Published:Updated:

''பாஜக-வுக்கு நிகரான கட்சியாக காங்கிரஸ் இல்லை'' - உண்மையை உடைக்கிறார் கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

''இன்றைய சூழலில், பாஜக பேசிவருகிற அரசியல், இந்தி பேசிவரக்கூடிய மாநிலங்களில் நன்றாகவே எடுபடுகிறது, வெற்றியாகவும் பரிணமிக்கிறது என்பதையெல்லாம் நானும் ஏற்றுக்கொள்கிறேன்'' என்கிறார் கார்த்தி சிதம்பரம்.

''பாஜக-வுக்கு நிகரான கட்சியாக காங்கிரஸ் இல்லை'' - உண்மையை உடைக்கிறார் கார்த்தி சிதம்பரம்

''இன்றைய சூழலில், பாஜக பேசிவருகிற அரசியல், இந்தி பேசிவரக்கூடிய மாநிலங்களில் நன்றாகவே எடுபடுகிறது, வெற்றியாகவும் பரிணமிக்கிறது என்பதையெல்லாம் நானும் ஏற்றுக்கொள்கிறேன்'' என்கிறார் கார்த்தி சிதம்பரம்.

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கூட்டணியினருக்கு பேரிடியாக இறங்கியிருக்கின்றன. 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 'நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சாரம்தான் ஐந்து மாநிலத் தேர்தல்' என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவந்த நிலையில், தேர்தல் முடிவுகள் மறுபடியும் பாஜக-வுக்கே சாதகமாகிவிட்டன என்பதைவிடவும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருப்பதுதான் பேரதிர்ச்சி!

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்திதேன்...

''ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பஞ்சாப் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறோம், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த புதிய முதல்வரைக் கொண்டுவந்திருக்கிறோம் என்பதால், கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்த்திருந்தோம்.

கோவாவிலும் கடந்த முறை பலமாக இருந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒவ்வொரு தலைவரையும் கட்சித்தாவல் செய்யவைத்து, அரசு அமைத்த பா.ஜ.க-வை மக்கள் இந்த முறை நிச்சயம் நிராகரிப்பார்கள்; காங்கிரஸை முழுமையாக ஆதரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதேபோல், உத்தரகாண்ட்டில், மூன்று முறை முதலமைச்சர்களை மாற்றியமைத்த பா.ஜ.க-வை மக்கள் நிராகரித்து எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புகள் எல்லாமே ஏமாற்றமாகிவிட்டன!''

சர்ச்சைக்குரிய ட்வீட்
சர்ச்சைக்குரிய ட்வீட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று, 'நெட்ஃப்ளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம்' என்று நீங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது மிகப்பெரிய சர்ச்சையாகியிருக்கிறதே?''

''ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியைத் தந்திருக்கின்றன எனும்போது, அந்தச் செய்தியை நான் எப்படித் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியும்? தோல்வியைப் பார்க்கச் சகிக்காமல், அதேநேரம் என்னுடைய வலியை நானே நையாண்டி செய்யும்விதமாக அப்படியொரு ட்வீட்டைப் பதிவிட்டேன். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்தான் அரசியலில் இருக்க வேண்டும். மாறாக எல்லா விஷயத்தையுமே சீரியஸாகப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தால், சீக்கிரமே சலிப்படைந்துவிடும்.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ஆனால், 'காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வீட்டுப் பிள்ளை; கட்சியிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் ஏற்படுத்தும் வலி புரியாமல் விளையாட்டாக ட்வீட் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்' என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?''

''ஏழு வயதிலேயே அரசியல் மேடையேறியவன் நான். 1996-லிருந்து தீவிர அரசியலில் இருந்துவருகிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது என்னுடைய வீட்டில்தான். த.மா.கா-வின் அரசியல் ஷரத்தை எழுதுவதற்காக கம்ப்யூட்டரை ஏற்பாடு செய்தவனும் நான்தான்.

காங்கிரஸ் கட்சியில் மற்றவர்களுக்காக நான் வேலை செய்திருக்கிறேன், நானே வேட்பாளராகவும் நின்றிருக்கிறேன், எலெக்‌ஷன் ஏஜென்ட்டாக இருந்திருக்கிறேன்... இப்படிப்பட்ட எனக்கு எல்லா வலியும் தெரியும். பா.ஜ.க ஏவிய அத்தனை ஏவுகணைகளையும் எதிர்த்துக்கொண்டுதான் இந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். எனவே, எனக்கு வலி தெரியாது என்று சொல்பவர்களுக்கு அரசியல் தெரியாது என்றே சொல்வேன்!

காங்கிரஸ் கட்சியின் தோல்வியை என்னாலும் ஜீரணிக்க முடியவில்லை என்பதால்தான் அந்தச் சூழலை மாற்றும்விதமாக, என்னை நானே நக்கல், நையாண்டி செய்துகொண்டேன். மற்றபடி இந்த ட்வீட்டில் வேறு எந்த நோக்கமும் இல்லை!''

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

''இந்தப் படுதோல்விக்குப் பிறகு, தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சி இனி எதிர்க்கட்சியாக இருக்க முடியுமா?''

''இன்றைய அரசியல் சூழலில், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிர மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், தேசிய அளவிலான வாக்குவிவர புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு பார்த்தால், 'பா.ஜ.க-வுக்கு நிகரான கட்சியாக காங்கிரஸ் இல்லை' என்பதுதான் யதார்த்த உண்மை!

அதேசமயம், அரசியல் என்பதே ஒரு வட்டம்தான். எனவே இந்த நிலை விரைவிலேயே மாறும். இன்றைய சூழலில், பா.ஜ.க பேசிவருகிற அரசியல், இந்தி பேசிவரக்கூடிய மாநிலங்களில் நன்றாகவே எடுபடுகிறது, வெற்றியாகவும் பரிணமிக்கிறது என்பதையெல்லாம் நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனாலும்கூட, இந்த வெற்றி குறித்த அனைத்துப் புள்ளிவிவரங்களையும் சேகரித்துக்கொண்டு ஆழமாக ஆய்வு செய்து பார்த்துவிட்டுத்தான், மேற்கொண்டு விரிவான கருத்துகளைச் சொல்ல முடியும். ஏனெனில், கோவா-வில் திரிணாமுல் காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால், கூடுதலாக நான்கு இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றிருப்போம்.

ஆக, எதிர்க்கட்சிகள் சிதறியிருந்ததால்தான் பா.ஜ.க-வுக்கு இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியப்பட்டதா, ஓரணியில் திரண்டிருந்தால், பா.ஜ.க வெற்றியைத் தடுத்திருக்க முடியுமா என்பதையெல்லாம் ஆழமாக ஆய்வு செய்து பார்த்தே சொல்ல முடியும்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''காங்கிரஸ் கட்சி விரும்பினால், பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியில் இணையலாம் என மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளாரே?''

''இரண்டாம் உலகப் போர் மூண்டபோதுதான், எதிரும் புதிருமாக இருந்துவந்த அமெரிக்காவும் ரஷ்யாவும் கொடுங்கோலன் ஹிட்லரை ஒழித்துக்கட்டுவதற்காக ஒன்றாகக் கைகோத்தன. அதேபோல், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், பல பாடங்களையும் புரிதலையும் எல்லோருக்குள்ளும் ஏற்படுத்தியுள்ளன. எனவே, விரைவில் தேசிய அரசியலில் மாற்றங்கள் நிகழும்.

ஏனெனில், தேசிய அளவில், காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியால் பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே, தேசிய அளவில் காங்கிரஸை மையமாக வைத்துத்தான் எதிர்க்கட்சிகளுக்கான கூட்டணி அமையும். அதற்கான முன்னோட்டம் வருகிற ஜனாதிபதி தேர்தலிலேயே தெரிந்துவிடும்.''

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

'' 'காங்கிரஸ் கட்சித் தலைமை குடும்ப வாரிசுகளின் முதிர்ச்சியின்மையே தோல்விகளுக்குக் காரணம்' என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியிருந்தது இப்போது நிரூபணமாகியிருக்கிறதுதானே?''

''எல்லாக் கட்சிகளிலுமே இன்றைக்கு வாரிசு அரசியல் இருக்கிறது. ஆனால், திரும்பத் திரும்ப காங்கிரஸ் கட்சிமீது மட்டுமே இது போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்திலுள்ள சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள்தான் அத்தனை பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சியும் அங்கே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறதுதானே. அவ்வளவு ஏன்... பா.ஜ.க-விலேயே பல இடங்களில் கணவன் - மனைவி என இருவருக்குமே தேர்தலில் சீட் கொடுத்திருக்கிறார்கள். இருவருமே வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்தான். மற்றபடி 'குடும்ப வாரிசுகளின் முதிர்ச்சியின்மைதான் தோல்விக்குக் காரணம்' என அமரீந்தர் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்றால், அதற்கான விளக்கத்தை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். இன்றைக்கு காங்கிரஸ் கட்சி, ஒரு சவாலான சூழலில் இருந்துவருகிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதற்கான பொறுப்பை ஒருவர் அல்லது ஒரு சிலர்மீது மட்டுமே வைப்பதென்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக எல்லோருமே சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.''

''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸைவிடவும் அதிக வாக்குகள் பெற்ற பா.ஜ.க., தமிழ்நாட்டில், 3-வது பெரிய கட்சிதானே... ஏன் மறுக்கிறீர்கள்?''

''காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் போட்டியிடவில்லையே! நாங்கள் கூட்டணியில் கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டும்தானே போட்டியிட்டோம்... இந்தச் சூழ்நிலையில், எங்கள் கட்சியின் வாக்கு சதவிகிதம் இதுதான் என்று எப்படி குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? 2016 தேர்தலில், நாங்கள் தனித்து நின்றோம். அப்போது நாங்கள் பெற்ற வாக்கு சதவிகிதத்தோடு ஒப்பிட்டு வேண்டுமானால், கருத்து சொல்லுங்கள்... நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மற்றபடி, ஒரு கூட்டணியில் ஏழெட்டு கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடுகிறபோது, ஒரு கட்சிக்கான வாக்கு இதுதான் என்று எதையும் தனித்துக் குறிப்பிட முடியாது.''

அண்ணாமலை
அண்ணாமலை

''2024 அல்லது 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்கிறாரே அண்ணாமலை?''

''2024-ல் எப்படி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும்? ஒரே தேர்தலை மனதில் வைத்து அவர் இப்படிச் சொல்கிறார் என நினைக்கிறேன். அப்படியென்றால், இப்போது நடைபெற்று முடிந்திருக்கிற ஐந்து மாநிலங்களிலும் 2024-ல் ஆட்சியைக் கலைத்துவிடுவார்களா?

ஒரே நாடு; ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்தினால், ஏதாவது ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டால், மத்திய அரசையும் கலைத்து ஒட்டுமொத்த நாட்டுக்கும் மறு தேர்தல் நடத்துவார்களா? ஆக, ஒரே நாடு ஒரே தேர்தல் கான்செப்ட் என்னவென்று புரியாமலே இது போன்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, வடநாட்டில் பா.ஜ.க பெறுகிற வெற்றியை வைத்துக்கொண்டு, 2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க வெற்றிபெறும் என்று அவர்கள் சொல்வார்களேயானால், அவர்களுக்கு அரசியல் அடிப்படையே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசியலும் தனித்துவம் வாய்ந்தது. டென்னிஸ் விளையாட்டில், எப்படி ஒரு செட்டுக்கும் அடுத்த செட்டுக்கும் சம்பந்தமே கிடையாதோ அதேபோல், ஒரு மாநில வெற்றி அடுத்த மாநிலத்திலும் பிரதிபலிக்கும் என்று சொல்ல முடியாது.

தமிழ்நாட்டு தேர்தல் முடிவை வைத்துக்கொண்டு, கர்நாடகா மாநிலத் தேர்தல் முடிவை கணிக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., பஞ்சாப்பில் இரண்டு இடங்களைத்தானே வென்றிருக்கிறது! எனவே ஒரு மாநிலத் தேர்தலுக்கும், அடுத்த மாநில தேர்தலுக்கும் இடையே எந்தவித சம்பந்தமும் கிடையாது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் மட்டும்தான் தமிழக பா.ஜ.க கொஞ்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டையே பிடித்துவிடலாம் என்று அவர்கள் ஆசைப்பட்டால், நான் என்ன சொல்வது? அளவுகோல் வைத்துக்கொண்டா அவர்கள் ஆசைப்படுகிறார்கள்!''

''மதுரையில் `தி.மு.க-வினர் கொடுத்த அழுத்தத்தாலேயே உண்மைக்கு மாறாக தி.மு.க வேட்பாளரை வெற்றி வேட்பாளர் என அறிவித்தேன்’ என்ற தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறாரே... இதைத்தானே அ.தி.மு.க தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது?''

''தப்புதான்... தேர்தல் என்பது நியாயமாகத்தான் நடக்க வேண்டும். மக்களுடைய உண்மையான எண்ணங்கள்தான் தேர்தல் முடிவுகளாக பிரதிபலிக்கப்பட வேண்டும். எனவே, எங்கள் கூட்டணியினரே தவறு செய்திருந்தாலும், தவறு தவறுதான்.''

பேரறிவாளன்
பேரறிவாளன்

''ஏழு தமிழர் விடுதலைக்கு மட்டும் தனிச்சலுகை என்பதை என்னாலும் காங்கிரஸ் கட்சியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருந்த நிலையில், தற்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சட்டரீதியாக ஒருவருக்குத் தீர்ப்பு கிடைக்கிறது என்றால், அதைப் பற்றி எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. உதாரணமாக, 30 வருடங்களைக் கடந்துவிட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவருமே விடுதலை செய்யப்படுவார்கள் என்று புதிதாக ஒரு சட்டம் கொண்டுவந்தாலோ அல்லது நீதிமன்றம் தீர்ப்பளித்தாலோ அதில் எங்களுக்கும் ஆட்சேபம் இல்லை. மற்றபடி இந்த ஏழு பேருக்கு மட்டும் தனிச்சலுகை என்று சொன்னால், அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

'சிறைவாசத்திலேயே 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டார், நன்னடத்தை கொண்டுள்ளார்' என்ற காரணங்களையெல்லாம் முன்வைத்துத்தான் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அப்படியென்றால், இதேபோல் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நன்னடைத்தைச் செயல்பாடு கொண்டவர்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட வேண்டும்தான்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism