அரசியல்
Published:Updated:

“ராகுலைப்போல் எனக்கு ஒழுக்கம் இல்லை!” - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி!

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்பது ஒரு நியமனப் பதவி. தை பிறந்ததும் தலைவர் பொறுப்பு என்ற வரம் கிடைத்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்

‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை என்னிடம் கொடுங்கள்’ என ஓராயிரம் முறைக்கு மேல் வாய்விட்டுக் கேட்டதோடு, அதற்காக டெல்லி வரை முட்டி மோதியும் வருகிறார் எம்.பி கார்த்தி சிதம்பரம். அதேநேரத்தில், ‘கள அரசியலில் நம்பிக்கையில்லாதவர் கார்த்தி’ என்று சொந்தத் தொகுதியிலேயே எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இந்தச் சூழலில், அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் செயல் மரபை மீறியது என்றால், அவர் பேசும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டது மட்டும் எந்த வகையில் நியாயம்?”

“நாகாலாந்தில் ரவி மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்விதான். அதற்கு தண்டனையாகத்தான் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் அவர் மாறவில்லை. சட்டமன்ற மரபை மீறி, அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார் ஆளுநர். அவருக்கு எதிராகப் போராடவேண்டிய அவசியத் துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். அதுவும் ஜனநாயக முறைப்படி தான் நடந்தது. எனவே, அதில் தவறில்லை.”

“ராகுலைப்போல் எனக்கு ஒழுக்கம் இல்லை!” - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி!

“தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு, ‘கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணியில் இணைவார்’ எனத் தன்னிச்சையாக நீங்கள் சொல்வது வேடிக்கையாக இல்லையா?”

“கூட்டணியில் இருப்பதால், விருப்பத்தைக்கூட சொல்லக் கூடாதா என்ன... மதச்சார்பற்ற கூட்டணிக்குள் கமல்ஹாசன் வருவார் என்றுதான் கூறினேன். கமலை, கூட்டணியில் சேர்ப்பது, சீட் கொடுப்பதெல்லாம் தி.மு.க கையில்தான் இருக்கிறது.”

`` `தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பை எனக்குக் கொடுங்கள்’ என நீங்களும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறீர்கள். கிடைக்க ஏதாவது அறிகுறி தெரிகிறதா?”

“காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்பது ஒரு நியமனப் பதவி. தை பிறந்ததும் தலைவர் பொறுப்பு என்ற வரம் கிடைத்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போதும் இருக்கிறது.”

“ஆனால், எம்.பி-யாக உங்கள் செயல்பாடு திருப்தியில்லை என்றும், தொகுதிப் பக்கமே நீங்கள் செல்வதில்லை என்றும் உங்கள் தந்தையிடமே கட்சி நிர்வாகிகள் புகார் செய்திருக்கிறார்களே?”

“எல்லோரையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது. தொகுதிக்கு எப்போதெல்லாம் சென்றேன் எனப் பட்டியல் கொடுக்க நான் தயார். பார்லிமென்ட்டில் வெறும் தொகுதி விஷயத்தை மட்டுமே பேசிக்கொண்டு இருக்க முடியாது. சர்வதேசம், நாட்டின் வளர்ச்சி குறித்தும் பேச வேண்டும்.”

“சிவகங்கைத் தொகுதி...”

“(இடைமறித்துப் பேசுகிறார்...) தொகுதி... தொகுதி... தொகுதி... என்று எல்லோரும் இதையே கேட்கிறார்கள். எம்.பி என்றால் தொகுதிக்கு சுல்தான் இல்லை. எம்.பி-க்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஒரு ஆண்டுக்கு வெறும் 5 கோடி ரூபாய்தான் நிதி வருகிறது. அதை வைத்துக்கொண்டு சமுதாயக்கூடம், வாட்டர் டேங்க், பஸ் ஸ்டாப் கட்டிக் கொடுக்கலாம்... அவ்வளவுதான். தொகுதிக்கு எம்.பி எதுவும் செய்யவில்லை என்று யாரும் கேட்கவே கூடாது. `தண்ணி வரல, பஸ் வரல’ என்று எம்.பி-யிடம் கேட்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்... யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.”

“ `கஞ்சா பயன்படுத்துவது நமது கலாசாரத்தில் இருக்கிறது’ என்று சமீபத்தில் கூறியிருக்கிறீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?”

“கஞ்சா குறித்து ரிக் வேதத்தில் இருக்கிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, கஞ்சா அடிப்பவர்களை குற்றவாளிகளாகப் பார்க்கக் கூடாது. அவர்கள் நோயாளிகள். அவர்களை மறுவாழ்வு மையங் களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்தியாவில் இது போன்ற மறுவாழ்வு மையங்கள் இல்லையே...”

“இப்படி ட்விட்டரில் ‘களமாடும்’ கார்த்தி, களத்தில் இறங்கி எப்போது போராடுவார்?”

“தெருவில் இறங்கிப் போராட்டம் செய்தால், பிரச்னை தீர்ந்துவிடும் என்பதே தவறு. அதில் எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. சும்மா சும்மா போராட்டம் நடத்தி கோஷம் போடுவதால் எதுவும் மாறிவிடாது.”

“சுதந்திரமே அப்படி வந்ததுதானே?”

“அந்தக் கதையெல்லாம் ரொம்ப ஓல்டு, முடிந்துவிட்டது. சட்டம், நிர்வாகம் மூலமாகத்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.”

“ஓல்டு ஸ்டைல் என்பதால்தான் வாக்களித்த மக்களுக்கு நன்றிகூடச் சொல்லாமல் இருக்கிறீர்களா?”

“ஆமாம்... அது வெறும் சம்பிரதாயம். அதை நான் ஏன் செய்ய வேண்டும்... தொகுதிகளில் இருக்கும் 15 லட்சம் பேருக்கும் யாராலும் நேரடியாக நன்றி சொல்லவே முடியாது.”

“வாக்கு கேட்கும்போது மட்டும் அவ்வளவு பேரையும் நேரில் சந்திக்க நடையோ நடையாக நடந்தீர்களே..?”

“எனது செயல்பாட்டை முன்வைத்து ஓட்டு கேட்கச் சென்றேன். பொதுமக்களுக்குத் தேவை நல்ல சர்வீஸ்தான். ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் தொகுதிக்கு 2 கோடி ரூபாய் நிதி கொண்டு வந்திருக்கிறேன். அது முக்கியமா... இல்லை நன்றி சொல்வது முக்கியமா... தொகுதி மக்கள் எனது தேசியப் பார்வையைத்தான் பார்க்கிறார்கள். பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ வங்கிப் பணிக்கான தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என்று ட்வீட் செய்து இருக்கிறேனே?!”

“போராட்டம் நடத்தியே ஒன்றும் மாறப்போவதில்லை என்று சொல்லும் நீங்கள், ட்வீட் மட்டும் போடுவது ஏன்... சம்பிரதாயத்துக்காகவா?”

“எனது கருத்தைச் சொல்கிறேன். எனக்கு முன்பாகவே பல எம்.பி-க்கள் எஸ்.பி.ஐ தேர்வுக்கு எதிராக வங்கிக்குக் கடிதம் கொடுத்துவிட்டார்கள். அதையே நானும் ஏன் செய்ய வேண்டும்?”

“களப்பணியாற்றும், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தையாவது ஏற்றுக்கொள்வீர்களா... இல்லையா..?”

“நிச்சயமாக. அவர் செய்வது சாதாரணமான காரியமில்லை. தொடர்ந்து ஐந்து மாதங்கள் காலையில் எழுந்து நடப்பதற்குத் தனிநபர் ஒழுக்கம் இருக்க வேண்டும். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.”

“அப்படியென்றால், உங்கள் கொள்கைகளையெல்லாம் முன்வைத்து, தமிழ்நாட்டில் ஒரு நடைப்பயணம் செய்யுங்களேன்?”

“ராகுலைப்போல் எனக்கு ஒழுக்கம் இல்லை.”