Published:Updated:

`நிவாரணமா... பேரிடரா..?’ - மகாராஷ்டிரா இலாகா பட்டியல் பிழையால் அப்செட்டான காங்கிரஸ் அமைச்சர்

அமைச்சர் விஜய் வதேட்டிவார்
அமைச்சர் விஜய் வதேட்டிவார் ( Twitter )

ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்களுக்கு இலாகாக்களை ஒதுக்க பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் விஜய் வதேட்டிவார் விஷயத்தில் நடந்தது சிறிய அச்சுப்பிழைதான்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரே உட்பட 36 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த கூட்டணிக் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் பதவி விலகப்போவதாக அறிவித்தனர். தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின் தங்களது பதவி விலகும் முடிவுகளைக் கைவிட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜய் வதேட்டிவார் இலாகா ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட பட்டியலில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மனவருத்தத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை
அமைச்சரவை
twitter

இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் பேசுகையில், ``விஜய் வதேட்டிவார்க்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், பட்டியலில் தவறுதலாகப் பேரிடர் மறுவாழ்வு துறை என அச்சிடப்பட்டுள்ளது. இதனால், அவர் மனவருத்தத்தில் உள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, தேவையான திருத்தம் விரைவில் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்” என்றார்.

என்.சி.பி கட்சியின் தலைவர் இதுதொடர்பாகப் பேசும்போது, ``ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்களுக்கு இலாகாக்களை ஒதுக்க பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன. விஜய் வதேட்டிவார் விஷயத்தில் நடந்தது சிறிய அச்சுப்பிழைதான்” என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர், அமைச்சர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய அஜித் பவார், ``அமைச்சரகத்தின் பணி மற்றும் கட்சிப்பணி இரண்டிலும் சம அளவில் செயல்பட வேண்டும். தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்” என்று உத்தவ் தாக்கரே கூறியதாகத் தெரிவித்தார்.

அஜித் பவார்
அஜித் பவார்
twitter

மகாராஷ்டிராவில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி விரைவில் சரியும் என்ற விமர்சனம் குறித்து பதிலளித்த அவர், ``அவர்களின் எம்.எல்.ஏ-க்களின் மன உறுதியை அதிகப்படுத்துவதற்காக அவ்வாறு கூறலாம். சில கனவுகளைச் சொல்லி அவர்களது எம்.எல்.ஏ-க்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் சென்றுதான் அமர வேண்டும் எனச் சொன்னால், தங்களது எதிர்ப்புணர்வை அவர்களின் எம்.எல்.ஏ-க்கள் இழக்க நேரிடும் என்பதற்காக இப்படிப் பேசுகிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு