Published:Updated:

முதல்வர் ஸ்டாலினை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன்! - செல்வப்பெருந்தகை ஒப்புதல்

செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை

அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் பாராட்டுகிறார். செங்கோட்டையன் பாராட்டுகிறார். தனபால் பாராட்டுகிறார். நான் மட்டும் பாராட்டக் கூடாதா?”

முதல்வர் ஸ்டாலினை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன்! - செல்வப்பெருந்தகை ஒப்புதல்

அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் பாராட்டுகிறார். செங்கோட்டையன் பாராட்டுகிறார். தனபால் பாராட்டுகிறார். நான் மட்டும் பாராட்டக் கூடாதா?”

Published:Updated:
செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
செல்வப்பெருந்தகை

உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான செல்வப்பெருந்தகை. உதய்பூர் தீர்மானங்கள், தமிழ்நாட்டு அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“குடும்ப அரசியலிலும், வாரிசு அரசியலிலும் ஊறித்திளைக்கும் காங்கிரஸ் கட்சியில், `ஒருவருக்கு ஒரு பதவி’, `ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சீட்’ போன்ற முடிவுகளைச் செயல்படுத்துவது சாத்தியம்தானா?”

“காங்கிரஸ் கட்சியில் ஒருவரே பல பதவிகள் வகிப்பது, குடும்ப உறுப்பினர்களை எம்.எல்.ஏ-வாக, எம்.பி-யாக ஆக்குவது என்ற போக்கு நீண்டகாலமாக இருக்கிறது. அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கான முடிவுகளை காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது. இனிவரும் காலங்களில் அத்தகைய போக்குகள் களையப்படும்.”

“ப.சிதம்பரம் போன்று தொடர்ச்சியாகப் பதவிகளை அனுபவிப்பவர்கள், தங்கள் வாய்ப்புகளை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுப்பார்களா?”

“தலைவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை எதிர்பார்க்கிறது. எல்லாப் பதவிகளும் தலைவர்களின் குடும்பத்துக்குத்தான் என்ற எண்ணம் காரணமாக, நம்பிக்கையின்றி இருந்த தொண்டர்களுக்கு உதய்பூர் பிரகடனம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.”

“ ‘செல்வப்பெருந்தகையைத் தூண்டிவிட்டு அ.தி.மு.க-வுக்கு எதிராக தி.மு.க பேசவைக்கிறது’ என்று உங்கள் சட்டமன்றச் செயல்பாடு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறாரே?”“தி.மு.க தூண்டிவிட்டுத்தான் பேச வேண்டும் என்கிற அளவுக்கு நான் விவரம் இல்லாதவன் கிடையாது. நான், உள்மனதுடன் தி.மு.க-வை ஆதரிக்கிறேன். முதல்வர் ஸ்டாலினை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன். என் மனதும் அறிவும் சொல்வதைக் கேட்கிறேன். ஒருவர் நல்லது செய்தால், அவரைப் பாராட்டுவதில் தவறு ஒன்றும் கிடையாது.”

“உங்களின் தி.மு.க ஆதரவு நிலைப்பாடும், முதல்வருக்கான பாராட்டுரைகளும் மிதமிஞ்சிய அளவுக்கு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறதே?”

“உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முதல்வரைப் பாராட்டுகிறார். ஆளுநர் பாராட்டுகிறார். அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் பாராட்டுகிறார். செங்கோட்டையன் பாராட்டுகிறார். தனபால் பாராட்டுகிறார். நான் மட்டும் பாராட்டக் கூடாதா?”

முதல்வர் ஸ்டாலினை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன்! - செல்வப்பெருந்தகை ஒப்புதல்

“ஜெயலலிதா குறித்து நீங்கள் பேசிய கருத்துகளை நீக்கச் சொல்லி, உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வான விஜயதரணியே சட்டமன்றத்தில் குரல் கொடுத்தாரே?”

“தஞ்சாவூரில் தேர் எரிந்த சம்பவம் குறித்துப் பேசப்பட்டபோது ‘மக்களின் உயிரைக் காக்க இந்த அரசு தவறிவிட்டது... அந்த மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். நான் பேசுவதற்கான வாய்ப்பு வந்தபோது, 1993-ம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தின் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசியதைக் குறிப்பிட்டேன். ‘விபத்தை அரசியலாக்கக் கூடாது... அரசியல் வேறு ஆன்மிகம் வேறு... ஆன்மிகத்தில் நடந்ததை அரசியலாக்கலாமா... ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி அமைப்பினர் உணவு கொடுத்தபோதுதான் நெரிசல் ஏற்பட்டது. சதி நடந்துவிட்டது. நானும் என் தோழியும் புனித நீராடச் சென்றிருந்தோம் இதில் என்ன தவறு இருக்கிறது... அங்கு 48 பேர் உயிரிழந்ததற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?’ என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். அவைக்குறிப்பில் இடம்பெற்ற அவரது பேச்சைத்தான் நான் குறிப்பிட்டேன். உடனே, என் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் தகராறு செய்தார்கள். என் பேச்சை நீக்க வேண்டுமென்று விஜயதரணியும் கூறினார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி விஜயதரணி பேசியதற்காக, எங்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறது.”

“உங்கள் செயல்பாடுகள் குறித்து டெல்லிக்குப் புகார்கள் போயிருக்கின்றனவாமே?”

“என்மீது என்ன புகார் சொல்ல முடியும்... ‘தி.மு.க அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்... ஆட்சியைப் பாராட்டுகிறார்’ என்றா... கூட்டணியில் இருக்கிறோம். ஆட்சி நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. நல்லாட்சியைப் பாராட்டுவதில் என்ன தவறு?”

“ஓராண்டுக்கால தி.மு.க ஆட்சியில் மைனஸே இல்லை என்கிறீர்களா?”

“அதிகாரிகள் அரசைத் தவறாக வழிநடத்திவிடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. உதாரணமாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகக் கூறி, அதிகாரிகளின் தவறான வழிகாட்டலால் சில இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதை மைனஸாகப் பார்க்கிறேன்.”

“ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு தடை, பட்டினப்பிரவேசத்துக்குத் தடைவிதித்து பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது போன்ற சறுக்கல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“இதுவும் அதிகாரிகளின் தவறான முடிவுகள்தான். ஆதீனம் விவகாரத்தில் அரசையோ, அமைச்சரையோ ஆலோசனை செய்யாமல் கோட்டாட்சியர் முடிவெடுத்துவிட்டார். ஆம்பூரில் பீஃப் பிரியாணி வேண்டாம் என்று கலெக்டர் முடிவெடுத்துவிட்டார்!’’

“தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்கப் பலரும் போட்டிபோடுகிறார்கள். அந்த ரேஸில் நீங்களும் இருக்கிறீர்களா?”

“நிச்சயமாக இல்லை. காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவராக ஆளுங்கட்சிக்கு ஆலோசனைகளைச் சொல்ல முடிகிறது. எதிர்க்கட்சிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடிகிறது. இந்தப் பணியை மனநிறைவுடன் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை.”

“ `பேரறிவாளன் விடுதலையை விமர்சிக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு விமர்சனம் செய்வதும், அவரது விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் நியாயமா?”

“இந்திய தேசத்தின் தன்னிகரற்ற தலைவரான ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய வலியும் வேதனையும் என்றைக்கும் ஆறாது. எனவே, வாயில் வெள்ளைத்துணியைக் கட்டிக்கொண்டு எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினோம். அதில் தவறொன்றும் இல்லை!”