சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

சமூக பதற்றத்தை ஏற்படுத்தி பொய்யை பரப்புகிறார் ஆளுநர்! - ஜோதிமணி நறுக்

ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிமணி

பா.ஜ.க-வின் மக்கள் விரோத அரசிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற லட்சியத்துக்கான போராட்டம் இது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரை, தற்போது தெலங்கானாவைக் கடந்து, மகாராஷ்டிராவில் மையம்கொண்டிருக்கிறது. இந்த யாத்திரையில் ராகுலுடன் பங்கேற்றுவரும் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் யாத்திரை குறித்த விமர்சனங்கள், சர்ச்சைகள் உள்ளிட்ட கேள்விகளைத் தொலைபேசி வாயிலாக முன்வைத்தேன்...

“ராகுலின் நடைப்பயணத்தில் தொடர்ந்து உடன் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்ன மாதிரியான மாற்றங்களைக் கவனிக்கிறீர்கள்?”

“அரசியலில் இன்றைக்குத் தலைமை என்பது மக்களிடம் நெருங்கிச் செல்லாமல் தூரத்தில், உயரத்தில், பிரமாண்டமாகக் கட்டமைக்கப்படும் மோடியைப் போன்ற பிம்பமாக மாற்றப்பட்டிருக்கிறது. அந்த நிலையை மாற்றி, மக்களுக்கானதுதான் அரசியல், எளிய மக்களோடு நெருங்கி நிற்கும் தோழன்தான் அவர்களின் தலைவன் என்ற நம்பிக்கை இந்தப் பயணத்தின் பாதையில் விதைக்கப்படுவதாகவே உணர்கிறேன்.”

சமூக பதற்றத்தை ஏற்படுத்தி பொய்யை பரப்புகிறார் ஆளுநர்! - ஜோதிமணி நறுக்

“ஆனால், இந்தப் பயணத்தை ‘வாக்குவங்கியை உயர்த்திக்கொள்வதற்கான உணர்ச்சி அரசியல் நாடகம்’ என்று விமர்சிக்கிறதே பா.ஜ.க?”

“பா.ஜ.க-வின் மக்கள் விரோத அரசிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற லட்சியத்துக்கான போராட்டம் இது. இந்த தேசத்தைக் காப்பாற்றும் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஒரு தலைவன் களத்தில் இறங்கிப் போராடும்போது மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள், தாமாக முன்வந்து ராகுலுடன் உரையாடுகிறார்கள், தங்கள் பிரச்னைகளைப் பேசுகிறார்கள். மக்களின் நம்பிக்கையைப் போராடிப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ராகுல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மற்றபடி, மக்களிடம் நாங்கள் அனுதாபத்தையோ கழிவிரக்கத்தையோ எதிர்பார்க்கவில்லை. சக மனிதர்களின் துயரங்களுக்குக் காதுகொடுப்பதும், அவர்களின் போராட்டங்களில் பங்கெடுப்பதும் உணர்ச்சி அரசியலா?”

“ராகுலை ஒரு கதாநாயகன்போலச் சித்திரிக்க முயல்கிறதா காங்கிரஸ்?”

“இல்லை. நான் அருகிலிருந்து பார்ப்பதால் சொல்கிறேன். ஒரு நாயகனைப் பார்க்க வருபவர்கள் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு கையசைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். உண்மையான அரசியலை, மக்களை மையப்படுத்தி, ஓர் அரசியல் தலைவர் ஒரு தேசத்தையே நடந்து கடக்கிறார். ‘நமக்காக ஒரு தலைவர் இருக்கிறார். அவரிடம் நம் பிரச்னைகளைச் சொல்ல முடியும். காது கொடுத்துக் கேட்க நமக்கு ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ராகுல் விதைத்திருக்கிறார். அதன் பலனாகவே பெருந்திரளான மக்கள் அவரைச் சந்திக்க வருகிறார்கள்.”

“ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இந்த முயற்சியைப் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லாததுபோலத் தெரிகிறதே?”

“கட்சித் தொண்டர்கள் முடிந்த அளவு உழைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் யாத்திரை குறித்து எழுதுவது, புகைப்படங்களைப் பகிர்வது எனத் தொடர்ந்து இயங்குகிறார்கள். எனினும், சில தொய்வுகள் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.”

“தமிழ்நாட்டு அரசியலிலும் பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்கள் நடைப்பயணம் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவை பெரிய அளவில் தேர்தல் அரசியலில் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லையே?”

“தமிழ்நாட்டில் நடந்த நடைப்பயணங்கள் அரசியல் ஆதாயத்தை மையமிட்டு நடத்தப்பட்டவை. ஆனால், ராகுல் காந்தியின் யாத்திரை, சமூக நல்லிணக்கத்தை, ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு முயற்சி. தேர்தல் வெற்றியும் முக்கியமானதுதான். ஆனால், தேர்தல் வெற்றி மட்டுமே அரசியல் இல்லை. மக்களுக்கும் அரசியலுக்கும், மக்களுக்கும் தலைவர்களுக்கும் நாளுக்கு நாள் இடைவெளி அதிகரித்துக் கொண்டேவருகிறது. அந்த இடைவெளியை உடைக்கும் முயற்சிதான் இந்த யாத்திரை. மக்களைச் சந்திக்கவே அச்சப்படும் கோழையான மோடியின் அரசியலுக்கு எதிராக மக்கள் திரளை ஒன்று சேர்க்கும் முயற்சியே இந்த யாத்திரை.”

“நடைப்பயணக் காணொளிகள் தொடர்பாகச் சில ‘காப்பிரைட்’ சர்ச்சைகளும் பேசுபொருளாகியிருக்கின்றனவே?”

“ராகுலின் யாத்திரைக்குக் கிடைக்கும் ஆதரவை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் பா.ஜ.க செய்யும் கோமாளித்தனங்கள் அவை. ஒரு காலகட்டத்தில், அவரை ‘பப்பு’ என்றார்கள். ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்றார்கள். என்னவெல்லாம் பொய்களைப் பரப்ப முடியுமோ அவை அனைத்தையும் செய்து பார்த்தார்கள். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல், தான் மக்களுக்கான தலைவன் என அவர் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் மோடி குறித்து பா.ஜ.க கட்டமைத்த பொய்யான பிம்பம் இப்போது தகர்ந்துவிட்டது. அந்தப் பதற்றத்தில் இப்படியான தேவையில்லாத சர்ச்சைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.”

“ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க அழுத்தம் கொடுப்பது அவர்களுக்குக் கைகொடுக்குமா?”

“கைகொடுக்குமா இல்லையா என்பதைவிட, அதற்கான முயற்சி எடுப்பது முக்கியமானது எனக் கருதுகிறேன். அரசியல் சாசன எல்லைகளைத் தாண்டி, ஒரு கட்சியின் பிரதிநிதிபோலச் செயல்படுகிறார் ஆளுநர். சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதுபோலப் பேசுகிறார். பொய்யைப் பரப்புகிறார், இதெல்லாம் ஆளுநர் செய்யக்கூடிய வேலையா... தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே ஆளுநர் பதவியைப் பயன்படுத்துகிறது பா.ஜ.க. எல்லைகளை மீறி... நாகரிகமின்றி... கண்ணியமற்ற வகையில் ஆளுநர் நடந்துகொள்ளும்போது, அவரை மாற்ற வேண்டும் என தி.மு.க முயல்கிறது. அதில் தவறில்லை!”