Published:Updated:

காமராஜரை போன்றவர்கள் காங்கிரஸில் உருவாகும் சூழல் இல்லை! - உண்மையை உடைக்கும் ஜோதிமணி...

ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது... எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை வேண்டும். கட்சியைவிட, அதிகாரத்தைவிட, பதவியைவிட நாடும் நாட்டு மக்களும் முக்கியம்

காமராஜரை போன்றவர்கள் காங்கிரஸில் உருவாகும் சூழல் இல்லை! - உண்மையை உடைக்கும் ஜோதிமணி...

நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது... எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை வேண்டும். கட்சியைவிட, அதிகாரத்தைவிட, பதவியைவிட நாடும் நாட்டு மக்களும் முக்கியம்

Published:Updated:
ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

காங்கிரஸ் கட்சியின் ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விகள், சோனியா காந்தி குடும்பம் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்று எழுந்த கோஷத்தின் பின்னணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கான போட்டி... என நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் கேட்பதற்கு விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அப்படி அவரிடம் பேசியதிலிருந்து...

“ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இது பெரும் பின்னடைவுதான். கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி கட்டமைப்புரீதியாக வலுவாக இல்லாததே தோல்விக்குக் காரணம். மாநிலக் கட்சிகளைப்போல பூத் கமிட்டி அமைத்து மக்களைச் சந்திப்பதை பா.ஜ.க தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது... அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. அதோடு தேர்தலில் பெரிய அளவில் பணத்தையும் முதலீடு செய்திருக்கிறது. அம்பானியும் அதானியும் நாட்டைத் தங்களுக்கு விற்ற மோடிக்குப் பிரதி உபகாரமாகத் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்கிறார்கள். இவையெல்லாம்கூட காங்கிரஸின் தோல்விக்குக் காரணங்கள். ஆனாலும், இந்தப் பிரச்னைகளையெல்லாம் நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.”

“கட்டமைப்பு வலுவாக இல்லை என்கிறீர்கள்... இனி அதைச் சரிசெய்து மீண்டுவர முடியும் என்று நம்புகிறீர்களா?”

“நாட்டிலேயே மிகப்பெரும் பாரம்பர்யம்கொண்ட காங்கிரஸ் கட்சிக்குப் புதிதாகக் கட்டமைப்பை உருவாக்கவேண்டிய தேவையில்லை; சரிசெய்ய வேண்டும், முறைப்படுத்தி மாற்ற வேண்டும்... அவ்வளவுதான். அதேபோல காலத்துக்கு ஏற்ப எங்களை நவீனப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனால், மிக மோசமான இந்தக் காலகட்டத்திலும்கூட நாங்கள் 20 சதவிகித வாக்குகளை வைத்திருக்கிறோம்!”

“ஆனால், நீங்கள் சொல்லும் பாரம்பர்ய கட்சியின் கடந்தகால ஆட்சியைத்தானே பா.ஜ.க விமர்சனம் செய்கிறது?”

“நாங்கள் செய்த எதையும் வெளியில் சொல்லிக்கொண்டதில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் பாலத்தை குஜராத்தில் இருப்பது போலவும், ருமேனியாவில் இருக்கும் ரயில்வே தடத்தை மகாராஷ்டிராவில் இருப்பதுபோலவும் எங்களுக்கு போட்டோஷாப் செய்யத் தெரியாது. பா.ஜ.க-வுக்குச் சொல்வதற்கு, பொய்யைத் தவிர வேறு எதுவும் இல்லாததால்தான் காங்கிரஸ் கட்சியைக் குறை சொல்லிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது.”

“சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் ‘தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார்’ என்று சொன்னது உண்மையா?”

“உண்மைதான். அப்படிச் சொன்னது அவர்களின் பெருந்தன்மை. ஆனால், கட்சிக்கு எது நல்லது, யார் இருந்தால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைத் தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கலாசார, மொழிப் பின்புலத்திலிருந்து வந்த தொண்டர்கள் இருக்கும்போது, இவர்களை ஒருங்கிணைக்க காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே முடியும். எந்த சமரசமும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை எதிர்ப்பது ராகுலும் பிரியங்காவும் என்பதால் அவர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவர்களின் ஆளுமைமிக்க தலைமையைப் பார்த்து பா.ஜ.க நடுங்குகிறது!”

“இருக்கட்டும்... ஆனால், கடந்தகாலங்களில் காந்தி குடும்பம் சாராத தலைவர்கள் பலரும் காங்கிரஸை வழிநடத்தியிருக்கிறார்கள்தானே?”

“ஆமாம்... அப்துல் கலாம் ஆசாத், காமராஜர், நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள் வழிநடத்தியிருக்கிறார்கள்தான். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியிலிருந்து வந்தவர்கள்... இந்தியா முழுமையும் அறிந்தவர்கள். ஆனால், அவர்களைப் போன்றவர்கள் இப்போது காங்கிரஸில் உருவாகும் சூழல் இல்லை.”

“உருவாகும் சூழல் இல்லையா, அப்படியான தலைவர்களே இல்லையா?”

“தலைவர்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது; சூழல் இல்லையென்றுதான் நான் நினைக்கிறேன்.”

“2024 தேர்தலை எதிர்கொள்ள என்ன மாதிரியான திட்டங்களை வகுத்திருக்கிறீர்கள்?”

“பா.ஜ.க-வின் ஆட்சியில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது, புதிதாகத் திட்டத்தை வகுத்து அவர்களை வெல்வதற்கு? பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. லட்சக்கணக்கானோர் வேலையிழந்து விட்டார்கள். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் நலிவடைந்துவிட்டன. விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் எப்போதுமே ஒருவித சமூகப் பதற்றம் நிலவுகிறது. வெளிநாட்டிலிருந்து யாரும் இங்கே முதலீடு செய்யத் தயாராக இல்லை. இப்படிப் பல வழிகளில் மக்கள் மோசமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் எதிர்த்து நாங்கள் மட்டும்தான் நிற்கிறோம்.”

காமராஜரை போன்றவர்கள் காங்கிரஸில் உருவாகும் சூழல் இல்லை! - உண்மையை உடைக்கும் ஜோதிமணி...

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்படத் தயார் என்று சொல்லியிருக்கிறாரே மம்தா?”

“நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது... எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை வேண்டும். கட்சியைவிட, அதிகாரத்தைவிட, பதவியைவிட நாடும் நாட்டு மக்களும் முக்கியம். மக்கள்மீதும், ஜனநாயகத்தின்மீதும் அக்கறைகொண்டவர்கள் தங்களின் நிலையிலிருந்து இறங்கி வந்து ஒன்றாகச் செயல்பட முன்வருவார்கள். அப்படித்தான் மம்தாவின் அறிவிப்பை நான் பார்க்கிறேன்.”

“காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணி அமையுமா?”

“அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி ஓர் அணி உருவாகுமென்றால் அது, பா.ஜ.க-வை வெற்றிபெறவைக்க உருவானதாகத்தான் அமையும். இது எல்லோருக்கும் தெரியும்.”

“தமிழ்நாட்டில் இளைஞர் ஒருவர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆகவே முடியாதா?”

“பரேஷ் தனானி 42 வயதில் குஜராத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும், ரம்யா ஹரிதாஸ் 34 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆகியிருக்கிறார்கள். இப்படி இளையோருக்குக் காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.”

“அதைக் கேட்கவில்லை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இளைஞர் ஒருவர் தலைவராகும் வாய்ப்பு இருக்கிறதா?”

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இப்போது ஒரு தலைவர் இருக்கிறார். அவரது பதவிக்காலம் முடிந்த பிறகுதான் மாற்றம் குறித்துப் பேச முடியும்.”

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் உங்கள் பெயரும் அடிபடுகிறதே?”

“என்னுடைய பெயரும் இருப்பதாக நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆனால், எனக்கு அப்படி எந்தத் தகவலும் வரவில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism