரஸ், இப்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் என இரு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியிலிருக்கிறது. பல மாநிலங்களில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற 19 சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. குறிப்பாக, கைவசமிருந்த பஞ்சாப் மாநிலத்தையும் புதுவரவான ஆம் ஆத்மியிடம் கோட்டைவிட்டிருக்கிறது. தத்தளித்துக் கொண்டிருக்கும் கட்சியை மீட்டெடுக்க ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில், மே 13 முதல் 15 வரை `சிந்தனை அமர்வு மாநாடு’ ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. இந்தியா முழுவதுமிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், தமிழ் நாட்டிலிருந்து கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, செல்லக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டைப் பற்றிய முழுமையான அலசல்கள் இங்கே...

முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இளைஞர்களை காங்கிரஸ் பக்கம் இழுக்க, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி போட்டியிடவிருக்கும் மொத்தத் தொகுதிகளில் சரி பாதியை, 50 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஒதுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. `ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு மட்டுமே என்ற விதி கொண்டுவரப்படும்’ என்றும், `ஒருவர் கட்சிப் பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. `இளைஞரணித் தலைவர்கள், அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி வேலை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதிருப்தியிலிருக்கும் தலைவர்களைச் சரிசெய்வது குறித்தும், எதிர்காலத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸை ‘கை’ தூக்கிவிடுமா சிந்தனை அமர்வு மாநாடு?

காமராஜரின் கே-பிளானும் சிந்தனை மாநாடும்!

1960-களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அப்போது ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் தனது பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார். `நாடு முழுவதுமுள்ள மூத்த தலைவர்கள், தங்களது பதவிகளை இளைஞர்களிடம் கொடுத்துவிட்டு, கட்சிப் பணியாற்றச் செல்ல வேண்டும்’ என்ற தனது கே-பிளானை நேருவிடம் முன்வைத்தார் காமராஜர். அதை நேருவும் ஏற்றுக்கொண்டார். அதன்படி லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் உள்ளிட்டோர் பதவிகளைத் துறந்து, கட்சிப் பணியாற்றச் சென்றனர். விளைவு, லட்சக்கணக்கான இளைஞர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பினர். நெருக்கடிகளிலிருந்து மீண்டுவந்தது காங்கிரஸ். கிட்டத்தட்ட இந்த ‘சிந்தனை அமர்வு’ மாநாட்டிலும் இளைஞர்களை மையப்படுத்தியே விவாதங்களும் தீர்மானங்களும் அமைந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்கு காங்கிரஸிலிருக்கும் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், இளைய தலைமுறையினருக்கு வழிவிடுவார்களா என்பது கேள்விக்குறியே!

இந்த மாநாடு குறித்து விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, ``காங்கிரஸ் கட்சி எங்கே சறுக்கியது என்பது குறித்தோ, கட்சித் தலைமைப் பதவியில் காந்தி குடும்பமே தொடர்வது குறித்தோ அங்கே வாய் திறக்கப்படவில்லை’’ என்றிருக்கிறார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சில மூத்த நிர்வாகிகள், ``எப்போதுமே தீர்மானங்களை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி சொதப்பிவிடும். எனவே, சரியான முறையில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலே நிர்வாகிகள் மத்தியில் நம்பிக்கை பிறக்கும். கட்சியின் பிரதான பிரச்னையாக இருக்கும் உட்கட்சிப்பூசல்கள் பற்றி இந்த மாநாட்டில் எந்தவொரு முடிவும் எட்டப்படாதது பெரும் குறை’’ என்று புலம்புகிறார்கள்.

ராகுலின் சர்ச்சைப் பேச்சு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``மாநிலக் கட்சிகளுக்குச் சித்தாந்தங்கள் கிடையாது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து மாநிலக் கட்சிகளால் போரிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே அது சாத்தியம்” என்று மாநாட்டில் பேசியது மாநிலக் கட்சிகளைக் கோபமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணியி லிருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள்கூட ராகுலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ``பல மாநிலங்களில், மாநிலக் கட்சிகளால்தான் பிழைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். 2004 முதல் 2014 வரை மாநிலக் கட்சிகளின் தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி நடந்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது’’ என்று மாநிலக் கட்சிகள் பலவும் கொந்தளித்துவருகின்றன.

பா.ஜ.க-வின் விமர்சனம்!

உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது, `ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்’ என்ற தீர்மானம்தான். இந்த விதியின் அடுத்த வரியிலேயே `ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சிப் பணியாற்றுபவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. ``இந்த விதிவிலக்கின் மூலம் `ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்’ என்ற தீர்மானம், வெறும் கண்துடைப்புதான் என்பது அம்பலமாகியிருக்கிறது’’ என்று பா.ஜ.க-வினர் விமர்சித்துவருகின்றனர்.

அம்மு அபிராமி
அம்மு அபிராமி

மீண்டெழுமா காங்கிரஸ்?

தேசிய அரசியல் பார்வையாளர்கள், ``இதில் போடப்பட்டிருக்கும் தீர்மானங்களை அமல்படுத்தினால், மேலும் சில தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறக்கூட வாய்ப்பிருக்கிறது. கட்சிக்காகவோ, மக்களுக்காகவோ உழைக்கும் தலைவர்கள் காங்கிரஸில் குறைந்துவிட்டனர். இதற்கு முழுமுதற் காரணம் கட்சி மேலிடம்தான். தலைமையே மக்களிடமிருந்து விலகி நின்று அரசியல் செய்யும்போது, மற்ற நிர்வாகிகள் எப்படி மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்வார்கள்?

முதலில், சரியான தலைமையை நியமிக்க வேண்டும். பின்னர், உட்கட்சிப் பிரச்னைகளையும், அதிருப்தியிலிருக்கும் தலைவர்களையும் சரிசெய்ய வேண்டும். அதன் பிறகே இது போன்ற மாநாடுகளை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். பா.ஜ.க அசுர வளர்ச்சி பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணமே காங்கிரஸின் திறமையின்மைதான். மதம், பொருளாதாரம் சார்ந்து நாட்டில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துவரும் நிலையில், வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் இருப்பது ஜனநாயகத்துக்கே ஆபத்தாக அமைந்துவிடும்’’ என்று எச்சரிக்கிறார்கள்.

எது எப்படியோ... காங்கிரஸ் மீண்டுவருவது அக்கட்சியின் தொண்டர்களுக்கு மட்டுமல்ல... பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் அவசியமான ஒன்று!