கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். துணை மேயர் தமிழழகன் தி.மு.க-வைச் சேர்ந்தவர். சீனியரான தமிழழகனுக்கு மேயர் பதவி வழங்கப்படும் என தி.மு.க தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மேயர் சீட்டை ஒதுக்கியது தி.மு.க தலைமை. தலைவர் ஸ்டாலின் அறிவித்துவிட்டதால் அதற்குக் கட்டுப்பட்டு அதை ஏற்றுக்கொண்டனர் கும்பகோணம் தி.மு.க நிர்வாகிகள்.

அதனால் மூன்று வார்டுகளில் போட்டியிட்டு இரண்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, மேயர் பதவிக்கான ஜாக்பாட் அடித்தது. காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவரான லோகநாதன் 17-வது வார்டில் வெற்றிபெற்ற ஆட்டோ டிரைவரான சரவணவனை மேயர் வேட்பாளராக அறிவிக்க, மேயராகப் பதவியேற்றார் சரவணன். இந்த நிலையில், சமீபத்தில் துணை மேயரான தமிழழகன் பிறந்தநாளை அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

அதற்காக தி.மு.க-வினர் அவருக்கு `செயல் தலைவரே...' என அடைமொழி கொடுத்து போஸ்டர் ஒட்டினர். மேலும், தி.மு.க கவுன்சிலர்கள் தமிழழகனை `செயல் மேயர்' எனக் குறிப்பிட்டே அழைத்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
அப்போது தி.மு.க கவுன்சிலர்கள் கோஷமிட்டதுடன், `செயல் மேயர்னு போட்டுக்கலாம்' என வாதிட்டனர். உடனே, `அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?' என மேயர் கேட்க, `போடக் கூடாது என்பதற்குச் சட்டம் இருக்கிறதா/' என தி.மு.க-வினர் எதிர்க்கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து சலசலப்புடன் கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் மேயர் சரவணன், தமிழழகன் குறித்துப் பேசியதாக வெளியே பரவிவரும் தகவல் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

தி.மு.க கவுன்சிலர்கள் இந்த விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லவிருக்கின்றனர். மேலும், தி.மு.க-வினர், `மேயர் சரவணனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்' என முடிவெடுத்திருப்பதாகவும் கும்பகோணம் அரசியல் வட்டத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறு நபரை மேயராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல்களும் தி.மு.க வட்டத்தில் ஒலிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுவது சரவணனுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து விவரமறிந்த வட்டாரங்களில் பேசினோம். ``மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது ஏமாற்றத்தைத் தந்தாலும், தி.மு.க-வினர் தலைமையின் உத்தரவை மீறி எதையும் செய்யவில்லை. குறிப்பாக, மேயராக வருவார் எனப் பலராலும் பேசப்பட்டுவந்த தமிழழகன், பாரம்பர்யமான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோஷ்டி அரசியல் செய்யாதவர். அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஸ்டாலின் சொல்வதை செய்வது மட்டுமே.

இந்த நிலையில் `செயல் தலைவர்’, `செயல் மேயர்’ விவகாரத்தில் மேயருக்கு வருத்தம் ஏற்பட... அதைக் கூட்டத்தில் கேள்வியாக முன்வைத்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தமிழழகன், `தலைவருக்காகப் பொறுத்துக்கொண்டிருக்கிறேன்' எனக் கூட்டத்திலேயே கண்கலங்கினார். அதன் பிறகாவது சரவணன் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் சரவணன், `காங்கிரஸுக்கு மேயர் பதவி ஒதுக்கப்பட்டதுமே தமிழழகன் எங்கள் கட்சி மாவட்டத் தலைவர் லோகநாதனைப் பார்த்து, `மேயர் பதவி வேண்டாம் எனச் சொல்லுங்க... எனக்கு விட்டுக் கொடுத்துடுங்க' என்று கேட்டார்' எனச் சிலரிடம் பேசியதாகத் தகவல் வெளியானது.
இதுதான் தி.மு.க-வினரைக் கோபமடையச் செய்திருக்கிறது. தி.மு.க கவுன்சிலர்கள் தமிழழகனிடம், `நீங்க அப்படிக் கேட்டீங்களா?’ என்று கேட்க... `அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என அவர் சொல்லியிருக்கிறார். மேலும், `உங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்திய சரவணனின் செயல் பற்றி முதலமைச்சருக்குக் கொண்டு செல்கிறோம். மேலும், இனி நாங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கவுன்சிலரான அய்யப்பனை மேயராக அவர்கள் அறிவிக்கட்டும்' என தி.மு.க-வினர் கூறியிருக்கின்றனர்.

அய்யப்பன் வருவதை லோகநாதன் துளியும் விரும்பாததால்தான் சரவணனை ஆதரித்தார். இந்தச் சூழலில், `அப்படியொரு நிலை வந்தால் தி.மு.க-விடமே மேயர் பதவியைக் கொடுத்துவிட வேண்டும்' என லோகநாதன் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பிரச்னை எல்லை மீறிப் போக, மேயர் பதவிக்குச் சிக்கல் வந்துவிடுமோ என உணர்ந்த சரவணன், தமிழழகன் குறித்துத் தான் பேசியதை வாபஸ் வாங்கிக்கொள்வதாகக் கூறி அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதைத் தமிழழகன் திருப்பி அனுப்பியதால் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.
தி.மு.க-வினர் ``நாங்கள் இதைச் சும்மாவிடமாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிடவிருக்கிறோம் எனக் கூறிவருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.
சரவணன் ஆதரவாளர்களோ, ``எளிமையான குடும்பத்தில் பிறந்த பாரம்பர்யமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் மேயரானதை உண்மையான ஜனநாயகம் எனப் பலரும் கொண்டாடினர். மெஜாரிட்டி இல்லாத நிலையிலும் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறார். தி.மு.க-வினரால் சரவணனை மேயராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்தக் காழ்ப்புணர்ச்சியால் மறைமுகமாகப் பல குடைச்சல்களைக் கொடுத்தனர். செயல் மேயர் எனக் கூறி மனஉளைச்சலுக்கு ஆளாக்கினர். ஒற்றையாளாகப் போராடிவரும் சரவணனுக்கு, காங்கிரஸ் கட்சி பின்னால் இருப்பது மட்டுமே பலம்" என்றனர்.
இது குறித்து மேயர் சரவணனிடம் பேசினோம். ``பிரச்னையை மாவட்டத் தலைவர் மூலம் பேசி முடித்துவிட்டோம்" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
துணை மேயர் தமிழழகனிடம் கேட்டபோது, ``சரவணன் பேசியிருப்பது அவருக்குப் பக்குவமில்லை என்பதைக் காட்டுகிறது. அத்துடன் யாரும் அவரைத் தவறாக வழிநடத்துகிறார்களா எனத் தெரியவில்லை. அவர்களின் கட்சி மாவட்டத் தலைவரான லோகநாதன், கவுன்சிலர்கள் முன்னிலையில் தமிழ், செயல் மேயராக இருப்பார் என்று மைக்கில் ஓப்பனாகப் பேசியிருந்தார்.

தலைமை என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய என்னை, நான் விட்டுகொடுக்கச் சொல்லி கேட்டதாகப் பேசியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றபோது, `என்ன தமிழ் என் மேல வருத்தமா?' என்று தலைவர் கேட்டார். அதைத்தான் மாமன்றக் கூட்டத்தில் `எனக்குப் பதவி முக்கியமல்ல. அந்த ஒற்றை வார்த்தை போதும்’ எனக் கூறிக் கலங்கினேன். எனக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் எல்லாமே தலைவர் ஸ்டாலின்தான். காங்கிரஸ் கட்சி மேயருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" என்றார்.