Published:Updated:

முதல்வரே கூச்சப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்! - விளாசும் விஜயதரணி

விஜயதரணி
பிரீமியம் ஸ்டோரி
விஜயதரணி

தாலிக்குத் தங்கம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க உறுப்பினர்கள் சிலரின் மனதிலும் இருப்பதுதான்.

முதல்வரே கூச்சப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்! - விளாசும் விஜயதரணி

தாலிக்குத் தங்கம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க உறுப்பினர்கள் சிலரின் மனதிலும் இருப்பதுதான்.

Published:Updated:
விஜயதரணி
பிரீமியம் ஸ்டோரி
விஜயதரணி

அ.தி.மு.க திட்டங்களுக்கு ஆதரவு, காங்கிரஸ் கட்சிக்காரர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, சபாநாயகரின் கோபத்துக்கு ஆளாவது என வழக்கம்போல சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் அதிரடி காட்டிக்கொண்டிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி... அவருடன் ஒரு பேட்டி...

“ ‘நேரத்துக்கு வருவதில்லை, மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள்’ என்று சபாநாயகர் உங்கள் மீது புகார் வைத்திருக்கிறாரே?”

“நாம் கேட்கவேண்டிய கேள்வி, லிஸ்ட் ஆகியிருந்தால் நாம் முன்னரே செல்லலாம். நாம் கொடுக்கும் கேள்விகள், கவன ஈர்ப்பு தீர்மானம் என எதுவும் லிஸ்ட் ஆவதும் இல்லை, விவாதங் களுக்கு வருவதுமில்லை. அப்படியிருக்கும்போது நேரத்துக்குச் சென்றால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? அமைச்சர்கள் பதிலை அடுத்து, துணைக் கேள்விகள் கேட்கவேண்டியிருக்கும். ஆனால், அதற்கும் வாய்ப்பளிப்பதில்லை. நாம் தேர்ந்தெடுக்கப்பட்டதே மக்களின் பிரச்னைகளைச் சட்டசபையில் கேட்பதற்காகத்தானே... அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமல்லவா... என்னை அலட்சியப்படுத்தும்விதமாக சபாநாயகர் பேசியிருந்தாலும்கூட, அதன் மூலம் நான் மக்களுக்காக அதிக கேள்விகள் கேட்கிறேன் என்பது வெளியில் சென்று சேர்ந்துவிட்டது. அது போதும் எனக்கு.”

முதல்வரே கூச்சப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்! - விளாசும் விஜயதரணி

“மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கேள்வி கேட்க நேரம் ஒதுக்க வேண்டுமல்லவா?’’

“இல்லை என்று சொல்லவில்லையே! 28 நாள்களில் 54 துறைகளின் மானியக் கோரிக்கைகள் நடக்கின்றன. இந்தக் குறுகிய காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் இருக்கிறது. அதனால் அதிக கேள்விகளைக் கேட்கிறேன். கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சரியான திட்டமிடல் இருக்க வேண்டும் அல்லது சட்டப்பேரவை நடக்கும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.”

“அ.தி.மு.க திட்டங்களுக்கு ஆதரவாக நீங்கள் பேசுவதை எப்படிப் புரிந்துகொள்வது?”

“அ.தி.மு.க திட்டம் என்பதைவிட, பெண்களுக்கான திட்டம் என்பதால்தான் நான் ஆதரித்துப் பேசினேன். ‘தாலிக்குத் தங்கம்’ வழங்கும் திட்டத்தில் நானே பலருக்கும் உதவியிருக்கிறேன். அப்போது அந்தப் பெண்கள் அடையும் மகிழ்ச்சியையும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதும் நல்ல திட்டம்தான் என்றாலும், அதனால் அனைத்துப் பெண்களும் பயனடையப்போவதில்லை. ஏனென்றால் இன்றைக்கும் உயர்கல்விக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. ஆனால், தாலிக்குத் தங்கம் என்பது அனைத்துப் பெண்களுக்கும் பயன்படும் திட்டம். தாலிக்குத் தங்கம், உயர்கல்விக்கு உதவித்தொகை இரண்டையும் அரசு செயல்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொல்வேன்.”

“அ.தி.மு.க-வினர் மேஜையைத் தட்டியதோடு ரோஜாப் பூவும் உங்களுக்குக் கொடுத்தார்களே, அதற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸாரின் ரியாக்‌ஷன் என்ன?”

“தாலிக்குத் தங்கம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க உறுப்பினர்கள் சிலரின் மனதிலும் இருப்பதுதான். ஆனால், வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. என்னுடைய கட்சிக்காரர்கள் என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை. பெண்களின் உரிமைகள் குறித்துப் பேசும்போது வரவேற்பு இருக்கும் என்பதை இச்சம்பவம் இன்னும் அழுத்தம் திருத்தமாக எனக்கு உணர்த்தியது.”

முதல்வரே கூச்சப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்! - விளாசும் விஜயதரணி

“செல்வப்பெருந்தகை பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என நீங்கள் கோரிக்கை வைத்தது ஏன், என்ன நடந்தது?”

“தஞ்சாவூர் தேர்த் திருவிழாவின்போது தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த மகாமகம் துயரத்தைக் குறிப்பிட்டதோடு ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து அநாகரிகமான கருத்தைப் பதிவு செய்தார். அதை நான் அப்போதே கண்டித்ததோடு அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகருக்குக் கோரிக்கைவைத்தேன். பேசிய செல்வப்பெருந்தகையையும் அந்தப் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கச் சொல்லச் சொல்லி வலியுறுத்தினேன். ஆனால், அதை அவர்கள் காதிலேயே ஏற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. செல்வப்பெருந்தகை என்னிடமும் கோபமாக நடந்துகொண்டார்.”

“முதல்வரைப் புகழ்வதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடையே போட்டி இருக்கிறதோ?”

“இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் எதற்காகப் புகழ்கிறார்கள் என்பதெல்லாம் புரியாதவரா முதல்வர்... இந்த ஜால்ராக்கள், புகழ்ச்சிகளெல்லாம் வேண்டாம் என முதல்வர் நேரடியாகச் சொல்லியும் புகழ்கிறார்கள் என்றால் அவரைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்றே அதைச் செய்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. முதல்வரே கூச்சப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள். அதை அவர் விரும்பவும் இல்லை. அது இவர்களுக்குப் புரியவுமில்லை.”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா?”

“இதுவரை பெண் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படவில்லை. இனியும் அதற்கு வாய்ப்பே இல்லை. அரசியலில் பெண்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றனதான். ஆனால், அதையும் மீறி நாம் நம்முடைய அரசியலைச் செய்யவேண்டியிருக்கிறது.”

“தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தி.மு.க மக்களுக்கு நிறைய செய்ய நினைக்கிறது. ஆனால், நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அதை முழுவதுமாகச் செய்து முடிக்க முடியவில்லை. ஒருவேளை இந்த நிதி நெருக்கடியைச் சமாளித்துவிட்டார்கள் என்றால், இன்னும் நல்ல நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான எண்ணம் முதல்வரிடம் இருக்கிறது. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிகச்சிறப்பான ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. எல்லோரையும் அரவணைத்து, மக்களுக்காக நிறைய திட்டங்களைச் செய்வதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறார். அதற்கு நல்ல பலன் கிடைக்கும். கிடைக்க வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism