Published:Updated:

`பிரக்யா பேசுகிறார்; இந்த அவை ஏன் அமைதி காக்கிறது?' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த காங்கிரஸ்

பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து சாத்வி பிரக்யா சிங் எம்.பி-யை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரக்யா சிங்
பிரக்யா சிங்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. கடந்த திங்களன்று எஸ்பிஜி என்றழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, `சட்ட மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும்' எனக் கூறி காந்தியைக் கொலை செய்த கோட்சேவைப் பற்றிக் குறிப்பிட்டார். காந்தியைக் கொலை செய்தபின் கோட்சே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் ஒரு பகுதியை அவர் படித்துக்காட்டினார்.

ஆ.ராசா
ஆ.ராசா

அப்போது குறுக்கிட்ட சாத்வி பிரக்யா சிங் தாகூர், ``இந்த விவாதத்தில் தேசப்பக்தரைப் பற்றிக் குறிப்பிடக் கூடாது’ என்று கூறினார். நாடாளுமன்றத்தில் கோட்சேவை தேசப்பக்தர் என பிரக்யா சிங் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

`பிரதமருக்கு வழங்கும் அதே பாதுகாப்பைத் தரமுடியாது!’- எஸ்பிஜி விவகாரத்தில் அமித் ஷா

இதையடுத்து, அவரது பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. தனது கருத்து தொடர்பான விளக்கத்தை இன்று அளிப்பதாக பிரக்யா கூறியிருந்தார். இதுதொடர்பாக, நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

`` பிரக்யா சிங் என்ன பேசினாரோ அது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் இதயத்தில் இருக்கும் வார்த்தைகள். அதை மறைக்க முடியாது. அந்தப் பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார் இயல்பாக.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ஏ.ஆர்.சவுத்ரி, ``காங்கிரஸ் கட்சியை தீவிரவாதக் கட்சி என்கிறார் பிரக்யா. தேசத்தின் விடுதலைக்காக ஏராளமான தியாகங்களைச் செய்த கட்சி இது. மகாத்மா காந்தியைக் கொன்றவரை தேசபக்தர் என்கிறார் பிரக்யா. ஆனால், இந்த அவை அமைதியாக இருக்கிறது” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

`தேசப் பக்தரை இங்கே குறிப்பிடக் கூடாது!’- ஆ.ராசா பேச்சும் பிரக்யாவின் சர்ச்சைக் கருத்தும்

அப்போது பேசிய சபாநாயகர் ஓம்.பிர்லா, ``பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பதிவு செய்யாத ஒரு விஷயத்தை எப்படி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்?' எனக் கேள்வி எழுப்பினார். இதை ஏற்காத காங்கிரஸ் எம்.பி-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

`பிரக்யா பேசுகிறார்; இந்த அவை ஏன் அமைதி காக்கிறது?' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த காங்கிரஸ்

இதுதொடர்பாகப் பேசிய பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா, `` நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் பேசியது கண்டிக்கத்தக்கது. அவரின் இதுபோன்ற அறிக்கை மற்றும் சித்தாந்தத்தை பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து சாத்வி பிரக்யா சிங் எம்.பி-யை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரையில் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்” என்றார்.

`` பயங்கரவாத பிரக்யா சிங், பயங்கரவாத கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு சோகமான நாள்” என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரக்யா சிங் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவதும் அதற்குப் பா.ஜ.க தரப்பிலிருந்து பதில் தருவதும் தொடர்கதையாகி வருகிறது. சாத்வி பிரக்யாவின் பேச்சை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்டில் சொல்லுங்கள்!