அரசியல்
Published:Updated:

காங்கிரஸை அழித்துவிட்டார் விஜயதரணி... உள்ளூரிலும் கிளம்பும் எதிர்ப்பு!

விஜயதரணி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயதரணி

மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் விஜயதரணி, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. எப்போதும் சென்னையில்தான் இருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், மாநிலம் முழுவதும் டிஜிட்டல் வழி உறுப்பினர் சேர்க்கைப் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கட்சிக்குள் சேர்த்து, முதன்மை மாவட்டமாகத் திகழ்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இந்த நிலையில், டிஜிட்டல் வழி உறுப்பினர் சேர்க்கையில் தீவிர களப்பணியாற்றிய தொண்டர்களுக்குக் கட்சிப் பதவிகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கொந்தளிக்கின்றனர் குமரி மேற்கு மாவட்ட, கதர்ச்சட்டைக்காரர்கள்!

இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘டிஜிட்டல் வழி உறுப்பினர்களைச் சேர்க்காதவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கக் கூடாது என்பது கட்சி மேலிட முடிவு. ஆனால், குமரி மேற்கு மாவட்டத்தில் டிஜிட்டல் வழி உறுப்பினர்களைச் சேர்க்காதவர்களுக்கும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொறுப்புகளை வாரி வழங்கியிருக்கிறார் விஜயதரணி. மாநிலத் தலைவரின் லெட்டர்பேடில் நிர்வாகிகளை அறிவிக்காமல், ஒரு பேப்பரில் பெயர்களைப் போட்டு சத்தியமூர்த்தி பவன் சீல் வைத்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸை அழித்துவிட்டார் விஜயதரணி... உள்ளூரிலும் கிளம்பும் எதிர்ப்பு!

இதுமட்டுமல்ல... மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் விஜயதரணி, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. எப்போதும் சென்னையில்தான் இருக்கிறார். என்றாவது ஒரு நாள் தொகுதிக்கு வந்து ஐந்தாறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பத்துப் பதினைந்து போட்டோக்கள் எடுப்பார். தினமும் ஒரு போட்டோ வீதம் முகநூலில் தொடர்ந்து போட்டு நிறைய நாள்கள் ஊரில் இருப்பதுபோலக் காட்டிக்கொள்வார். ஒட்டுமொத்தத்தில், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி அழிந்ததற்கு விஜயதரணிதான் முழுப் பொறுப்பு’’ என்றனர் குற்றச்சாட்டாக.

காங்கிரஸை அழித்துவிட்டார் விஜயதரணி... உள்ளூரிலும் கிளம்பும் எதிர்ப்பு!

விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளருமான கே.ஜி.ரமேஷ்குமார், ‘‘தேர்தல் அதிகாரிகளிடம் பேசி, தனக்கு வேண்டியவர்களை மேல்புறம் வட்டாரம், குழித்துறை நகர நிர்வாகிகளாக நியமித்திருக்கிறார் விஜயதரணி. ஏற்கெனவே விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகள் குறைந்துகொண்டேவருகின்றன. இப்போது 15% கூட பூத் கமிட்டி இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. கட்சியையும் வளர்க்க மாட்டேன், தொகுதியையும் விட்டுத்தர மாட்டேன் என்று அடம்பிடிக்கும் விஜயதரணியை இனியும் வேட்பாளராக நிறுத்தினால் கட்சி காணாமல்போய்விடும்” என்றார் ஆவேசமாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விஜயதரணி எம்.எல்.ஏ-விடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். “கட்சியில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தவர்களுக்குத்தான் பதவி கொடுத்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் பஸ் டிக்கெட்கூட எடுத்து என்னைப் பார்க்க வர வேண்டாம். அவர்கள் வீட்டில் இருந்துகொண்டே எனக்கு போன் செய்து கோரிக்கையைச் சொன்னாலே போதும்.அதிகாரியை போனில் அழைத்து உடனடியாக வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறேன். கட்சிக்காரர்களின் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போகிறேன். கட்சி வேலைக்காகத்தான் வெளியிடங்களுக்கும் போய்வருகிறேன். எனது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரியும். மற்றபடி விளம்பரத்துக்காகப் பேசும் சிலருக்கு பதிலளிக்க விரும்பவில்லை” என்றார்.

காங்கிரஸ் என்றாலே புகார்களும் புலம்பல்களும்தானே!