அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அமித் ஷாவை நடிகர் சந்தான பாரதி என்றே பலரும் நினைக்கிறார்கள்! - கலாய்க்கும் கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி சிதம்பரம்

எல்லோரும் தலைவர் பதவிக்கு வர விரும்புவதில் தவறு இல்லை. ஆனால் ரிசல்ட் என்னவென்று பார்க்க வேண்டும். கீழ்மட்டக் கட்டமைப்புதான் ஒரு கட்சிக்கான வலிமை

தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதல் ஒருபக்கம்... மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸ் மறுபக்கம் என்று சத்தியமூர்த்தி பவன் சுறுசுறுப்பாகியிருக்கும் நிலையில், ‘மலையைத் தூக்கி கையில் கொடுங்கள் தூக்குகிறேன்’ என்பதுபோல ‘தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை என்னிடம் கொடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தொடர்ந்து பேசிவருகிறார் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம். சென்னை அலுவலகத்தில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல்கள் மீண்டும் தூள் பறக்கின்றனவே?”

“என்ன செய்வது... எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், இதையெல்லாம் மாற்றிவிடுவேன். நான் காங்கிரஸ் தலைவராக இருந்தால் இப்படியான பிரச்னைகளே முதலில் ஏற்பட்டிருக்காது. வந்தவர்கள், போனவர்களுக்கெல்லாம் பதவி கொடுப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்போது தமிழ்நாடு காங்கிரஸில் நியமிக்கப்பட்டிருக்கும் துணைத் தலைவரின் பெயர் யாருக்காவது தெரியுமா... இதுதான் இங்கே காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் மாற்றம் வர வேண்டும்.”

அமித் ஷாவை நடிகர் சந்தான பாரதி என்றே பலரும் நினைக்கிறார்கள்! - கலாய்க்கும் கார்த்தி சிதம்பரம்

“நீங்களும் ரொம்ப காலமாகத் தலைவர் பதவி கேட்டுப் பார்க்கிறீர்கள்... கட்சி மேலிடம் உங்களைக் கண்டுகொள்வதுபோலவே தெரியவில்லையே..?”

“அப்படியென்றால் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி எனக்கு இல்லைபோல...”

“ஒருவேளை நீங்கள் சொல்கிற ‘ஐடியா’க்கள் உங்கள் கட்சி மேலிடத்துக்குப் பிடிக்கவில்லையோ?”

“நீங்களே சொல்லுங்கள்... 1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சி போனது. இப்போது 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இவர்கள் சிஸ்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது... என்னை விடுங்கள். இவர்கள் செய்வது சரியாக இருந்தால், வெற்றிபெற்றுக்கொண்டே வந்திருக்க வேண்டுமில்லையா... ஏன் ஆட்சிக்கு வரவில்லை?”

“தலைவர் போட்டியில் புதிதாக வேறு சில பெயர்கள் அடிபடுகின்றனவே... உங்கள் தலைவர் கனவு பகல் கனவுதானா..?”

“எல்லோரும் தலைவர் பதவிக்கு வர விரும்புவதில் தவறு இல்லை. ஆனால் ரிசல்ட் என்னவென்று பார்க்க வேண்டும். கீழ்மட்டக் கட்டமைப்புதான் ஒரு கட்சிக்கான வலிமை. அதன் மூலம்தான் கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் உருவாக முடியும். ஒவ்வொரு சிறிய தேர்தலிலும் அந்த வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, இந்த உத்தியைச் சிறப்பாகக் கையாண்டு யார் செயலாற்றுகிறார்களோ, அவர்களை நான் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”

“இப்படிச் சொல்லும் நீங்களே களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை என்று விமர்சனம் இருக்கிறதே?”

“யார் சொன்னது... காரைக்குடி எம்.எல்.ஏ-வை வெற்றிபெற வைத்ததிலிருந்து உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்களை வெற்றிபெறவைத்தது வரை எனக்குப் பங்கில்லையா... 1996 முதல் எல்லாத் தேர்தல்களிலும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். எத்தனையோ பேருக்கு சீட் வாங்கிக் கொடுத்து, அவர்கள் வெற்றிக்கு உழைத்திருக்கிறேன்.”

“பா.ஜ.க-வின், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு வந்ததா?”

“தமிழுக்கும் காசிக்கும் காலம் காலமாகத் தொடர்பு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக, எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் அங்கு சத்திரங்கள் வைத்திருக்கிறோம். அடிக்கடி காசிக்குச் செல்வதுமுண்டு. எனவே, இப்படி ஒரு விழாவை நான், நடத்த வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், தமிழ்நாட்டிலிருக்கும் முன்னோடியான அரசியல் தலைவர்கள், அறிஞர்களைத் தவிர்த்துவிட்டு, தேர்தல் பிரசார உத்தியாக இந்த விழாவை நடத்திவருகிறார்கள். அதில் எனக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டின் எந்த ஒரு தலைவருக்கும் அழைப்பு இல்லை.”

“தேசிய அளவில் காங்கிரஸார் பா.ஜ.க-வுடன் மல்லுக்கட்டுகின்றனர். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவரைக் குறித்து உங்களிடமிருந்து எந்த விமர்சனமும் இல்லையே?”

“அண்ணாமலை ஒரு நல்ல போலீஸ் அதிகாரியாக இருந்தார். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை வந்த பிறகுதான் ஊரிலிருக்கும் எல்லா ரௌடிகளும் அந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். முன்பு பா.ஜ.க கூட்டங்களில் காலி சேர்கள் மட்டும்தான் காணப்படும். இப்போது நல்ல ஈவன்ட் மேனஜ்மென்ட்டைத் தேர்வு செய்திருப்பார்கள் போல. பா.ஜ.க கூட்டத்துக்குப் போனால், பேசுவது யார் என்றுகூடப் பார்வையாளர்களுக்குத் தெரியாது. எங்கள் ஊருக்கு அமித் ஷா வந்து பேசிவிட்டுப் போனார். ஆனால், அவரை நடிகர் சந்தான பாரதி என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ அவர்கள் சோஷியல் மீடியா டீம், ஐடி விங், ட்விட்டர் லைக்குகளை வைத்துக்கொண்டு கட்சியை வளர்த்துவிட்டோம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இவர்கள் சொல்வதெல்லாம் அம்பலமேறாது.”

“அமைப்புரீதியாக பா.ஜ.க-வின் பலம், காங்கிரஸின் பலவீனம் என்ன?

“பா.ஜ.க-வுக்கு அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு வேலைசெய்ய, கொள்கையை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங் தள், ராம்சேனை என்று பல அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் ஏதாவது ஒருவகையில் மக்களோடு சமூகரீதியான தொடர்புகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இது அவர்களுடைய பலம். எங்களுடைய பலவீனம் கட்சியைத் தாண்டிய அமைப்புகள் இல்லாதது. எங்களுடைய மக்கள் தொடர்பு தேர்தல், பிரசாரம், வாக்கு என்பதோடு நின்றுவிடுகிறது!”