Published:Updated:

``பாஜக-வுக்கு எதிராகச் செயல்பட இதைவிட நல்ல வாய்ப்பு காங்கிரஸுக்கு அமையாது!'' - பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

``பாஜக-வின் வீச்சையும் தாக்கத்தையும் தடுத்து நிறுத்த திமுக-வுக்குத்தான் ஸ்தாபன அமைப்பு இருக்கிறது. ஸ்டாலினுக்குத்தான் அந்த உணர்வு இருக்கிறது'' - பீட்டர் அல்போன்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`2024-ல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் பின்பற்றிய யுக்தியைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தளபதி தலைமையில் இந்தியாவை மீட்போம்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர்நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கட்டுரை எழுதியிருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததோடு அடுத்து வரும் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எழுதியிருந்தார். அது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. அதையொட்டி அவருடன் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``பாஜக விரித்த மதவாத அரசியல் வலையில் காங்கிரஸ் விழுந்துவிட்டது என விமர்சித்திருக்கிறீர்களே..?”


``உத்தரகாண்ட் முதல்வராக இருந்த ஹரிஸ் ராவத், `பாஜக `ஜெய் கிருஷ்ணா’ என்று சொன்னால் நாம் `ஜெய் கணேஷ்’ என்று சொல்ல வேண்டும்’ என்கிறார். பிறப்பால், வளர்ப்பால் நான் காங்கிரஸ் கட்சிக்காரன் எனச் சொல்லிக்கொள்வேன். சாதி, மதம், மொழி, மாநிலம் என ஒன்று தனியாக இல்லாத இந்தியா முழுமைக்குமான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகுல். அவரை ‘பூணுல் தரித்த பிராமணன்’ எனச் சொன்னால் எனக்கு மட்டுமல்ல, உண்மையான காங்கிரஸ்காரர்கள் அனைவருக்கும் வேதனையாகத்தான் இருக்கும். அதை நான் எதிர்த்து கட்டாயம் கேள்வி கேட்பேன்.”


``தேர்தலில் வெற்றியை நோக்கிய பயணத்தில் எது வெற்றி பெறுமோ அதைச் சொல்வதுதான் அரசியல்?”


``வெற்றி என்பது நீடித்திருக்க வேண்டும். அதுமட்டுல்ல, எதை விலையாகக் கொடுத்து அந்த வெற்றியைப் பெறுகிறோம் என்பது முக்கியமானது. அதைத்தான் பாரதி `கண்­ணி­ரண்டு விற்­றுச் சித்தி­ரம் வாங்­கி­னால் கைகொட்­டிச் சிரி­யாரோ...’ என எழுதியிருக்கிறார்.”

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
``ஆர்.எஸ்.எஸ்-போல காங்கிரஸ் கட்டமைப்பை உருமாற்ற நினைக்கிறார் ராகுல்!'' - பீட்டர் அல்போன்ஸ் தடாலடி

``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


``கட்சியின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், ஒருங்கிணைப்பில் இருக்கும் பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரிடம்தான் கேட்க வேண்டும். அதைப் பற்றிக் கருத்து சொல்லக் கூடிய இடத்திலோ, பொறுப்பிலோ நான் இல்லை.”

``காங்கிரஸில் இருந்துகொண்டு திமுக-வுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்களே... அதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா?”


``பாஜக-வுக்கு எதிராகச் செயல்பட இதைவிட நல்ல வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்காது. `நீங்கள் செயல்படவில்லை; நான் செயல்படவாவது களம் அமைத்துக் கொடுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதுவும் இல்லையென்றால் நான் எத்தனை நாள்களுக்கு அமைதியாக இருக்க முடியும்? என்னுடைய தளம் தமிழ்நாடு. இங்குதான் பிரசாரம் செய்ய முடியும்; உழைக்க முடியும். பாஜக-வின் வீச்சையும் தாக்கத்தையும் தடுத்து நிறுத்த திமுக-வுக்குத்தான் ஸ்தாபன அமைப்பு இருக்கிறது. ஸ்டாலினுக்குத்தான் அந்த உணர்வு இருக்கிறது. அவரது யுக்தி ஆராய்ந்து பார்த்து, செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற யுக்தி. `அதைப் பின்பற்றுங்கள்’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?”


``அதைக் கட்சியினரிடையே பேசிப் புரியவைக்கும் சூழல் காங்கிரஸ் கட்சியில் இல்லையா?”


``எனக்கு வயதாகிவிட்டது. இனி நான் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இதைப் புரியவைத்து அவர்களைச் செயல்படவைப்பதெல்லாம் என்னால் இயலாத காரியம். இடதுசாரித் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடு தொடர்பில் இருக்கிறேன். எனக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கிருந்து என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன்.”


``காங்கிரஸ் கட்சிக்குள் உங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறதாகத் தெரிகிறதே...”


``எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ, கட்சியில் முக்கியப் பதவியோ கொடுங்கள் எனக் கேட்கவில்லை. செயல்படுவதற்கான களம் உருவாக்கிக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். இங்கிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டிலாவது காங்கிரஸை, அதன் கொள்கைகளைக் காப்பாறுங்கள் என்றுதான் சொல்கிறேன். இதில் எங்கே எனக்கான இடம் இல்லாமல் போய்விட்டது எனத் தெரியவில்லை.”

காங்கிரஸ் கொடி
காங்கிரஸ் கொடி

``தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிராக நிற்கத் தகுதியான கட்சி காங்கிரஸா, திமுக-வா?


``இரண்டு கோட்பாடுகள் இருக்கின்றன. அகில இந்திய அளவில் காங்கிரஸ், இடதுசாரிகள், சில மாநிலக் கட்சிகள், தலித், சிறுபான்மை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை, சமூக ஆர்வலர்கள் நிற்கிறார்கள். கட்சியின் எல்லைகளே அழிந்துவருகின்றன. பாஜக-வுக்கு எதிராக இருப்பவர்களெல்லாம் சண்டையிட்டுக்கொண்டிருக்காமல் அவர்களெல்லாம் ஓரணியில் நிற்க வேண்டும். எந்தச் சமரசமும் இல்லாமல் அதைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறேன். பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் செய்யும் அனைத்துத் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கு சாத்தியமே இல்லை. காங்கிரஸ் என்பது வெறும் கட்சியல்ல. மதச்சார்பற்ற அரசியல், எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, கருத்து, பேச்சு, எழுத்து சுதந்திரங்களில் நம்பிக்கை உடைய ஜனநாயகம், சமூகநீதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கொள்கை. அதை உணர்ந்து காங்கிரஸ் - தி.மு.க இரண்டு கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் செயலாற்ற வேண்டும்.”


``காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?”


``கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்தாபன கட்டமைப்பு, தத்துவம் போன்றவற்றில் காங்கிரஸ் கட்சி தற்போது நீர்த்துப்போய்விட்டது. காங்கிரஸ் கட்சி மீதான அக்கறையினாலும், தமிழ்நாட்டில் அது வீழ்ந்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பினாலும்தான் இதைச் சொல்லியிருக்கிறேன். பாஜக-வுக்கு எதிராக இருக்கும் 65 விழுக்காடு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வேலையை காங்கிரஸ் செய்ய வேண்டும். அதைத்தான் இங்கே ஸ்டாலின் செய்து காட்டி வெற்றி பெற்றிருக்கிறார். தேசிய அளவிலும் இதையே வழிகாட்டு நெறிமுறைகளாகப் பின்பற்ற வேண்டும். சிந்திக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு அதைத் தேர்தலில் பயன்படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். பாஜக-வுக்கு எதிராக உள்ளவர்களைத் தன்னால் ஒன்றிணைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக தைரியமாக அறிவிக்க முடிந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்த தலைவர்களே அதை ஏற்றுக்கொள்ளக் காட்டிய தயக்கத்தால்தான் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கொடுத்த பதவிக்காக நீங்கள் திமுக-வுக்கு அடிமையாகிவிட்டீர்கள் என பாஜக-வினர் விமர்சிக்கிறார்களே...”


``1989-ல் என்னைப் பார்த்து `தம்பி... உன் முகத்தில் உதயசூரியனைப் பார்க்கிறேன்’ என்றார் கருணாநிதி. காமராஜர், மூப்பனார் இறப்பின்போதும், ஜி.கே.வாசன் தனியாகக் கட்சி ஆரம்பித்தபோதும் திமுக-வில் சேர வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், நட்பு என்பது வேறு, அரசியல் களம் என்பது வேறு. இதனால் நான் நிறைய இழந்திருக்கிறேன். என்னை யாரெல்லாம் திமுக-வுக்கு நெருக்கமானவர்கள் என்று சொன்னர்களோ, அவர்களெல்லாம் எம்.பி., அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்கில்லை. காங்கிரஸ் கட்சியின் பயணமும், பாஜக-வின் வளர்ச்சியும் எங்கோ போகும் என்பதை 25 ஆண்டுகளாக கணித்துவருகிறேன். அதனால்தான் அப்போது கலைஞரின் கரங்களை வலுப்படுத்த நினைத்தேன். இப்போது ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த நினைக்கிறேன். கலைஞரின் செல்லப்பிள்ளை எனச் சொல்வார்கள். காங்கிரஸ் வீழ்ந்துவிடக் கூடாது என மனப்பூர்வமாக கலைஞர் நினைத்தார். அதனால்தான் இந்தக் கூட்டணி நீடிக்க பல தியாகங்களைச் செய்தார். அவற்றை அருகில் நின்று பார்த்தவன் நான்.”


`` `காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் கேஸ் சிலிண்டர் விலை ஏறியது. திமுக-வும் தருவதாகச் சொன்ன மானியம் குறித்து வாய்திறக்கவில்லை’ என்ற விமர்சனம் இருக்கிறதே?”

``காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எத்தனை முறை விலை உயர்த்தப்பட்டது என்ற புள்ளிவிவரத்தைப் பார்க்க வேண்டும். உயர்த்தினாலும் மூன்றே நாள்களில் அதைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். ஆறு மாதங்களில் 300 ரூபாய் உயர்த்துவதெல்லாம் வரலாற்றிலேயே பாஜக-வால் மட்டும்தான் முடியும். மேலும், சிலிண்டருக்கு மானியம் கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் நிதி நிலைமை இல்லை. டீசல் விலையை 3 ரூபாய் குறைக்க மத்திய அரசே தயாராக இல்லாதபோது இங்கு குறைக்கப்பட்டது. இன்னும் செய்யக்கூடிய வாய்ப்பு வரும்.”

``தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்பது தேர்தலுக்கு முன்பே திமுக-வுக்குத் தெரியும்தானே?”


``இந்த அரசின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கத்தை வேட்டைக்காடாக அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிறுபான்மையின ஆணையத்தையே எடுத்துக்கொண்டால் கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தப் புதிய முன்னெடுப்பும் செய்யவில்லை. செய்யவேண்டியதையே செய்யவில்லை. சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள் கொடுக்கும் புள்ளிவிவரங்களை ஏன் அதிமுக-வினரால் எதிர்கொள்ள முடியவில்லை?''

கோஷ்டிப்பூசல்தான் காங்கிரஸ் கட்சியின் சாபக்கேடு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு