அரசியல்
அலசல்
Published:Updated:

எனக்கே தலைவர் பதவி வேண்டும்! - போர்க்கொடி தூக்கும் விஜயதரணி

விஜயதரணி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயதரணி

தலைவர் பதவி கேட்பவர்கள் பெரும்பாலும் எம்.பி-க்களாக இருக்கிறார்கள். எம்.பி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான சண்டையால், சத்தியமூர்த்தி பவன் ரத்தம் பார்த்திருக்கிறது. ஆனாலும், அந்தப் பதவிக்கு மல்லுக்கட்டுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்தச் சூழலில், ‘தலைவர் பதவி பெண் ஒருவருக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும்’ எனப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் விஜயதரணி எம்.எல்.ஏ. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“தமிழ்நாடு காங்கிரஸுக்குப் பெண் ஒருவரையே தலைவராக்க வேண்டும் என திடீரென வலியுறுத்தக் காரணம் என்ன?”

“தமிழ்நாடு காங்கிரஸுக்கு 60 ஆண்டுக்காலமாக பெண் தலைவரே கிடையாது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பெண்கள் வாக்கு அதிக அளவில் அவருக்கே சென்றது. அவருடைய மறைவுக்குப் பிறகு காங்கிரஸ், தி.மு.க கூட்டணிப் பக்கம் அந்த வாக்குகள் ஓரளவுக்குத் திரும்பியிருந்தாலும்கூட, பெண் தலைவர்கள் இல்லாததால் அந்த வாக்குகள் முழுமையாக வரவில்லை. இப்போதுள்ள சூழலில், திராவிடக் கட்சிகளில் பெண் தலைவர் சாத்தியமில்லை. எனவே, தேசியக் கட்சிகள் மாநிலத்தில் பெண் தலைவரைக் கொண்டுவரலாம்.”

விஜயதரணி
விஜயதரணி

“உங்களுக்குப் பதவி வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சுற்றிவளைத்துக் கேட்கிறீர்களா?”

“அப்படிக் கேட்பதில் என்ன தவறிருக்கிறது... கட்சியில் நான் சீனியர். கடந்த ஆண்டு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான வாக்கெடுப்பு நடந்தபோது பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் என்னையே ஆதரித்தார்கள். ஆனாலும், ‘சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை தலித் ஒருவருக்கே கொடுக்க வேண்டும்’ என்று கட்சி முடிவெடுத்ததால் அதற்கு நான் ஒத்துழைத்தேன். அதேநேரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கட்சித் தலைமை முடிவெடுக்கும் பட்சத்தில், எனக்கே தலைவர் பதவி தர வேண்டும் என அகில இந்திய தலைமையிடம் கேட்டிருக்கிறேன்.”

“பெண் என்ற முறையில், கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தலைவர் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?”

“தலைவர் பதவி கேட்பவர்கள் பெரும்பாலும் எம்.பி-க்களாக இருக்கிறார்கள். எம்.பி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்தால், அவர்கள் ஒன்று தங்கள் தொகுதியைக் கோட்டைவிடுகிறார்கள் அல்லது மாநிலம் முழுக்கப் பிரசாரம் செய்யும் கடமையைச் செய்ய முடியாமல் போய்விடுகிறது.”

“ஒருவேளை எம்.பி தேர்தலில் நிற்காமல், அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால்..?”

“எம்.பி சீட் வேண்டாம் என்று ஜோதிமணி இதுவரை சொல்லவில்லை. எம்.பி-யாக இருப்பவர்கள் மீண்டும் எம்.பி தேர்தலில் நிற்கத்தான் ஆசைப்படுவார்கள். தலைவர் பதவியையும் வாங்கிவிட்டு, அப்புறம் எம்.பி தேர்தலிலும் நின்றால் அது ஏமாற்று வேலையாக இருக்கும். மாநிலத் தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றுப்போவது வழக்கமாக இருக்கிறது. அதனாலேயே எம்.பி-க்களுக்குத் தலைவர் பொறுப்பு வேண்டாம் என்கிறேன்.”

“எம்.பி-களுக்கு தலைவர் பதவி கொடுக்கக் கூடாது என்கிறீர்களே... 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் நீங்கள் ஒதுங்கத் தயாரா?”

“காங்கிரஸ் தலைவர் பதவி 3 வருடம் தான். அதற்கு மேல் நீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் இருக்கிறது. இப்போது பொறுப்பு கொடுத்தால், 2026 தேர்தலுக்கு முன்பாகவே எனது பதவிக் காலம் முடிந்து விடும். ஆனால், எம்.பி தேர்தல் அடுத்த ஆண்டே வருகிறதே?”

“நீங்கள் தலைவரானால் தமிழ்நாடு காங்கிரஸில் முதலில் எதை, யாரை மாற்றுவீர்கள்?”

“முதலில் கோஷ்டிப்பூசலைத்தான் சரிசெய்வேன். கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும். மற்ற பதவிகளில் பெரிய மாற்றமெல்லாம் தேவைப்படாது. மூத்த தலைவர்கள், மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்துதான் முடிவுகளை எடுப்பேன்.”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இடத்தைப் பிடிக்க ஏன் இவ்வளவு போட்டி?”

“ஒருவரின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் அடுத்தடுத்த ஆட்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்தும் நீடிக்கிறார். அப்படியிருக்கும்போது எங்களைப் போன்றவர்கள் புதிய வாய்ப்புகளை எதிர்பார்ப்பது நியாயம்தானே...

“கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் வளர்ச்சி அடைந்ததா... இல்லையா?”

“அவருடைய காலத்தில்தான் தமிழ்நாடு காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ-க்கள், 8 எம்.பி-க்கள் கிடைத்தார்கள். அதேநேரம், கோஷ்டிப்பூசல்களை அவரால் தவிர்க்க முடியவில்லை.”

“கே.எஸ்.அழகிரி - ரூபி மனோகரன் கோஷ்டிப்பூசலில் உங்கள் ஆதரவு யாருக்கு?”

“நான் யார் பக்கமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அந்தச் சம்பவமே வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. மீண்டும் இவ்வாறு நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.”

“குஜராத் தேர்தலில், ராகுல் காந்தியின் பிரசாரம் எடுபடவில்லையே?”

“குஜராத்தில் நடந்தது ஓட்டுப் பிரிப்பு. அதற்கு ராகுலைக் குற்றம் சொல்ல முடியாது. அவரது யாத்திரை அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுலின் நடைப்பயணம், பிரியங்கா காந்தியின் பிரசாரம் எடுபட்டதாலேயே இமாச்சலில் வெற்றி பெற்றிருக்கிறோம்.”

“குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு ஆம் ஆத்மிதான் காரணமா?”

“ஆம், கடந்த தேர்தலில் அங்கு பா.ஜ.க - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி இருந்தது. இந்த முறை ஆம் ஆத்மி உள்ளே வந்ததால் அது மும்முனைப் போட்டியாக மாறிவிட்டது. காங்கிரஸின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்ததே, எங்கள் தோல்விக்கு முக்கியக் காரணம். பா.ஜ.க எங்கள் சித்தாந்த எதிரியாக இருந்தாலும், மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரிக்கும் ஆம் ஆத்மிதான் எங்களின் முதல் எதிரி!”