உச்சகட்டத்தில் கெலாட் VS பைலட் மோதல்... ராஜஸ்தானிலும் சறுக்குகிறதா காங்கிரஸ் ஆட்சி?

ராஜஸ்தான் காங்கிரஸ், கெலாட் அணி, பைலட் அணி என இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு தற்போதுள்ள 108 எம்.எல்.ஏ-க்களில், சுமார் 90 பேர் கெலாட் பக்கமே நிற்கின்றனர்
காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்தவும், சிக்கல்களைச் சரிசெய்யவும் தேசியத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தலைவர் தேர்தலே ராஜஸ்தான் காங்கிரஸில் பெரும் சிக்கலை உண்டாக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து, அந்த மாநிலத்தின் மற்றொரு முக்கியத் தலைவரான சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இதற்கு கெலாட் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவிக்க, உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது உட்கட்சிப்பூசல். ராஜஸ்தான் முதல்வர் நாற்காலிக்காக கெலாட்டும் பைலட்டும் `மியூசிக்கல் சேர்’ விளையாடுவது அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
குழப்பம் ஏன்?
ராஜஸ்தான் காங்கிரஸ், கெலாட் அணி, பைலட் அணி என இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு தற்போதுள்ள 108 எம்.எல்.ஏ-க்களில், சுமார் 90 பேர் கெலாட் பக்கமே நிற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தொடர்ந்து மறுத்துவந்த அசோக் கெலாட், ஒரு வழியாக சோனியா, ராகுலின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒப்புக்கொண்டார். ஆனால் கட்சியின் தலைவரானாலும், தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வராகவும் தான் செயல்பட அனுமதிக்குமாறு கெலாட் கோரிக்கை வைக்க, அதை `ஒரு நபர்... ஒரு பதவி’ என்ற கட்சியின் கொள்கையை முன்வைத்து மறுத்துவிட்டது தலைமை. கூடவே, சச்சின் பைலட்டை முதல்வராக்கி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை அவர் தலைமையில் சந்திக்கலாம் எனத் திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ``ஒன்று கெலாட்டே முதல்வராகத் தொடர வேண்டும். இல்லையென்றால், எங்கள் அணியிலிருக்கும் ஒருவர்தான் முதல்வராக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தி, பைலட்டை சட்டமன்றக்குழுத் தலைவராக நியமிக்க, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்களான மல்லிகார்ஜுன கார்கேவும், அஜய் மாகேனும் தலைநகர் ஜெய்ப்பூருக்கு விரைந்தனர். ஆனால், 80-க்கும் மேற்பட்ட கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மேலிடப் பொறுப்பாளர்களைப் பார்க்க மறுத்ததோடு, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவிலிருப்பதாகவும் தெரிவித்தனர். கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்த சாந்தி தரிவால், ``அஜய் மாகேன், பைலட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். எம்.எல்.ஏ-க்களிடம் பைலட்டை முதல்வராக்குவதற்காகப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்’’ எனக் குற்றம்சாட்டினார்.
அசோக் கெலாட்டும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள மகேஷ்வரி கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி பேச்சுவார்த்தைக்கு வராமல் தப்பித்துவருகிறார். அங்கு செல்போன் சிக்னலும் இல்லாததால், கட்சித் தலைமை அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த சோனியா காந்தி, கெலாட்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்ப தாகத் தெரிகிறது. இதை யடுத்து, சோனியாவின் கோபத்தைத் தணிக்க டெல்லி விரைந்தார் கெலாட். ``இந்திரா காந்தி காலத் திலிருந்து கட்சியிலிருக்கும் கெலாட், தங்கள் குடும்பத் துக்கு விசுவாசமாக இருப்பார் என எண்ணி, அவரைத் தலைவராக்க நினைத்தது மேலிடம். ஆனால், ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தூண்டிவிட்டு தனது சுயரூபத்தைக் காட்டிவிட்டார். இனிமேலும், அவரைத் தலைவர் தேர்தலில் போட்டியிட மேலிடம் அனுமதிக்கக் கூடாது’’ என்பதே கட்சியின் மூத்த நிர்வாகிகளின் குரலாக இருக்கிறது.
கெலாட் - பைலட் மோதல் முன்கதை!
2013 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ். இதையடுத்து, ராஜஸ்தானில் கட்சியை மீட்டெடுக்கும் பணி சச்சின் பைலட்டுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கான வேலைகளைக் களத்தில் இறங்கி தீவிரமாக மேற்கொண்டார் பைலட். விளைவு, 2018 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது காங்கிரஸ் கட்சி. சீனியர் என்ற முறையில் அசோக் கெலாட்டை முதல்வராக்கியது கட்சித் தலைமை. இதனால் அப்செட் ஆனார் பைலட். தொடர்ந்து, துணை முதல்வராக இருந்துகொண்டே கெலாட்மீது வெளிப்படையாகக் குற்றச்சாட்டுகளை பைலட் முன்வைக்க, கட்சி இரண்டானது.
2020-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான பனிப்போர் முற்றியது. 19 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு கிளர்ச்சி செய்தார் பைலட். `பா.ஜ.க-வுடன் கைகோத்துக்கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார் பைலட்’ என்றது கெலாட் தரப்பு. சமரசப் பேச்சுவார்த்தைகளின் வழியாக ஓரளவுக் குப் பிரச்னைகளைச் சரிசெய்து ஆட்சியைக் காப்பாற்றியது மேலிடம். பைலட், தனது துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தற்போது இரு தரப்புக்குமிடையே மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. எப்படியாவது முதல்வர் நாற்காலியில் ஏறிவிட வேண்டுமென பைலட்டும், தனது ஆட்சியைக் கவிழ்க்க நினைத்த பைலட்டுக்கு முதல்வர் வாய்ப்பை வழங்கிவிடக் கூடாதென கெலாட்டும் கங்கணம் கட்டிக்கொண்டு மோதிவருகின்றனர்.
இந்த உட்கட்சிப்பூசல்களால், ராஜஸ்தான் காங்கிரஸில் பற்றியிருக்கும் நெருப்பில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது எதிர்க்கட்சியான பா.ஜ.க. ``ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்’’ என்ற கோரிக்கையையும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் முன்வைத்துவருகின்றனர்.
அடுத்து என்ன நடக்கும்?
``நிமிஷத்துக்கு நிமிஷம் திருப்புமுனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் அரசியலில், அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிப்பது கடினம். அசோக் கெலாட், தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் போகலாம். அவரோ அல்லது அவரது விசுவாசிகளில் ஒருவரோ முதல்வராக்கப் படலாம். இல்லை, அங்கு ஆட்சிகூட கவிழலாம். 20-க்கும் குறைவான எம்.எல்.ஏ-க்களைக் கையில் வைத்திருக்கும் சச்சின் பைலட் முதல்வராவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதே நேரம் பிரச்னைகள் சுமூகமாக முடிந்தால் பைலட்டே ராஜஸ்தானின் புதிய முதல்வராக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் குழப்பங்கள் மூலம் பா.ஜ.க பலனடைவது மட்டும் நிச்சயம்’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மக்களை ஒன்றிணைக்க `பாரத ஒற்றுமை யாத்திரை’ நடத்திவருகிறார் ராகுல் காந்தி. இந்த நேரத்தில், ராஜஸ்தான் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு நிற்பது கேலிக்கூத்தாகியிருக்கிறது. இந்த அரசியல் குழப்பங்களைக் கட்சி மேலிடம் உடனடியாகச் சரிசெய்யாவிட்டால், கைவசமிருக்கும் இரண்டு மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானையும் காங்கிரஸ் இழக்க நேரிடும்!