
கார்த்தி சிதம்பரம் பேட்டி
ப.சிதம்பரம் சிறைக்குள் இருந்தாலும் தன் குடும்பத்தினர் மூலம் தொடர்ச்சியாக ட்வீட் செய்துவருகிறார். ப.சிதம்பரம் தொடங்கி தமிழக காங்கிரஸ் வரை கார்த்தி சிதம்பரத்திடம் பேசினேன்.
‘`ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில்தானே, சி.பி.ஐ கைது நடவடிக்கையை மேற்கொண்டது. இதை ஏன் விமர்சிக்கிறீர்கள்?’’
‘`2006-07-ல் நடந்த ஒரு சம்பவத்துக்கு சுவர் ஏறிக்குதித்துக் கைது செய்யக்கூடிய அளவுக்கு இதில் என்ன இருக்கிறது? அரசாங்கம் எடுத்த முடிவுகள் என்றால், எல்லா விவரங்களும் ஃபைலில் அப்படியேதானே இருக்கும். அடுத்து 2 நாள் காத்திருந்து சம்மன் அனுப்பவேண்டியது தானே. சம்மன் அனுப்பி ஆஜராகாமல் இருந்திருக்கிறாரா, இல்லையே... அப்படி யென்றால், ஏன் இந்தக் கைது ஆர்ப்பாட்ட மெல்லாம்... இவை எல்லாமே அப்பாவின் பெயரைக் கெடுக்கவேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு நடத்திவரும் நாடகம்தான்.’’
‘`ப.சிதம்பரத்தைக் கைது செய்யவேண்டும் என்பதில், மத்திய பா.ஜ.க அரசுக்கு என்ன ஆர்வம் இருந்துவிடப் போகிறது?”
‘`பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஆரம்பித்து காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பொருளாதாரச் சீரழிவு எனத் தொடர்ச்சியாக மத்திய பா.ஜ.க அரசு செய்துவரும் தவறுகளைத் தட்டிக்கேட்டு என் தந்தை ப.சிதம்பரம் முன் வைக்கும் கேள்விகளுக்கு அவர்களால் நேரடியாகப் பதில் பேச முடியவில்லை. எனவே என் தந்தையை அச்சுறுத்துவதற்காகவும் அவரது பெயரில் அவதூறு ஏற்படுத்து வதற்காகவும்தான் இப்படியொரு நாடகத்தை நடத்துகிறார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் நாடு முழுக்கப் பெரும் விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென ப.சிதம்பரத்தைக் கைதுசெய்து மீடியாவின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசை திருப்பி விட்டார்களே... இது திட்டமிட்ட அரசியல் இல்லையா?’’
‘`2010-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, செராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இந்தக் கைது நடவடிக்கை நடந்திருக்கிறது என்கிறீர்களா?’’
‘`எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், மத்திய பா.ஜ.க அரசின் தவறுகளை தினந்தோறும் விமர்சித்துவருபவர்களில் ப.சிதம்பரமும், கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் முக்கியமானவர்கள். அதனால் அவர்களைத் தொந்தரவு செய்யவேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்படியான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டி.கே.சிவக்குமார், தேர்தலில் போட்டியிடுகிறபோதே தனது சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனாலும்கூட வேண்டுமென்றே அவரைக் கைது செய்கிறார்கள், அவரது 22 வயது மகளைக் கூப்பிட்டு விசாரணை செய்கிறார்கள். ஆக, இது அரசியல் ரீதியாக வேண்டுமென்றே எடுக்கப்படுகிற நடவடிக்கை என்கிறேன்.’’
‘`அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள், தங்களுக்குக் கீழே பணிபுரியக்கூடிய அரசு அதிகாரிகளை மிரட்டிப் பணியவைக்க முடியும் என்கிறபோது, அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பது தேவையற்றது என்கிறார்களே?’’
‘`நீங்கள் சொல்வதுபோல் நடந்திருந்தால், ‘என்னை ப.சிதம்பரம் இப்படி மிரட்டிக் கையெழுத்திட வைத்தார்’ என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கொடுத்த ஸ்டேட்மென்ட்களை இதுவரை ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை? பொதுவெளியில் வெளியிடாவிட்டாலும்கூட, நீதிமன்றத்திலாவது தாக்கல் செய்யவேண்டியதுதானே? நீதிமன்ற வாக்குமூலம் அல்லது அதிகாரபூர்வமான செய்தித் தொடர்பாளர்களின் வழியேதான் அரசாங்கத்தின் செய்திகள் சொல்லப்படவேண்டும். ஏனெனில், இவை இரண்டும்தான் ஓர் அரசாங்கத்தின் அதிகார பூர்வமான செய்தியாக இருக்கமுடியும். ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில், இப்படியான அதிகார பூர்வமான எந்தவொரு தகவலையும் வெளியிடாமல், வதந்திகளை மட்டுமே கசிய விடுகிறார்கள். அவர்களது நோக்கம், ப.சிதம்பரத்தின் நற்பெயரைக் கெடுக்கவேண்டும்... அவ்வளவுதான்.’’
‘`பொருளாதார அடிப்படையிலான வழக்கு களில், அவ்வளவு எளிதில் ஆதாரங்களை நிரூபித்துவிட முடியாத சிக்கல்கள் இருக்கின்றனதானே?’’
‘`இப்படிச் சொல்லிக்கொண்டு இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் விசாரணையே செய்துகொண்டிருப்பார்கள்? இன்னும் 20 வருடங்களுக்கு இப்படியே எங்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்களா?
2006-07-ல் நடைபெற்றதாகச் சொல்லப்படும் சம்பவத்தை இப்போது விசாரிக்கிறார்கள். வெறுமனே ஒரு எஃப்.ஐ.ஆர் மட்டும் போட்டுவிட்டு, குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யாமல், முடிவில்லா விசாரணை என்ற பெயரில், தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கலாமா? அது எப்படி, இந்த மத்திய பா.ஜ.க அரசை விமர்சிப்பவர்கள்மீது மட்டும் இப்படியெல்லாம் வழக்குகள் பாய்கின்றன?’’
‘`கர்நாடகத்தின் டி.கே.சிவக்குமார், தமிழகத்தின் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை களை ஒப்பிட்டுப்பேசும்போது, ‘கர்நாடக காங்கிரஸை விடவும் தமிழக காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறது’ என்று நீங்கள் கூறியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே?’’
‘`அது உண்மைதானே... கடந்த ஐந்தாண்டுக்காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அதன்பிறகும் கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்தது. ஆக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அடிக்கடி ஆட்சிக்கு வருகிறது. ஆனால், இங்கே தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகளைத் தாண்டிவிட்டதே. எனவே, கர்நாடக காங்கிரஸ் கட்சி, தமிழக காங்கிரஸை விடவும் வலிமையானதுதான். இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? காங்கிரஸ்காரனாக இருந்தாலும்கூட, என் பலம், பலவீனம் இரண்டையும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறேன்.’’
‘`ப.சிதம்பரம், கட்சியில் தனிப்பட்ட செல்வாக்கைப் பெறாததே போராட்டப் பிசுபிசுப்புகளுக்குக் காரணம் என்கிறார்களே?’’
‘`தமிழகத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியில் ஆரம்பித்து, எம்.பி ஜெயக்குமார், பீட்டர் அல்போன்ஸ் என எல்லோருமே போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ப.சிதம்பரம் கைதுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்; கண்டனக் கூட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே இதிலெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கர்நாடக காங்கிரஸோடு ஒப்பிட்டால், எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அவர்களுக்கு அதிகம்.’’
‘`சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்கூட, கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லையே?’’

‘`அதைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. கைதைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கருத்துகளும் பேசப்படுகின்றன. நான் சொல்கிற கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்தும்கூட. பத்திரிகைகளில் நன்றாகவே வெளிவருகின்றன. இதுதான் எனக்குத் தேவையானது. இதற்குமேல் என்ன வேண்டும்?’’
‘`மீத்தேன் திட்டத்தில் ஆரம்பித்து நீட் தேர்வு, என்.ஐ.ஏ., இந்தித் திணிப்பு என எல்லா விஷயங்களிலும் ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சி வைத்த புள்ளிகளில்தானே இப்போது பா.ஜ.க அரசு கோலம் போட்டு வருகிறது?’’
‘`நீட்டை காங்கிரஸ் கட்சி அமல்படுத்தியதா? பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நாங்களா கொண்டுவந்தோம்? காஷ்மீரைச் சிதைத்தது காங்கிரஸ் கட்சியா? மாட்டிறைச்சி சாப்பிடுகிறான் என்று சொல்லி, கல்லெடுத்து அடித்ததெல்லாம் காங்கிரஸ் கட்சியா செய்தது? ‘இந்தியாவில் இந்தி மொழிதான் இருக்க வேண்டும். மற்ற மொழியெல்லாம் இருக்கக்கூடாது. இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி தேவை’ என்றெல்லாம் ஒருகாலமும் காங்கிரஸ் கட்சி சொன்னதே கிடையாது.’’
‘`2010-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ‘தேசிய மொழியான இந்தியை, அனைத்து மாநிலங்களும் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று இந்தியிலேயே பேசியி ருக்கிறாரே?’’
‘` ‘இந்தி தின’த்தன்று அந்த ரிப்போர்ட்டைப் படித்தார்... அவ்வளவுதான். மற்றபடி அது ஒன்றும் அரசாங்கத்தின் கொள்கை கிடையாது. இந்தி தினத்தன்று, அதற்கென்று உள்ள கமிட்டி தயார்செய்துகொடுத்த ரிப்போர்ட்டை உள்துறை அமைச்சர் படிப்பதென்பது வாடிக்கையான ஒரு சம்பிரதாயம். ஆனால், இந்த முறையோ, ‘இந்திதான் இந்தியாவை ஒருங்கிணைக்கும்; ஒற்றுமைப்படுத்தும். உலக அரங்கில் இந்தியாவுக்கென்று இந்திமொழி இருக்க வேண்டும்’ என்றெல்லாம் இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார்.’’