Published:Updated:

பணம்தான் தகுதியென்றால், தொகுதிகளை ஏலத்துக்கு விட்டுவிடலாமே! - கொதிக்கும் ஜோதிமணி

ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பு. அதை காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க எனக் கட்சிகளோடு இணைத்துப் பேசக் கூடாது.

பணம்தான் தகுதியென்றால், தொகுதிகளை ஏலத்துக்கு விட்டுவிடலாமே! - கொதிக்கும் ஜோதிமணி

தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பு. அதை காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க எனக் கட்சிகளோடு இணைத்துப் பேசக் கூடாது.

Published:Updated:
ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, கூட்டணித் தலைமை காங்கிரஸ் கட்சியைக் கண்ணீர்விட வைத்தது என்றால், வேட்பாளர் தேர்வின்போது ‘அதிரிபுதிரி’ போராட்டங்களால் காங்கிரஸ் கட்சியையே கதறவிட்டவர்கள் கதர்ச்சட்டையினர். “பணம் படைத்தவர்களுக்கே காங்கிரஸ் கட்சியில் சீட் வழங்கப்படுகிறது’’ என்று கட்சித் தலைமைக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை சந்தித்தோம்...

“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துச் சந்தேகக் கேள்வி எழுப்புகிறீர்களே... கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகத் தான் செயல்பட்டதா?’’

“தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பு. அதை காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க எனக் கட்சிகளோடு இணைத்துப் பேசக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்தி முடித்துவிட்டனர். பெரிய அளவில் வன்முறை என்று எதுவும் கிடையாது என்பதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் சிறப்பைத்தான் காட்டுகிறது. அதேசமயம், ‘வாக்கு இயந்திரத்தில் எந்தச் சின்னத்தை அழுத்தினாலும் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்துக்கே வாக்கு விழுகிறது’ என்ற புகார் அடிக்கடி எழுகிறது. இது பற்றி தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் தருவதில்லை. அதேபோல வாக்கு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளோடு, வி.வி.பேட் இயந்திரத்தில் பதிவாகியுள்ளவற்றையும் எண்ணி உறுதிசெய்துகொள்வதை நடைமுறைப்படுத்த ஏன் மறுக்கிறார்கள் என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளைத்தான் நான் எழுப்புகிறேன்.’’

பணம்தான் தகுதியென்றால், தொகுதிகளை ஏலத்துக்கு விட்டுவிடலாமே! - கொதிக்கும் ஜோதிமணி

“வாக்கு இயந்திரம், தேர்தல் ஆணையம் குறித்தெல்லாம் வழக்கமாகச் சந்தேகம் எழுப்புகிற எதிர்க்கட்சிகள், தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்ற பிறகு மட்டும் எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லையே?’’

“சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற பிறகும்கூட, தேர்தல் ஆணையம் மீது வைக்கப்படுகிற புகார்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறோம். மத்தியப் பிரதேசத்தில், வாக்காளர் பட்டியலில் 45 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. தெலங்கானாவில் 28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இது குறித்து உச்ச நீதிமன்றத்திலேயே காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்தது. ஆனாலும் நீதி கிடைக்கவில்லை. கடந்தமுறை நடைபெற்ற கரூர் தேர்தலிலேயேகூட 30,000 தி.மு.க வாக்குகளை நீக்குவதற்கு முயற்சி நடந்தது. பின்னர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, தேர்தல் ஆணையத்தில் புகார்செய்து, அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். இது குறித்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.’’

“நடந்து முடிந்த தேர்தலில், ‘காங்கிரஸ் கட்சி, பணக்காரர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியிருக்கிறது’ என்று பொதுவெளியிலேயே போட்டு உடைத்திருந்தீர்களே... நியாயம்தானா?’’

“காங்கிரஸ் கட்சிமீது நான் முதன்முறையாக விமர்சனம் வைக்கவில்லை. ஏற்கெனவே பலமுறை விமர்சித்திருக்கிறேன். இதுதான் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை. நான் மட்டுமல்ல, ஏற்கெனவே பலர் கட்சியின் தலைமையை எதிர்த்தேகூடப் பேசியிருக்கின்றனர். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாருமே கிடையாது. ஜனநாயகத்தைச் சுற்றி இறுக்கமான கோட்டையைக் கட்டியெழுப்பாமல், இயல்பாக இருந்துவரும் இந்த ஜனநாயகமே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. இப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை கொண்ட கட்சியாக இருப்பதாலேயே நானும் காங்கிரஸில் இருக்கிறேன்.”

பணம்தான் தகுதியென்றால், தொகுதிகளை ஏலத்துக்கு விட்டுவிடலாமே! - கொதிக்கும் ஜோதிமணி

“பணம் படைத்தவர்களால்தான் இன்றைய தேர்தல் நடைமுறைகளை எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என்பதுதானே இங்கே யதார்த்தமாக இருக்கிறது?’’

“இது தவறான புரிதல் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். 2019 எம்.பி தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்டபோது, என்னிடம் ‘பெருந்தொகை இருக்க வேண்டும்’ என்று கட்சித் தலைமை எதிர்பார்த்திருந்தால், எனக்கு எப்படி சீட் கிடைத்திருக்கும்... நான் எப்படி எம்.பி ஆகியிருக்க முடியும்? தேர்தலில் வெற்றிபெற, பணம்தான் அளவுகோல் என்றால், அரசியல் கட்சிகள் தொகுதிகளை ஏலத்துக்கு விட்டுவிடலாமே! ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும், மக்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையே வரிசையில் வந்து நின்று ஏன் வாக்குச் செலுத்த வேண்டும்?”

“வெளிப்படையாகக் கேள்வி கேட்பதை நீங்கள் ஜனநாயகம் என்கிறீர்கள். ஆனால், ‘ஜோதிமணி அராஜக அரசியல் செய்கிறார்’ என்கிறாரே கோபண்ணா?’’

“கோபண்ணா அப்படித்தான் சொல்வார். எல்லோருக்குமே தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருக்கத்தான் செய்யும். இன்றைக்கு என்மீது விமர்சனங்கள் வைக்கக்கூடிய பலரும் கடந்த 2019 தேர்தலின்போது, எனக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று கூறியவர்கள்; என்னை ஒழிக்க நினைத்தவர்கள். இது போன்ற உட்கட்சி மோதல்கள் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கத்தான் செய்யும். இதையெல்லாம் மீறி, இன்றைக்கு நான் எம்.பி-யாக இருக்கிறேன் என்றால், அது ராகுல் காந்தி என்ற ஒரு தலைவரால் மட்டுமே!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism