மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதால், மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சிவசேனாவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அறிவித்த உத்தவ் தாக்கரே, தனது அரசு இல்லத்திலிருந்து வெளியேறி சொந்த இல்லத்துக்குச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பாக முன்னாள் கர்நாடக காங்கிரஸ் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``மகாராஷ்டிராவில் மீண்டும் தனது கேவலமான அரசியலைத் தொடங்கியிருக்கும் பா.ஜ.க, `ஆபரேஷன் லோட்டஸ்' மூலம் ஆட்சிக்கு வர முயல்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் அணுகுமுறை அரசியலமைப்புக்கு எதிரானது. மத்தியப் பிரதேசம், கர்நாடகாவில் ஆபரேஷன் லோட்டஸ் மூலம் ஆட்சியை கைப்பற்றியது. ஆபரேஷன் தாமரை பா.ஜ.க-வின் உருவகம். தற்போது பா.ஜ.க ஆபரேஷன் லோட்டஸ் மூலம் மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வர முயல்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
