Published:Updated:

`24 மணி நேரம்; பணியில் 10 பேர்’ - கொரோனா வார் ரூம் தொடங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ!

கொரோனா வார் ரூம் - ஸ்ரீபெரும்புதூர்
கொரோனா வார் ரூம் - ஸ்ரீபெரும்புதூர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரம் இயங்கும் வார் ரூமைத் தொடங்கியிருக்கிறார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. அதன் செயல்பாடு குறித்தும், நோக்கம் குறித்தும் பேசினோம்...

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறையவில்லை. அதற்காக ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது; ஆக்ஸிஜன், தடுப்பூசி தட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு அவற்றைத் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தமிழக அரசால் மட்டும் தனித்திருந்து தடுத்துவிட முடியாது. அதற்குத் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், குறிப்பாகப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அதைத்தான் தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதன் தொடக்கமாக ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தன் தொகுதியில் கொரோனா வார் ரூம் ஒன்றை ஏற்படுத்தி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு உதவிவருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் கொரோனா வார் ரூம்
ஸ்ரீபெரும்புதூர் கொரோனா வார் ரூம்

பத்துக்கும் மேற்பட்டோரை வார் ரூமில் பணியில் அமர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்திவருகிறார்.

காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் யார்?

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையிடம் பேசினோம். ``ராகுல் காந்தியின் அரசியல் செயலாளர் ராஜூ ஐ.ஏ.எஸ்., மும்பையின் ஆணையாளர் கொரோனா சேவை மையத்தை அமைத்து எப்படிச் செயல்படுத்திவருகிறார் என்பது தொடர்பாக ஒரு வீடியோவை அனுப்பி, அதேபோல ஒரு வார் ரூமைத் தொடங்கி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஏற்கெனவே இப்படி ஒரு திட்டம் எங்களிடம் இருந்ததால் அவரது அறிவுறுத்தல் மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. அதற்காக பத்துப் பேரை பணியில் அமர்த்தி 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா வார் ரூம் ஒன்றை எனக்கு அளிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கிவிட்டோம். இந்த வார் ரூம் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை மட்டுமல்ல, தேவையானவர்களுக்குக் கொரோனா தொற்று பரிசோதனை செய்து அவர்களுக்கும் மருத்துவ வசதிகளைச் செய்துதரும் நோக்கில் பணியாற்றிவருகிறோம்.

செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் எம்.எல்.ஏ
செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் எம்.எல்.ஏ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முப்பதாவது நினைவுதின நாளில் இலவச ஆம்புலன்ஸ் வசதி மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கொரோனா சிகிச்சை மையத்தையும் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். அது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 10 பேர் இருக்க வேண்டிய வீட்டில் 40-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களை முறையாகக் கணக்கிட்டு அவர்களுக்கான வசதிகளைச் செய்துதர வேண்டும். கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். எனவே, தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளோம். ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தேன். அங்கிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். கொரோனாவைத் தடுப்பதில் அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் சார்பற்று, எந்த ஆதாயமும் எதிர்பார்க்காமல் எடுத்துவருகிறேன்” என்றார்.

ராஜீவ் காந்தி கொரோனா வார் ரூம்
ராஜீவ் காந்தி கொரோனா வார் ரூம்

கொரோனா பரவலில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிக்குட்பட்டு இதேபோல நடவடிக்கைகளை எடுத்தால் தமிழக மக்கள் விரைவில் இரண்டாம் அலையிலிருந்து மீண்டு வரலாம். விரைவில் இதேபோல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா தடுப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும்.

அடுத்த கட்டுரைக்கு