Published:Updated:

அதிகாரத்தோடும் அகம்பாவத்தோடும் நடந்துகொள்கிறார் நிர்மலா சீதாராமன்! - வெளுத்து வாங்கும் ஜோதிமணி

ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கான இடம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு அதை விவாதத்துக்கான இடமாக இல்லாமல் அரசியல் மேடையாகப் பயன்படுத்துகிறது

அதிகாரத்தோடும் அகம்பாவத்தோடும் நடந்துகொள்கிறார் நிர்மலா சீதாராமன்! - வெளுத்து வாங்கும் ஜோதிமணி

நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கான இடம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு அதை விவாதத்துக்கான இடமாக இல்லாமல் அரசியல் மேடையாகப் பயன்படுத்துகிறது

Published:Updated:
ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

டெல்லி போலீஸாரின் பலப்பிரயோகத்துக்கு ஆளானது, சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானது என்று அகில இந்திய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், விலைவாசி உயர்வு, தமிழக வருகையின்போது மோடிக்கு தி.மு.க கொடுத்த வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் கேள்விகளை முன்வைத்தேன்…

“தொடர் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்குவது சரியா?”

“நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கான இடம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு அதை விவாதத்துக்கான இடமாக இல்லாமல் அரசியல் மேடையாகப் பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.டி., விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு குறித்தெல்லாம் விவாதிக்காமல், அடுத்தடுத்த அடக்குமுறைகளுக்குள் தாவிச் செல்ல முயல்கிறது ஒன்றிய அரசு. அது குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவது, அவர்களுக்கு அமளியாகத் தெரிகிறது. உண்மையில் ஆளுங்கட்சிதான் விவாதத்துக்கு இடமளிக்காமல் நாடாளுமன்றத்தை முடக்குகிறது. அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்பதே உண்மை.”

“ ‘கேள்விகளுக்கு பதிலளிக்கவிடாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பினால் எப்படி பதில் சொல்வது’ என பா.ஜ.க-வினர் கேட்கிறார்களே?”

“ஆளுங்கட்சியினர் பதிலளிக்கும்போது நாங்கள் ஒருபோதும் கூச்சலிட்டதில்லை. `விலைவாசி உயர்வு குறித்துப் பேசுங்கள்... உறுப்பினர்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யுங்கள்... பாலிலிருந்து சுடுகாடுவரை ஜி.எஸ்.டி விதித்து சாதாரண மக்கள்மீது ஏன் இவ்வளவு சுமைகளை ஏற்றுகிறீர்கள்...’ எனக் கேட்பதே இவர்களுக்குப் போராட்டமாகத் தெரிகிறது. உண்மைக்குப் புறம்பான பதிலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். அகம்பாவத்தோடும் அதிகாரத் திமிரோடும் அவர் நடந்துகொள்கிறார். ஆனாலும் அவரது பதில்கள் அனைத்தையும் நாங்கள் கேட்கிறோம். அதற்காக அவர் செய்யும் அரசியல் பிரசங்கத்தைக் கேட்க முடியாது. புறக்கணிக்கத்தான் செய்வோம்.”

அதிகாரத்தோடும் அகம்பாவத்தோடும் நடந்துகொள்கிறார் நிர்மலா சீதாராமன்! - வெளுத்து வாங்கும் ஜோதிமணி

“ராகுல், சோனியா மீதான அமலாக்கத்துறை விசாரணையை, நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாகக் காட்டுவது சரியா?”

“ராகுல், சோனியா மீதான அமலாக்கத்துறை விசாரணை ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அதை அரசியல்ரீதியாகத்தான் நாங்கள் எதிர்கொள்ள முடியும். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, எடியூரப்பா, எடப்பாடி பழனிசாமி இவர்களின் வீடுகளுக்கெல்லாம் ஏன் அமலாக்கத்துறை செல்வதில்லை... இந்த (நேஷனல் ஹெரால்டு) விவகாரத்தில் எட்டு ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், ‘நாடு முழுவதும் பயணம் செய்வேன்’ என ராகுல் அறிவித்ததும், அவசரமாக விசாரணையைத் தொடங்கியதில் நிச்சயம் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அமலாக்கத்துறை மூலம் எங்களை அச்சுறுத்த முயல்கிறார்கள். அது நடக்கவே நடக்காது.”

“மாநில அரசுகளின் ஒப்புதலோடுதான் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது என்கிறாரே நிதியமைச்சர்?”

“ஜி.எஸ்.டி கவுன்சிலில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மைனாரிட்டியாகத்தான் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி கவுன்சிலில் இருப்பவர்களெல்லாம் பா.ஜ.க ஆளும் மாநிலத்தவராகவோ அமலாக்கத்துறையால் அழுத்தத்துக் குள்ளான மாநிலத்தின் பிரதிநிதியாக வோதான் இருக்கிறார்கள். பலமுறை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதனால் அவர்மீது தேவையில்லாமல் பழிபோடுகிறார்கள். தமிழ்நாட்டு நிதியமைச்சர், ‘செயல்படுத்த வேண்டாம்’ எனப் பல நூறு விஷயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘எளிய மக்களை வரி என்ற பெயரில் சிதைக்கக் கூடாது’ என்ற சுய அறிவுகூட இல்லாமல் மற்றவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.”

“தமிழ்நாடு அரசு பால் பொருள்களின் விலையையும், சொத்து வரியையும் உயர்த்தியிருக்கிறது. மின் கட்டணத்தையும் உயர்த்தவிருக்கிறது. அது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பவில்லையே?”

“கேள்வியே கேட்கவில்லை என்று சொல்ல முடியாது. மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க-வின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி என்ற பெயரில் இரக்கமில்லாமல் மக்களை வதைத்துக்கொண்டிருக்கும்போது, ‘இதெல்லாம் வேண்டாம்’ என்றுதான் சொல்கிறோம். தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசைப்போல அதிகார தொனியில் நடந்துகொள்வதில்லை. எனவே, அவர்களிடம் சொல்லும் தொனியில் மாறுபாடு இருக்கிறதே தவிர, தோழமைச் சுட்டலைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.”

“பிரதமரும் முதல்வரும் சிரித்துப் பேசிக்கொண்டார்கள் என்பதே ஏன் காங்கிரஸுக்குப் பதற்றத்தைக் கொடுக்கிறது?”

“நாங்கள் பதற்றப்படவேயில்லை. இந்தியாவின் பிரதமர் தமிழ்நாடு நடத்தும் விழாவில் கலந்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ஓர் உலகளாவிய நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட். அதில் பிரதமர் கலந்துகொள்வதுதான் சரி. அதில் வருத்தம் இல்லை. ஆனால், ‘கடந்த முறை நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது ‘கோ பேக் மோடி’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்த முறை ஜனநாயக முறையிலான எதிர்ப்புக்குக்கூட காவல்துறை ஏன் இந்த அளவு கெடுபிடி காட்டுகிறது?’ என்றுதான் கேட்கிறோம்.”

“உங்கள் பேச்சு, செயல் எல்லாமே கவன ஈர்ப்புக்காகத்தான் என்று சொல்கிறார்களே?”

“நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், 15 லட்சம் மக்களின் பிரதிநிதி, தேசியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறேன். மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் படும் சிரமத்தைக் கண்கூடாகப் பார்க்கிறேன். இதனால் எழும் அறச்சீற்றத்தால் போராட்டம் செய்கிறேன். களத்தில் நின்று போராடும் நான், கவன ஈர்ப்பு அரசியல் செய்யவேண்டிய தேவையில்லை.”