Published:Updated:

``இந்த எளிய கணக்குகூட மத்திய அரசுக்கு தெரியவில்லை"- தடுப்பூசி விவகாரத்தில் ப.சிதம்பரம் கடும் தாக்கு

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி மற்றும் உற்பத்தி விவகாரத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டியதன் காரணமாகத்தான் நாட்டு மக்கள் தற்போது தடுப்பூசி கிடைக்காமல் செத்து  மடிந்துக் கொண்டிருப்பதாக மத்திய அரசை கடுமையாக சாடியிருக்கிறார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒட்டுமொத்த தேசமும் கோவிட் பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி நிலைகுலைந்து நிற்கிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலை மத்திய அரசு திறம்படச் சமாளிக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் சமீபமாக மேலோங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் மத்திய அரசின் கொரோனா கால செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், மத்திய அரசு பெருந்தொற்றை திறம்படக் கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

கொரோனா:``பொறுப்பற்று செயல்படுகிறது மத்திய அரசு" - நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தாக்கு!

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி மற்றும் உற்பத்தி விவகாரத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டியதன் காரணமாகத் தான் நாட்டு மக்கள் தற்போது தடுப்பூசி கிடைக்காமல் செத்து மடிந்துக் கொண்டிருப்பதாக சாடியிருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. தேசம் முழுவதும் மக்கள் நோய்த்தொற்று பாதிப்பால் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் திறம்படச் செயலாற்றத் தவறி விட்டது. கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதிலும் முறையாக மக்களுக்கு விநியோகிப்பதிலும் ஏற்பட்ட கால தாமதத்தால் தான் இன்று இவ்வளவு பேர் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் இந்த கொரோனா மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது?. மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும், இறக்குமதி செய்வதிலும் காட்டிய பெரும் சுணக்கத்தின் விளைவு இந்த கொரோனா மரணங்கள்" என்று மத்திய அரசைச் சாடி ட்வீட் செய்திருந்தார்.

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இருக்கும் சிதம்பரம் கடந்த சில தினங்களாக மத்திய அரசின் கொரோனா கால செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சன ஏவுகணைகளை ஏவிய வண்ணமாக இருந்து வருகிறார். நேற்றைய தினம் ட்விட்டரில் சிதம்பரம் இன்னும் சில கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். அதில், "மத்திய அரசு நாட்டு மக்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் தேவைப்படும், அவற்றை எப்படி உற்பத்தி செய்வது போன்ற எண்ணிக்கை கணக்குகளை முறையாகக் கணிக்கத் தவறி விட்டது. 102 கோடி மக்களுக்கு நான்கு கட்டமாகத் தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதனையும், உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் ஒரு மாத காலத்தில் எவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடியும் என்பதனையும் கணிக்கத் தவறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

பிற தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்குக் கட்டாய உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று சி.டபிள்யூ.சி வலியுறுத்தி நான்கு வாரங்களுக்குப் பிறகு தான் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க விண்ணப்பிக்க மற்ற தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களை மத்திய அரசு அழைக்கிறது. வெளிநாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தாமல்அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று காட்டமான விமர்சனங்களைச் சிதம்பரம் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றும் ட்விட்டரில் தடுப்பூசி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள சிதம்பரம், "அதிசயம் ஆனால் உண்மை. மக்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசிகள் தேவைப்படும் என்ற எளிய கணக்கினை கூட மத்திய அரசு போட தவறிவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கத் தவறியது. 29-03-2021 அன்று தான் தடை செய்யப்பட்டது. அதற்குள் 5.8 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மூன்றாவது தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக்) 12-04-2021 அன்று தான் பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. வேறு எந்தத் தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை, இறக்குமதியும் ஆகவில்லை" என்று தொடர்ச்சியாக மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து சிதம்பரம் ட்வீட் செய்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு