Published:Updated:

மத்தியப்பிரதேசம்: கவிழ்ந்த காங்கிரஸ் கப்பல்; ராஜினாமா செய்த கமல்நாத்... அடுத்து என்ன?

கமல்நாத்
கமல்நாத் ( Photo: AP )

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வருகிற குழப்பங்களையும் தலைமைச் சிக்கலையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது மத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கிற குழப்பம்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தனக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்து பதவியிலிருந்து விலகிவிட்டார் கமல்நாத். காங்கிரஸ் கட்சி தன்னிடமிருந்த சொற்ப மாநிலங்களில் ஒன்றை இழந்துவிட்டது. எப்போது கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்நாத் தலைமை தாங்கிய ம.பி காங்கிரஸ் கப்பல், இறுதியாகக் கவிழ்ந்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வருகிற குழப்பங்களையும் தலைமைச் சிக்கலையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது மத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கிற குழப்பம்.

சிந்தியா - கமல்நாத்
சிந்தியா - கமல்நாத்

கட்சித் தாவல் மூலம் இந்த ஆட்சி மாற்றத்தை சாத்தியப்படுத்தி பலி தீர்த்துக்கொண்டார் ஜோதிராதித்ய சிந்தியா. காங்கிரஸிலிருந்துதான் விலகியதோடு மட்டுமல்லாமல் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் படையையும் உடன் அழைத்துச் சென்று ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார். அதற்குப் பிரதிபலனாக பா.ஜ.க சார்பில் மாநிலங்களவை எம்.பி பதவியும் விரைவிலே மத்திய அமைச்சர் பதவியும் பெற காத்திருக்கிறார் சிந்தியா. கர்நாடகத்தில் பயன்படுத்திய அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி மத்திய பிரதேசத்திலும் தாமரையை மலரச் செய்துவிட்டது பா.ஜ.க.

நேரடியாகக் கட்சி மாறினால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து. சட்டமன்றத்தின் பலத்தையே குறைத்து தன்னுடைய பலத்தை நிரூபித்துக்காட்டுவதுதான் இன்றைய அரசியல் இலக்கணம். தான் பலசாலியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் எதிராளியை பலவீனமாக்க வேண்டும் என்கிற உத்திதான் இது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தபோதே மத்தியப்பிரதேசத்திற்கும் அபாய மணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், மத்தியப்பிரதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியப்படாது என ராஜினாமா செய்கிற வரையில் கூறிவந்தார் கமல்நாத். நம்பிக்கை வாக்கெடுப்பைத் தள்ளிவைக்க காங்கிரஸ் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன. உச்சநீதிமன்றம் சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தீர்ப்பை பெற்றது பா.ஜ.க. ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் தலைவர்களைப் பார்க்க மறுத்துவிட்டனர்.

ஜோதிராதித்யா சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா

ஜோதிராதித்ய சிந்தியா போன்ற இளம் தலைவரை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது என்கிற கருத்து ஒரு புறமும், பதவிக்காக ஆசைப்பட்டுதான் அதிகம் விமர்சித்த கட்சியிலே சிந்தியா சேர்ந்துவிட்டார் என்கிற கருத்து மறுபுறமும் வைக்கப்படுகிறது. கட்சிக்குள் நிலவிய பூசல்களை காங்கிரஸ் தலைமை - காந்தி குடும்பம் தீர்க்கத் தவறிவிட்டது என்கிற விமர்சனம் ஒரு புறமும், என்ன விலை கொடுத்தாலும் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என பா.ஜ.க செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு மறுபுறமும் வைக்கப்படுகிறது. இந்த விமர்சனங்கள் இரண்டு கட்சிகளுக்கும் புதிதல்ல. ஆளுநரைத் தவறாகப் பயன்படுத்துவது, கட்சிகளை உடைப்பது, ஆட்சியைக் கவிழ்ப்பது என இன்று பா.ஜ.க-வின் செயல்கள் அனைத்திற்கும் முன்னோடியாக இருப்பது காங்கிரஸ் கட்சியே. தனித்த பலத்துடன் மத்தியில் ஆட்சியில் இருக்கிறபோது இரண்டு கட்சிகளும் இந்தத் தவறுகளைச் செய்திருக்கின்றன.

இந்த நீதிமான்கள் செய்ததையும் ரஞ்சன் கோகோய் செய்ததையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்! #MustRead

ஆனால் தேசம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காங்கிரஸையும், நேருவையுமே கைகாட்டும் பா.ஜ.க, காங்கிரஸ் செய்த தவறுகளை மட்டும் தவறாமல் பின்தொடர்வது ஏன் என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. 2018 சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் நூலிழையில் வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோதே கட்சிக்குள் நிலவிய பூசல்கள் வெளிவர ஆரம்பித்தன. இந்த உட்கட்சிப் பூசல்களைச் சரிசெய்ய காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்
சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்

ம.பி முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் - கமல்நாத் இருவரும் கூட்டு சேர்ந்துகொண்டு ஜோதிராதித்ய சிந்தியாவை ஓரம்கட்டுகின்றனர் என்கிற பேச்சு அடிபட்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு சிந்தியா முதல்வர் பதவி கேட்டார், கிடைத்ததோ துணை முதல்வர் பதவி, நிராகரித்துவிட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சொந்த தொகுதியிலே தோல்வியைத் தழுவினார் சிந்தியா. மத்தியப்பிரதேசத்தில் உள்ள 29 நாடாளுமன்ற இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெல்ல முடிந்தது. மாநில தலைவர் பதவியும் வழங்கப்படவில்லை. மாநிலங்களவை எம்.பி பதவியும் வழங்கப்படவில்லை. இதே சமயத்தில் எம்.எல்.ஏக்களை காணவில்லை என்றும் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது, பா.ஜ.க அதை மறுத்தது.

இந்த நிலையில் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா. அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர், இதில் 6 அமைச்சர்களும் அடக்கம். பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களை பா.ஜ.க சிறை வைத்திருக்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என ஆளுநர் பலமுறை கடிதம் எழுதியும் காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைத்தே வந்தது. இந்த நாடகங்கள் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து அரங்கேறி வந்தன.

சிந்தியா - திக்விஜய் - கமல்நாத்
சிந்தியா - திக்விஜய் - கமல்நாத்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு வேறு வழியின்றி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டன. கமல்நாத் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பேராசை பிடித்தவர்கள் வென்றுவிட்டார்கள், மத்தியப் பிரதேச மக்களுக்குத் தொடர்ந்து பணி செய்வேன்” என்று பதிவிட்டிருந்தார் கமல்நாத்.

ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``உண்மை வென்றுவிட்டது. வாய்மையே வெல்லும்” என்று பதிவிட்டிருக்கிறார். அடுத்து எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். யார் முதல்வராக வருவார் என்கிற யூகங்களுக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்கே மீண்டும் முதல்வராக வரவிருப்பதாக தகவல்கள் உள்ளன. 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும், முடிவுகள் வரும்... ஆனால் அதற்கு வித்திட்ட அனைத்துச் சம்பவங்களும் ஜனநாயக நாட்டிற்கு கேலிக்கூத்தானவை என்பதை வரலாறு பதிவு செய்யும்..!

அடுத்த கட்டுரைக்கு