
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைக் குறிவைத்து இந்த இரண்டு நாள் பயணத்தில் அவருடன் நெருக்கம் கடைப்பிடித்தவர்களை, மறைமுகமாகக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்
இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், தமிழக காங்கிரஸின் தலைவர் பதவியைக் கேட்டு ஒரு சிலர் நச்சரித்ததால், அவர் கடுப்பாகி ஒவ்வொருவருக்கும் டோஸ் விட்டதாக நமக்குத் தகவல் கிடைத்தது. என்னதான் நடந்தது... விசாரித்தோம்.
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்துப் பேசினோம். “மார்ச் 1-ம் தேதி நந்தனம், ஒய்.எம்.சி.ஏ திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான பிறகு முதன்முறையாகத் தமிழகத்துக்கு வந்திருந்தார் கார்கே. பெங்களூரிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜர் இல்லத்துக்குச் சென்று, காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அவர், சென்னையில் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

மறுநாள் காலையில் ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய நேரத்தில் பெரும்புதூருக்குப் புறப்பட்டுச் சென்ற கார்கே, ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு செல்வப்பெருந்தகை ஏற்பாடு செய்திருந்தார். அதன் பிறகு, மீண்டும் ஹோட்டல் அறைக்குத் திரும்பிய கார்கேவை, ஜோதிமணி, செல்ல குமார், செல்வப்பெருந்தகை ஆகியோர் தனித்தனியே சந்தித்து தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் பொறுப்பு குறித்த பேச்சுவார்த் தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு செக் வைக்கத் திட்டமிட்ட கே.எஸ்.அழகிரி, தன் ஆதரவாளரான காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர் ரஞ்சன்குமார் மூலமாக கார்கே தங்கியிருந்த ஹோட்டலில், தலித் உரிமைகளுக்காகப் போராடுபவர் களுடனான ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், “பட்டிய லினத்தவர்களுக்கு காங்கிரஸில் முக்கியப் பதவிகள் வழங்குவதை அதிகரிக்க வேண்டும்” என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கார்கே, “நான் 51 ஆண்டுகளாகத் தொடர்ந்து சட்டமன்ற, மக்களவை உறுப்பினராக இருக்கிறேன்.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபோதும், சோனியா காந்தி என்னை மாநிலங் களவைக்குத் தேர்வுசெய்தார். சாதாரண பொறுப்பிலிருந்த நான் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கிறேன். இதைவைத்தே பட்டியலினத்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் என்ன முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சூடாகவே பதிலளித்திருக்கிறார்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைக் குறிவைத்து இந்த இரண்டு நாள் பயணத்தில் அவருடன் நெருக்கம் கடைப்பிடித்தவர்களை, மறைமுகமாகக் கண்டிக்கவும் செய்திருக்கிறார். இதையடுத்து தலைவர் பதவிக்காக முயன்றவர்கள் சைலன்ட் மோடுக்குச் சென்றிருக்கிறார்கள். எது எப்படியோ, விரைவில் புதிய தலைவர் அறிவிப்பு இருக்கும்” என்றனர் விரிவாக.
கிடைக்கும் என்பார் கிடைக்காது... கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்!