ராகுல் காந்தி மீதான சட்டநடவடிக்கைப் பற்றி, கரூரில் தனது அலுவலகத்தில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``அனைத்து கான்ட்ராக்ட்டுகளும் அதானி கம்பெனிக்கே எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் கொடுக்கப்படுகின்றன. இரண்டாவதாக, எதற்காக நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அதானி மட்டும் கூடவே போகிறார். இல்லையென்றால், நரேந்திர மோடி ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுக்குச் சென்றுவந்த பிறகு, அதானி அந்த நாட்டுக்குப் போகிறார். ஏன் அந்த நாட்டு கான்ட்ராக்ட்கள் எல்லாம் அதானிக்கே கொடுக்கப்படுகின்றன... உதாரணமாக இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் மின்சார ஒப்பந்தங்கள் அதானிக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், அதானியின் 25 ஷெல் கம்பெனிகளில் 20,000 கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் அதானியுடையது அல்ல. அப்படியென்றால் அந்தப் பணம் யாருடையது... அதானி பினாமி என்றால், அந்தப் பணத்துக்கு ஓனர் யார்?

அதேபோல், இந்தியாவின் பிரதமர் என்பவர், இந்திய மக்களுக்காக உழைக்கக்கூடியவர், ஏன் அவருக்கு அதானி கம்பெனிமீது தனிப்பட்ட ஆர்வம்... எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. கரூரே நாட்டில் நான்காவது பெரிய ஏற்றுமதி நகரம் எனப் பெயர் பெற்றிருக்கிறது. இங்கே பல நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கிருக்கும் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எல்லாம் எவ்வித ஆதரவுமின்றி இயங்கிவருகின்றன. கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் பிதரமருக்கு அதானி குழுமத்தின்மீது மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம்... இந்தக் கேள்வி என்பது காங்கிரஸ் கட்சியிடையதோ, ராகுல் காந்தி என்ற தனிநபரின் கேள்வியோ அல்ல. இது, ஒரு நாட்டை பாதிக்கக்கூடிய விஷயத்துக்கான கேள்வி.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற காங்கிரஸ், இன்னபிற கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்டவை விமான நிலையங்கள். அதேபோல், துறைமுகங்கள், அலைக்கற்றைகள், எண்ணெய் பைப் லைன்கள். இவற்றில், துறைமுகத்தைத் தவிர எந்தத் துறையிலும் அதானிக்கு முன் அனுபவம் இல்லை. நம் ஊரிலுள்ள சாதாரண பேரூராட்சியிலோ அல்லது ஊராட்சியிலோ ஒரு சாக்கடை கட்ட வேண்டுமென்றால், அதற்கு டெண்டர் விட்டால்தான் கட்ட முடியும். ஆனால், அதானி துறைமுகங்கள் எடுக்கிறார். விமான நிலையங்கள், அலைக்கற்றையை எடுக்கிறார். இவற்றில், எதிலும் டெண்டர் கிடையாது. அந்தத் துறைகளிலும் அவருக்கு முன் அனுபவம் கிடையாது. ராகுல் காந்தி அந்தப் பணத்தைப் பற்றி கேள்வி கேட்ட ஒன்பதாவது நாள், ஒரு வழக்கு புதுப்பிக்கப்படுது. அந்த வழக்கு என்னவென்றால், கடந்த முறை கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, கோலார் பகுதியில் ஒரு விஷயத்தைப் பற்றி பேசினார்.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையைப் பற்றி பேசும்போது, 'ஏன் நாட்டில் தாங்கமுடியாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை பிரச்னை நிலவுகிறது என்றால், எல்லாப் பணத்தையும் நரேந்திர மோடியின் நண்பர்கள் கொள்ளையடித்துக்கொண்டு போகிறார்கள்' என்றார். அதில் மேலும் அவர், 'நரேந்திர மோடி, லலித் மோடி உள்ளிட்ட நான்கு பேரைக் குற்றம்சாட்டினார். 17,000 கோடி ரூபாயை பிரதமரின் நண்பர் மட்டும் எடுத்துக்கொண்டு, வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்' என்று சொன்னார். அமலாக்கத்துறையைத் தாண்டி அவர்களால் எப்படிச் செல்ல முடிகிறது... அதானி கம்பெனியில எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி இன்வெஸ்ட் செய்திருக்கின்றன. இந்தியாவிலுள்ள எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் இன்வெஸ்ட் செய்திருக்கின்றன.
ஏன் ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் மட்டும் செய்ய வேண்டும்... இந்தப் பணம் யாருடையது... சாதாரண ஏழை, எளிய மக்களின் பணம்தானே... நால்வரும் ஒரே பெயரில் இருக்கிறார்கள். திருடர்களைத் திருடர்கள் என்றுதானே சொல்ல முடியும்... சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று சொல்லமுடியாது. அப்படி, ராகுல் காந்தி, உங்களைத் திருடர்கள் என்று சொல்வது உறுத்தியது என்றால், நீங்கள் நேர்மையானவர்கள், உங்கள்மீது தவறு ஏதும் இல்லையென்றால், அந்த நால்வரில் ஒருவர் ராகுல்மீது வழக்கு போட வேண்டியதுதானே?
இதில் சம்பந்தமே இல்லாத பா.ஜ.க எம்.எல்.ஏ உள்ளிட்ட மூன்று பேர் வழக்கு போட்டிருக்கிறார்கள். மூன்று பேரும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள்தான். சாதாரண மக்களோ, அந்தக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களோ வழக்கு போடவில்லை. மூன்று வருடங்களாக நடக்கும் அந்த வழக்கில் ராகுல் காந்தி தடை வாங்கியிருந்த நிலையில், மோடியின் ஊழலை அவர் நாடு முழுக்க கொண்டுசேர்த்ததால், அந்தத் தடை நீக்கப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி மூன்று வருடங்களாக நடக்கும் இந்த வழக்கை 20 நாள்களிலேயே விசாரித்து, தீர்ப்பு கொடுத்திருக்கிறார். இது ஊழல் வழக்கோ, பெண்கள் வன்கொடுமை சம்பந்தமான வழக்கோ அல்லது கொலை வழக்கோ கிடையாது. ஓர் உண்மையை மக்களுக்காகச் சொன்ன விஷயத்துக்கான வழக்கு.

ஓர் உண்மையைச் சொன்னதற்காக, இரண்டாண்டுக் காலம் சிறைத் தண்டனை கிடைத்திருக்கிறது. அந்தத் தீர்ப்பு வந்த 24 மணி நேரத்தில் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் இவ்வளவு அவசரம் காட்டியதற்கு காரணம், ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் செய்வதற்குத்தான். அவர் நாடாளுமன்றத்துக்குத் தொடர்ந்து வந்தால், மோடியின் ஒவ்வோர் ஊழலும் அம்பலத்துக்கு வரும் என்ற பயத்தின் காரணமாகத்தான், ராகுல் காந்தி மீது இவ்வளவு அத்துமீறல் நடத்தப்பட்டிருக்கிறது. அரசு வீட்டை 48 மணி நேரத்தில் காலி செய்ய வேண்டுமென்று ராகுல் காந்திக்கு வந்த நோட்டீஸ் போல், ஏன் குலாம்நபி ஆசாத்துக்குச் செல்லவில்லை... பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த அரசு, மக்கள் பதவிகளில் இல்லாதவர்கள்கூட அரசு வீடுகளில் குடியிருக்கிறார்கள். ராகுல் காந்தி பேசும் உண்மைக்கு பயந்து, அவரை மட்டும் திட்டமிட்டு முடக்கப் பார்க்கிறார்கள். அதற்கு, ராகுல் காந்தி அஞ்சமாட்டார். உண்மைக்கு என்று ஓர் ஒளி இருக்கிறது. அதை ராகுல் காந்தியிடம் பார்த்தோம். அதனால், அவர் இதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மோடி அரசின் ஊழலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவார்கள். உரத்தக் குரலில் நாங்களும் ராகுல் வழியில் இந்தப் பிரச்னை பற்றி தொடர்ந்து பேசுவோம்" என்றார்.