நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளருமான ரூபி மனோகரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனைச் சந்தித்து மனு அளித்தார். அதில், தனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அத்துடன், தொகுதியில் நடக்கும் அரசின் பணிகளை விரைவுபடுத்தவும் கேட்டுக்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், ”நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்படவிருந்த தலைமை மருத்துவமனை அங்கிருந்து ராதாபுரத்துக்குப் போய்விட்டது. அதனால், அந்த மருத்துவமனைக்கு இணையாக மருத்துவமனையை அமைக்க சுகாதாரத்துறை அமைச்சர் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய பின்னரும், மருத்துவமனை தொடர்பான எந்தப் பணிகளும் நடக்கவில்லை.
களக்காடு பகுதியில் காட்டுப்பன்றி தொந்தரவு அதிகரித்திருப்பதால் வாழைகளைக் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. அதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கேரள மாநிலத்தைப்போல் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலிலிருந்து நீக்கி உத்தரவிட வலியுறுத்தி ஆட்சியரின் வழியாக முதலமைச்சருக்கு மனு அளித்திருக்கிறேன்.

தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டம் நிறைவுபெற்றால், நாங்குநேரி பகுதியில் இருக்கும் தரிசு நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பிருக்கிறது. அதனால் நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை வேகப்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான விளம்பரத்தில் காமராஜர் படம் இடம்பெறாதது தவறுதான். அது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் காமராஜர் பெயரைச் சொல்லாமல் எந்தக் கட்சியும் அரசியல் செய்ய முடியாது. அதனால் காமராஜர் பெயர் இடம்பெறாதது போன்ற தவறு வருங்காலத்தில் நடக்காத வகையில் பார்த்துக்கொள்ளப்படும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் ஈரோடு மக்கள் தெளிவாக இருந்ததால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார். பா.ஜ.க மாநிலத் தலைவர் தலைவர் அண்ணாமலை எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்கெல்லாம் பதில் சொல்வது அவசியம் இல்லாதது “ என்று தெரிவித்தார்.