Published:Updated:

`அதை அவமானமாகக் கருதுகிறேன்!'- நாடாளுமன்ற அவைக் காவலர்களால் கொந்தளிக்கும் ஜோதிமணி

`ஏன் தள்ளுகிறீர்கள்... ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் உண்டு. எங்களைப் பேசவிடுங்கள்' என்று சொன்னபோது, அதற்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.

கரூர் எம்பி. ஜோதி மணி
கரூர் எம்பி. ஜோதி மணி

``ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 80 கோடி ரூபாய் வரையில் பா.ஜ.க பணம் கொடுத்திருக்கிறது. இவர்களுக்கு ஏது இவ்வளவு பணம். கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து தேர்தல் நிதி வாங்கி எம்.எல்.ஏ-க்களுக்கு கொடுக்கிறார்கள். பா.ஜ.க-வை எதிர்த்து கேள்வி கேட்டால், அவைக் காவலர்களை வைத்து வெளியே தள்ளியதோடு கடுமையாகவும் நடந்துகொண்டார்கள்'' என்று கொந்தளிக்கிறார் கரூர் எம்.பி ஜோதிமணி.

ஜோதிமணி
ஜோதிமணி

மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த சில நாள்களாக நிலவிவந்த அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கிடைத்துவிட்டது. புதிய முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க இருக்கிறார். மகாராஷ்ட்ரா அரசியல் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இரு அவைகளின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கின.

`78 மணிநேர பா.ஜ.க ஆட்சி; முதல்வராகும் உத்தவ் தாக்கரே!' -  மகாராஷ்ட்ர அரசியலின் ஒருமாத ஃபிளாஷ்பேக்

காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா என மூன்று கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் பலரும், கையில் பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராகவும், மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அவை தொடங்கியதிலிருந்தே எம்.பி-க்களின் முழக்கத்தால் கடும் அமளி நிலவியது.

ஜோதி மணி
ஜோதி மணி

இதையடுத்து எழுந்த தள்ளுமுல்லு சம்பவத்தால், அன்றைய அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. இந்நிலையில், கரூர் எம்.பி ஜோதிமணி, அவையில் நடந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

`` மக்களவையில் மகாராஷ்டிரா அரசியல் சூழல் தொடர்பாக நாங்கள் முழக்கம் எழுப்பியபோது, என்னையும் சக எம்.பியுமான ரம்யா ஹரிதாஸையும் பாதுகாவலர்கள் பிடித்துத் தள்ளினர். இது குறித்து சபாநாயகரிடம் முறையிட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரியும் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.

`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்!

கரூர் எம்.பி ஜோதிமணியிடம் பேசினோம். `` இது ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் தற்போது எழுகிறது. கோவா, மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பின்வாசல் வழியாக வந்து ஆட்சியைப் பிடித்தனர். தற்போது, மகாராஷ்டிராவில் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 80 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஏது இவ்வளவு பணம். கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து தேர்தல் நிதி வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பணத்தைத்தான் எம்.எல்.ஏ-க்களுக்கு கொடுக்கிறார்கள்.

பாஜக - சிவசேனா
பாஜக - சிவசேனா

பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை எடுத்துச் சொல்வதற்காக அமைதியான முறையில் குரல்கொடுத்தோம். அப்போது, அவைக் காவலர்களைவைத்து எங்களைத் தள்ளிவிட்டனர். `ஏன் தள்ளுகிறீர்கள்... ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் உண்டு. எங்களைப் பேசவிடுங்கள்' என்று சொன்னபோது, அதற்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.

என் தோளைப் பிடித்து கடுமையாகத் தள்ளினார்கள். இச்செயலை அவமானமாகக் கருதுகிறேன். ஆண் காவலர்கள் எங்களை முரட்டுத்தனமாகத் தள்ளினர். நாடாளுமன்றத்துக்குள் பெண் எம்.பி-க்களிடம் இதுபோன்று நடப்பதை இதற்குமுன் நாங்கள் பார்த்ததில்லை. பா.ஜ.க-வினர் இச்செயலை திட்டமிட்டு நடத்தினார்கள்.

ஜனநாயக உரிமைக்காகத்தானே நாங்கள் குரல் எழுப்பினோம். எதன் அடிப்படையில் எங்களைத் தள்ளினார்கள்? எங்களை முரட்டுத்தனமாகத் தள்ளிய அவைக் காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்” என்றார் ஆவேசத்துடன்.

ஜோதிமணியின் குற்றச்சாட்டுகுறித்து தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம். `` தீவிரவாத அமைப்புகளிடமிருந்து பணம் வாங்கினோம் என்று சொல்வது முற்றிலும் தவறு. இந்தக் குற்றச்சாட்டை அவர்களால் நிரூபிக்க முடியுமா? எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இதுபோன்று குற்றம் சாட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் பி.ஜே.பி கூட்டணியில்தான் சிவசேனா போட்டியிட்டது.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

அவர்களுக்கு விழுந்த அத்தனை வாக்குகளும் பா.ஜ.க-வுக்கு விழுந்தவைதான். காங்கிரஸ்காரர்கள், துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு சிவசேனாவோடு கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். நாங்கள் பின்வாசல் வழியாக வந்து ஆட்சியைப் பிடித்தோம் என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது. நீங்கள் எத்தனை முறை இதைச் செய்திருக்கிறீர்கள் என்று நாங்கள் சொல்லட்டுமா?" என்றார் கொதிப்புடன்.