Published:Updated:

கோஷ்டிப்பூசல்தான் காங்கிரஸ் கட்சியின் சாபக்கேடு!

செல்வப்பெருந்தகை...
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை...

சொந்தக் கட்சியினரைத் தோலுரிக்கும் செல்வப்பெருந்தகை...

கோஷ்டிப்பூசல்தான் காங்கிரஸ் கட்சியின் சாபக்கேடு!

சொந்தக் கட்சியினரைத் தோலுரிக்கும் செல்வப்பெருந்தகை...

Published:Updated:
செல்வப்பெருந்தகை...
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை...

2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியால் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர்விட்டுக் கதறிய காட்சிகளை அவ்வளவு சீக்கிரம் கதர்கள் மறக்க முடியாது. இப்போது உள்ளாட்சித் தேர்தல் முறை போலிருக்கிறது... அதனால்தான், “உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும், அதை எதிர்கொள்ள தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று கொளுத்திப்போட்டிருக்கிறார் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. அவரைச் சந்தித்து இது பற்றிக் கேட்டபோது மனிதர் சொந்தக் கட்சியினரையே வறுத்தெடுத்துவிட்டார்!

“கூட்டணி நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது... திடீரென்று எதற்காக, `உள்ளாட்சித் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்?’’

“தனித்துப் போட்டி என்று நான் பேசவில்லை. என் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவிட்டது. சமீபத்தில் என் தொகுதியில், கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 10 வார்டுகளில் குறிப்பிட்ட மூன்று வார்டுகளை மட்டும் சுட்டிக்காட்டி, ‘இந்த வார்டுகள்தான் எங்களுக்கு வேண்டும்’ என்று ஒரு தரப்பினர் கேட்டனர். உடனே நான், ‘அப்படியெல்லாம் செலக்ட்டிவாகக் கேட்கக் கூடாது. தனியாக நின்றால், எப்படி எல்லா வார்டுகளிலுமே நன்றாக வேலை பார்ப்பீர்களோ... அதேபோல், 10 வார்டுகளிலுமே வேலை செய்தால்தான் நமது கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெறவைக்க முடியும்’ என்றுதான் பேசினேன். இதைத் தவறாக சித்திரித்துவிட்டனர். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.’’

“செல்லக்குமார் அல்லது ஜோதிமணி ஆகியோரில் ஒருவர்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறதே?’’

“இளைய தலைமுறையைச் சேர்ந்தவரை தலைவராகக் கொண்டுவர வேண்டும் என்றுதான் ராகுல் காந்தியும் நினைக்கிறார். ஆனால், யார் தலைவராக வருவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.’’

“ஆனால், ‘கே.எஸ்.அழகிரி, கட்சியைவிட்டு வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது’ என்று தமிழக பா.ஜ.க தலைவர்கூட பேசியிருக்கிறாரே?’’

“எங்கள் கட்சியைப் பற்றிப் பேச அண்ணாமலை யார்... அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் இன்னும் எத்தனை நாள்கள் அண்ணாமலை இருக்கப்போகிறார் என்பதை முதலில் பார்ப்போம்... அங்கேயும் ஆயிரத்தெட்டு கோஷ்டிப்பூசல்கள் இருக்கின்றன. இவரை அங்கே யாரெல்லாம் விரும்பினார்கள், யாரெல்லாம் விரும்பவில்லை, எல்.முருகனுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது என்ற உண்மைகளெல்லாம் அண்ணாமலைக்கே நன்றாகத் தெரியும். எனவே, எங்கள் உட்கட்சிப் பிரச்னைகளில் அவர் தலையிட வேண்டாம்.’’

கோஷ்டிப்பூசல்தான் காங்கிரஸ் கட்சியின் சாபக்கேடு!

“2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிரான அணியைத் திரட்டுவதில் மம்தா பானர்ஜி காட்டுகிற ஆர்வத்தைக்கூட, உங்கள் கட்சித் தலைமை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறதே?’’

“அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்னைகள் இருக்கின்றனதான்... ஒப்புக் கொள்கிறோம். கட்சிக்காக 24 மணி நேரமும் ராகுல் காந்தி உழைக்கிறார். ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்காகக் குரல் கொடுக்கிறார். ஆனால், கட்சியிலுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஓரிருவர் மட்டுமே இந்த முன்னெடுப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர... மற்றவர்களிடம் அக்கறை இல்லை. இதுதான் உண்மை.’’

“தமிழகக் காங்கிரஸ் கட்சியிலும்கூட, கோஷ்டிப்பூசல்கள் இருக்கின்றனதானே?’’

“தமிழகக் காங்கிரஸுக்குள் நான்கைந்து குரூப்பிசங்கள் இருக்கின்றன. இவர்கள் ஆளுக்கொரு பக்கமாக கட்சியை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இதுதான் கட்சியை வளரவிடாமல் செய்கிற சாபக்கேடு! இந்த குரூப்களெல்லாம் ஒழிந்தால்தான், நாங்கள் நினைக்கின்ற ‘காமராஜர் ஆட்சி’ வரும். ராகுல் காந்தி, ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வந்து போகும்போதும் அவருக்குள் ஏற்படுகிற தவிப்பு ஒரு தாயின் மனநிலைக்கு ஈடானது. இந்த மக்களுக்காகத் தன் உயிரையும் பணயம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. ஆனால், இந்த அணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ‘தங்களுக்கு கட்அவுட் வைத்து, போஸ்டர் அடித்து துதி பாட வேண்டும்’ என்ற சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ‘என் அணியில் உள்ளவருக்கு கட்சிப் பதவி தர வேண்டும்’ எனப் போட்டி போடுகிறார்கள். கடைசியில், யாருக்குப் பதவி வாங்கிக்கொடுக்கிறார்களோ அவர்களே வேறு கட்சிக்குப் போய்விடுகிறார்கள். இதுதான் நெட் ரிசல்ட்!’’