அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கே.எஸ்.அழகிரியையும் விசாரிக்க வேண்டும்! - ‘சஸ்பெண்ட்’ ரூபி மனோகரன் காட்டம்

ரூபி மனோகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரூபி மனோகரன்

நான் நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்குப் பணி செய்வதே என் கடமை.

“நான் அடிச்ச மணி கடவுளுக்குக் கேட்டதோ இல்லையோ... கவர்மென்ட்டுக்குக் கேட்டுடுச்சு... அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை’’ என நடிகர் வடிவேலு ஆனந்தக் கூத்தாடுவதைப் போன்ற மனநிலையில் இருக்கிறார் நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ரூபி மனோகரன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில், ரூபி மனோகரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘இடைநீக்க உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சி தவறான முடிவுக்குச் செல்லாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.’’

‘‘ஆனால், அன்றைய அடிதடிக்கே நீங்கள்தான் காரணம் என்கிறார்களே?’’

‘‘என்மீது எந்தத் தவறும் கிடையாது. என் தொகுதி மக்கள் தங்களுடைய பிரச்னைகள் பற்றி கட்சித் தலைவரிடம் பேசுவதற்காக, கடந்த 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்கள். ஆனால், கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தியமூர்த்தி பவனைவிட்டு வெளியே போகும்போது, ‘அடிங்கடா அவனுங்களை...’ என்று சொன்ன பிறகே என் தொகுதி மக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, என்னிடம் மட்டும் விளக்கம் கேட்டால் போதாது. அந்தச் சம்பவத்துக்குக் காரணமான அனைவரையும் விசாரிக்க வேண்டும். அன்று கூட்டத்தை நடத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரையுமே விசாரிப்பதுதான் நியாயமானதாக இருக்கும்.’’

கே.எஸ்.அழகிரியையும் விசாரிக்க வேண்டும்! - ‘சஸ்பெண்ட்’ ரூபி மனோகரன் காட்டம்

‘‘உங்கள்மீது தவறு இல்லையென்றால், விசாரணைக்குழு அழைத்த நாளில் ஏன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை?’’

‘‘நான் நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்குப் பணி செய்வதே என் கடமை. இந்தத் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக ஏற்கெனவே ஒப்புதல் கொடுத்திருந்தேன். அதைத் தவிர்த்து விட்டுச் செல்ல முடியாது. அதனால்தான் 10 நாள் கள் அவகாசம் கேட்டேன். அதைப் புரிந்துகொள்ளா தவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்?’’

‘‘நடந்த கலவரத்துக்கு கே.எஸ்.அழகிரிதான் காரணம் என்கிறீர்களா..?’’

‘‘நான் இப்போது யாரையும் குற்றம்சாட்டும் மனநிலையில் இல்லை. இதற்கு முன்பு மாநிலத் தலைவராக இருந்த தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி எனப் பலருடன் பணிபுரிந்திருக்கிறேன். கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் தலைமையில் மாற்றம் வரலாம். இந்தச் சூழலில் காங்கிரஸ் கலாசாரத்துக்கு விரோதமாக, ‘தான்’ என்ற அகந்தையுடன் சிலர் செயல்படுவதாகக் கட்சியினரே பேசிக் கொள்கிறார்கள். ஆனாலும் எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை. இந்தப் பிரச்னையில் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்பினேன். அது நடந்திருக்கிறது.”