Published:Updated:

`இதைத்தான் 6 வருடமாகச் சொல்லி வருகிறேன்’ - திடீரென மோடியைப் பாராட்டும் காங்கிரஸ் தலைவர்கள்

சத்யா கோபாலன்

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திடீரென பிரதமர் மோடியைப் பாராட்டியுள்ள விஷயம் தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

shashi tharoor
shashi tharoor ( Twitter/@shashi tharoor )

ஆளும்கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சியினரையும், எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சித் தலைவர்களையும் விமர்சனம் செய்வதுதான் தற்போது இருக்கும் அரசியலின் பெரிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் மத்தியில் உள்ள கட்சிகள் தங்கள் எதிர்க்கட்சிகளை மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசியுள்ள விஷயம் தேசிய அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

Modi
Modi

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி முற்றிலும் எதிர்மறையானது அல்ல, மோடியின் நல்ல பணிகளை அங்கீகரிக்காமல் தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் மட்டுமே அவரை எதிர்கொள்ள இயலாது” எனக் கூறினார். இவரின் கருத்து காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

``2024-ல் என்னை சார்ந்திருக்க வேண்டாம்!” - எம்.பி-க்களுக்கு மோடி சொன்ன அட்வைஸ்

இந்நிலையில், ஜெய்ராமின் கருத்தை ஆதரித்து மேலும் இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர். இது பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அபிஷேக் சிங்வி, ``மோடி எப்போதுமே தவறு என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவகையில் எதிர்க்கட்சியான நாம் அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். செயல்களில் எப்போதும் நல்லவை, கெட்டவை மற்றும் மாறுபட்டவை இருக்கலாம். அவற்றை பிரச்னை வாரியாகவும், நபர் வாரியாகவும் நாம் தீர்மானிக்க வேண்டும். மோடி கொண்டு வந்த திட்டங்களில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (உஜ்வாலா திட்டம்) சிறந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Abhishek Singhvi
Abhishek Singhvi

இவரைத் தொடர்ந்து பேசியுள்ள திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``பிரதமர் நரேந்திர மோடி நல்ல விஷயங்களைப் பேசினாலோ, செய்தாலோ அதைப் பாராட்ட வேண்டும் எனக் கடந்த ஆறு வருடங்களாக நான் கூறிவருகிறேன். அப்போதுதான் அவர் தவறு செய்யும்போது நாம் வைக்கும் விமர்சனங்களுக்கு நம்பகத்தன்மை இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.