Published:Updated:

``பாஜக ஆட்சியில் பேசுவதற்குப் பிரச்னைகளா இல்லை?” - விளாசுகிறார் கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டியின் நிலை, குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்பவிருக்கும் பிரச்னைகள் எனப் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``சசிகலாவின் அரசியல் நகர்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``அ.தி.மு.க-வின் கிளை உறுப்பினர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். இன்றைக்கும் இரட்டை இலைக்குப் பெரிய சக்தி இருக்கிறது என்பதை நான் அறிவேன். சசிகலா இப்போதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கிறார். வெளியே வந்து எல்லோரையும் சந்திக்கத் தொடங்கினால் அ.தி.மு.க முழுமையாக சசிகலா பக்கம் போய்விடும் என்று நான் நம்புகிறேன்.”

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
சங் பரிவார் தூண்டுதலால்தான் சீமான் இப்படிப் பேசுகிறார்! - ‘சுளீர்’ கார்த்தி சிதம்பரம்

``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை மாற்றப்படுவதற்கான சூழல் இருக்கிறதா?”

``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அது ஒரு நியமனப் பதவி. இப்போதிருக்கும் தலைமைமீது எந்தப் பிரச்னையும் இல்லை. சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஏதாவது மாற்றம் இருக்கலாம். ஆனால், இப்போதைக்குத் தலைமை மாற்றப்படுவதற்கான சூழல் இல்லை.”

கார்த்தி சிதம்பரம், கே.எஸ். அழகிரி
கார்த்தி சிதம்பரம், கே.எஸ். அழகிரி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தமிழ்நாட்டைப்போல மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?”

``நிச்சயம் ஏற்படும்... மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும், 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க ஆட்சி நீங்க வேண்டும், தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. இதேபோல பா.ஜ.க-வை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் முன்னெப்போதையும்விட, தற்போது மிகத் தீவிரமாக இருக்கிறது. அது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். அதற்குள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.”

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
எதிர்க்கட்சியினர்கூட இவ்வளவு குடைச்சல் கொடுப்பதில்லை! - கே.எஸ்.அழகிரி ‘குமுறல்’ பேட்டி...

``காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?”

``லட்சக்கணக்கில் உறுப்பினர்களைச் சேர்க்கிறேன் எனத் தேவையில்லாமல் கூட்டம் சேர்க்கக் கூடாது. கட்சியில் யாரெல்லாம் தொடர்ந்து செயல்படுகிறார்களே அவர்களைத்தான் உறுப்பினர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஒருவர் உறுப்பினராக வேண்டும் என விரும்பினால், களப்பணி செய்து தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் கலந்துகொண்டால் மட்டுமே முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்குள் தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாநில நிர்வாகிகளின் எண்ணிக்கையை தி.மு.க-வைப்போல மாற்றியமைக்க வேண்டும். காங்கிரஸில் இப்போது கிட்டத்தட்ட 300 பேர் மாநில நிர்வாகிகள் இருப்பார்கள். கட்சிப் பிரச்னைகளுக்காகக் கூடுவது கிடையாது, எந்த அதிகாரமும் கிடையாது, செயல்படுவதும் இல்லை. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.”

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

``தேசியக்கட்சியில் மாநிலக் கட்சிபோல நினைத்ததையெல்லாம் செயல்படுத்திவிட முடியுமா?”

``கட்சியின் கொள்கையிலிருந்து விலகிச் செல்லாமல் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றாற்போல சில மாற்றங்களைச் செய்யலாம். அதில் தவறில்லை. என்ன சொல்கிறோம் என்பதைவிட, அது புதிய சிந்தனையாக இருக்கிறதா இல்லையா, கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமா என்பதுதான் முக்கியம்.”

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?”

``அண்ணாமலையை மனதில்வைத்து இந்தக் கேள்வியை எழுப்புகிறீர்கள் என நினைக்கிறேன். இளம் தலைமுறைத் தலைவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதில் இப்போது மட்டுமல்ல, எப்போதும் காங்கிரஸ்தான் முன்னணியில் இருந்திருக்கிறது. அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. சித்தாந்தரீதியில் பா.ஜ.க-வுக்கு தலைமை ஏற்க ஆள் இல்லை என்பதால்தான் அண்ணாமலையைத் தலைவர் ஆக்கியிருக்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என அண்ணாமலை எதிர்பார்த்திருந்தார். அது நடக்கவில்லை என்றதும் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டார். மற்றபடி சித்தாந்தரீதியிலாக நியமிக்கப்பட்டவரில்லை அண்ணாமலை.”

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

``கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் எண்ணம் இருக்கிறதா?”

``லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் என ஒவ்வொரு கட்சியும் சொல்லிக்கொள்வதே அபத்தமானது. புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். ஒரு கட்சிக்குத் தீவிரமான உறுப்பினர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 50-லிருந்து 100 பேர்தான் இருப்பார்கள். மற்றவர்கலெல்லாம் அனுதாபிகள்தான். இவர்களை பலப்படுத்தி, அவர்களுக்குள்ளிருந்து கட்சிக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மக்களோடு தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்க அறிவுறுத்த வேண்டும். அந்தந்தப் பகுதியின் பிரச்னைகளைப் பேசி அதற்கு நாம் உடனிருந்து தீர்வுகாண வேண்டும். தேர்தலின்போதும் அவர்களில் ஒருவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி பார்த்தால் மிஸ்டு கால் மூலம் அவர்கள் சேர்த்ததாகச் சொன்ன உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு பா.ஜ.க பல லட்சம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் இல்லையா...”

“என் 32 வருட அரசியல் வாழ்க்கையை காலி செய்ய நினைக்கிறார்கள்!”

`` தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி குறித்து உங்கள் பார்வை என்ன?”

``மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் மிகச்சிறப்பான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறார். வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இன்றைக்குத் தேர்தல் நடந்தால்கூட கடந்த தேர்தலைவிட 5 முதல் 10 சதவிகிதம் வாக்குகள் அதிகமாகப் பெறுவார்... அந்த அளவுக்கு ஸ்டாலினின் இமேஜும், மக்களோடு அவர் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தொடர்பும் பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன.”

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

``வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்னைகளை முன்னெடுத்துப் பேசவிருக்கிறீர்கள்?”

``நாடாளுமன்றக்குழு மூலமாகத்தான் அந்தந்தக் கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்னைகள் குறித்துப் பேசலாம் என முடிவெடுப்போம். வாய்ப்பு கிடைத்தால் எங்கள் தொகுதிப் பிரச்னைகள் குறித்தும் பேசுவோம். கடந்த கூட்டத்தொடரில் பெகாசஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் குறித்துப் பேச நினைத்திருந்தோம். ஆனால், அவர்கள் அதற்கான சூழலை உருவாக்கவில்லை. இந்த முறை காஷ்மீரில் நடக்கும் பிரச்னை, உத்தரப்பிரதேசத்தில் மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றி விவசாயிகளைக் கொலை செய்தது, விவசாயிகள் போராட்டத்தில் நடக்கும் வன்முறை உள்ளிட்டவை குறித்துப் பேசலாம் என்றிருக்கிறோம். என்னுடைய தொகுதியிலும் சில பிரச்னைகள் குறித்துப் பேசலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். பா.ஜ.க ஆட்சியில் பேசுவதற்குப் பிரச்னைகளா இல்லை?!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு