Published:Updated:

யாகாவாராயினும் நா காக்க!

ஜோதிமணி - கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி - கரு.நாகராஜன்

மோசமான அரசியல்வாதிகளை எத்தனை முறை கொட்டினாலும் வாயில் இருக்கும் அழுக்கு போகாது. உண்மையில், அழுக்கு அவர்களின் வாயில் அல்ல... மனத்தில் இருக்கிறது.

யாகாவாராயினும் நா காக்க!

மோசமான அரசியல்வாதிகளை எத்தனை முறை கொட்டினாலும் வாயில் இருக்கும் அழுக்கு போகாது. உண்மையில், அழுக்கு அவர்களின் வாயில் அல்ல... மனத்தில் இருக்கிறது.

Published:Updated:
ஜோதிமணி - கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி - கரு.நாகராஜன்
காங்கிரஸ் எம்.பி-யான ஜோதிமணியை பா.ஜ.க-வைச் சேர்ந்த கரு.நாகராஜன் தரக்குறைவாகப் பேசிய விவகாரம், சூட்டைக் கிளப்பியிருக்கிறது. நாவடக்கம், நாகரிகம் பற்றியெல்லாம் அரசியல் ஆத்திசூடி நடத்தப்படுகிறது. ஆனால், இந்த அநாகரிகம் எங்கே வேர்விட்டது?

மயிலை மாங்கொல்லையிலும், சைதாப்பேட்டை தேரடியிலும், தங்கசாலை மணிக்கூண்டிலும் இரவு 10 மணிக்குமேல் அரசியல்வாதிகள் பேசிய அநாகரிமான வார்த்தைகள், சட்ட மன்றத்துக்கு உள்ளேயும் நுழைந்தன. அவை இப்போது தொலைக்காட்சி விவாதங்கள் வழியாக வீட்டுக்கே வந்து நம்மை முகம் சுளிக்கவைக்கின்றன.

`வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன். கொப்பளிக்கக் கொப்பளிக்க வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல் உற்றுப் பார்க்கிறேன், நீரே அழுக்கு!’ என்றார் எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மோசமான அரசியல்வாதிகளை எத்தனை முறை கொட்டினாலும் வாயில் இருக்கும் அழுக்கு போகாது. உண்மையில், அழுக்கு அவர்களின் வாயில் அல்ல... மனத்தில் இருக்கிறது.

அதனால்தான், சமூகத்தின் அழுக்குகளை அகற்றுவதற்காகவே உருவான அரசியலே இன்று அழுக்கேறிக் கிடக்கிறது.

ஜோதிமணி
ஜோதிமணி

எதிரெதிர் அரசியல் செய்யக் கூடியவர்கள், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மோதிக்கொள்கிறவர்கள் பொதுவெளிகளிலும் விசேஷ நிகழ்வுகளிலும் நட்பைப் பேணும் அரசியல் நாகரிகம் வட மாநிலங்களில் உண்டு. அது தமிழகத்திலும் தழைத்தோங்க வேண்டும் என்கிற குரல்கள் காலம்காலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங் களிலேயே இப்படி கேவலமாகப் பேசுகிறவர் களைப் பார்க்கும்போது, தமிழகத்தில் அப்படியான சூழல் வருவதற்கான வாய்ப்புகளே தெரியவில்லை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பேராசிரியர் அருணனும், சில காலம் முன்பு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் வார்த்தைகளால் மோதிக்கொண்டார்கள். விவாதம் முற்றி, `ஏய் என்னய்யா லூசு மாதிரி பேசுற’ என திடீரென ஆவேசமாகக் கத்தினார் `செந்தமிழன்’ சீமான். பதிலுக்கு `நீதான்டா லூசு, யாரைப் பார்த்து லூசுங்கிற!’ என்று எகிறினார் அருணன். இவர்கள் நாலாந்தர பேச்சாளர்கள் கிடையாது. அரசியல் நாகரிகத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள். கட்சியை வழிநடத்தக்கூடியவர்களிடமே நாகரிகம் இல்லாமல்போனதற்கு யாரை குற்றம்சாட்ட முடியும்?

`ஒரு சொல் வெல்லும்... ஒரு சொல் கொல்லும்!’ என்பது இவர்களுக்குத் தெரியும். அதனால், `இவர்கள் தன்னிலை மறந்து பேசுகிறார்கள்’ எனக் கடந்து போய்விட முடியாது. தங்களுடைய மோசமான பேச்சு, பார்வையாளர்களை முகம் சுளிக்கவைக்கும்; தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் என நன்கு தெரிந்தவர்களே வசவு வார்த்தைக ளை பொதுவெளியில் தயக்க மில்லாமல் பந்தி வைக்கிறார்கள்.

`சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பேசும் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும்’ எனப் போராடி யவர்களை `நான்சென்ஸ்’ என்றார் பிரதமர் நேரு. கொதித்துப்போன தி.மு.க, நேருவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தியது. `நான்சென்ஸ்’ வார்த்தைக்கே ரயிலை மறித்தவர்கள் கட்சியில் தான், தீப்பொறி ஆறுமுகமும் வெற்றிகொண்டானும் வளர்த் தெடுக்கப்பட்டார்கள், போற்றப் பட்டார்கள்.

சிறப்புப் பேச்சாளர் பேசிய பிறகு நன்றியுரையுடன் நிறைவுபெறுவதுதான் பொதுக்கூட்டங்களின் இலக்கணம். ஸ்டாலினும் பேராசிரியர் அன்பழகனும் பேசிவிட்டுப் போன பிறகு வேறு யாரும் பேச முடியாது. ஸ்டாலின் பேசிவிட்டுப் போன பிறகு வெற்றிகொண்டான் பேசிய கூட்டங்கள் ஏராளம். கூட்டத்தைத் திரட்ட நாராசத்தை விதைத்தன திராவிட கட்சிகள்.

`குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள். பெண்களும் சிறுவர்களும் வீட்டுக்குப் போய்விடுங்கள்’ என `அடல்ஸ் ஒன்லி அலர்ட்’ கொடுத்துவிட்டுத்தான் பேச்சையே ஆரம்பிப்பார் வெற்றிகொண்டான்.

ஜெயலலிதாவும் சசிகலாவும் மகாமகத்தில் குளித்ததைக்கூட கேவலமான மொழியில் உச்சரித்தார் வெற்றிகொண்டான். `அந்தக் காலத்தில் பெண்கள் பெரிய கொண்டை வைத்து, அந்தக் கொண்டையைச் சுற்றி பூ வைத்திருப்பார்கள். புருஷன்காரன் மனைவியிடம், `ஏன்டி கொண்டைக்கு வெளியே தெரியும்படி பூ வைக்க வேண்டியதுதானே’ என்று கேட்பான். உடனே மனைவி. `நான் பூ வைக்கிறது கொண்டவன் பார்க்க; கண்டவன் பார்க்க அல்ல’ அப்படிச் சொன்ன பெண்கள் வாழும் நாட்டில்...’ என வெற்றிகொண்டான் பேச ஆரம்பித்து, அதன் பிறகு சொன்ன வார்த்தைகளே ஆபாசத்தின் உச்சம்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

இப்படிப் பேசிப் பேசியே நாராசம் ஊற்றி கட்சியை வளர்க்க வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், போத்தனூர் மணிமாறன், கூத்தரசன், நன்னிலம் நடராசன், திருப்பூர் விசாலாட்சி, வண்ணை ஸ்டெல்லா, புதுக்கோட்டை விஜயா எனப் பெரிய படை பரிவாரமே வளர்த்தெடுக்கப்பட்டது.

அ.தி.மு.க ஒன்றும் பரிசுத்தமான கட்சியல்ல. வசவு வார்த்தைகளிலிருந்து உடல்மொழிக்கு அரசியல் அநாகரிகத்தைக் கடத்தியது அ.தி.மு.க. ஜெயலலிதாவை எதிர்த்ததற்காக சுப்பிரமணியன் சுவாமிக்கு அசிங்கமான அர்ச்சனைகள் மட்டுமா விழுந்தன? மகளிரணியை வைத்து ஆபாச தரிசனத்தை அல்லவா அரங்கேற்றி னார்கள்.

ஜெயலலிதாவை மோடி சந்தித்தபோது, `பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கள்ள உறவு வைத்திருக்கிறது’ என்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அதற்கு அவர் பாணியிலேயே பதிலடி கொடுத்த அ.தி.மு.க, பெட்ரோல் குண்டுகளை வீசி தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கவைத்தது. `கிழிஞ்ச ஜிப்பா... தகரடப்பாவுடன் திருட்டு ரயிலேறி வந்தவர்தான் கருணாநிதி’ என தலைவியைக் குளிரவைக்க வளர்மதி பேசிய பேச்சு, சட்டசபை அவை நடவடிக்கைக் குறிப்பிலேயே பதிவாகி யிருக்கிறது. அதே வளர்மதி, ஜானகி அணியில் இருந்தபோது... ஜெயலலிதாவைப் பேசாத பேச்சுகளா? `சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா உத்தமியா?’ எனக் கேட்டவை வளர்மதியின் உதடுகள்.

பேச்சாளர்களும் பிரபலங்களும் மட்டுமல்ல... தலைமையே பேசிய வரலாறுகளும் உண்டு. `தவறாக நடக்க முயன்றார்’ என ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக சட்டசபையிலேயே வாள் சுழற்றினார் ஜெயலலிதா. கடைசி வரையில் அதை நிரூபிக்கவேயில்லை. விஜயகாந்த்தை `குடிகாரன்’ என்றார் ஜெயலலிதா. `பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுத்தாரா?’ என்று பதிலடி கொடுத்தார் விஜயகாந்த். 2011-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தயவு வேண்டும் என்பதால், அவருடன் கூட்டணி அமைத்தார் ஜெ. ஜெயித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவராக வந்து அமர்ந்த விஜயகாந்த்தை, அவதூறாகப் பேச ஆரம்பித்தார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருணாநிதியை `தள்ளுவண்டி’ என்றார். விஜயகாந்த்தை `தண்ணியிலேயே இருப்பவர்’ என்றார். ஒரு மருத்துவரான விஜயபாஸ்கர் விஜயகாந்த்தை குடிநோயாளியாகப் பார்க்க வில்லை. கருணாநிதியை வயது முதிர்ந்தவராகப் பார்க்கவில்லை. இவரெல்லாம் மருத்துவம் படித்து என்ன பலன், ஏன் இப்படி புத்தி போனது? பதவி வெறி. அது, கற்ற கல்வியையும் மீறி முதுமையைக் கேலி செய்யச் சொல்கிறது. மற்றவர்களைப் புண்படுத்தி தலைமையைக் குளிரவைத்து, `மாண்புமிகு’ ஆக எதையும் செய்வார்கள் இவர்கள்.

`நாக்கை அறுத்துவிடுவேன்’ என ஒரு மந்திரியே சொல்லும் அளவுக்கு இன்று அரசியல் வளர்ந்து நிற்கிறது. பெரியார் சிலை உடைப்பு, கனிமொழி பற்றிய சர்ச்சைக் கருத்து என ஹெச்.ராஜா பேசியவை கொஞ்சம் நஞ்சமா? சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டித்ததால் நீதிபதி குன்ஹாவை அ.தி.மு.க-வினர் எப்படியெல்லாம் திட்டித் தீர்த்தார்கள்... விலங்குகளுடன் நீதிபதியை ஒப்பிட்டு மோசமான படங்களை பேனர்களாக வைத்தார்கள்.

`சிறந்த நாடாளுமன்றவாதி’ என்று அழைக்கப்பட்ட வைகோ மட்டும் சளைத்தவரா? 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி பற்றி வைகோ சொன்ன ‘ஆதித்தொழில் பேச்சு’ சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் வைகோ.

கருத்தால் பதில் சொல்ல வார்த்தைகள் இல்லையெனில், தனிமனிதத் தாக்குதலைத் தொடுப்பது தமிழக அரசியலில் தொடர்கதைதான். பெண், திருமணமாகாதவர், மகப்பேறு வாய்க்கப் பெறாதவர் இவர்களையெல்லாம் அற்பமாகக் கேலி செய்கிறார்கள். குழந்தை இல்லாததை வைத்து அண்ணாவுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. திருமணம் செய்யாத காமராஜருக்கு நடத்தப்பட்ட அர்ச்சனைகள் அதிகம். அவை கருணாநிதி, ஜெயலலிதா வரை தொடர்ந்தன.

`தத்துவஞானிகளே தலைமையேற்று ஆள வேண்டும்!’ என்றார் பிளேட்டோ. அந்த `வையகத் தலைமை’ இன்றைக்கு யாருக்கு இருக்கிறது? `மக்களை ஆள்பவன் முதலில் தன் மனத்தை ஆள வேண்டும், புலனடக்கம் பழக வேண்டும்’ என்கிறது அர்த்தசாஸ்திரம்.

யாகாவாராயினும் நா காக்க!