Published:Updated:

“பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை!”

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் ஆருடம்

“பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை!”

கார்த்தி சிதம்பரம் ஆருடம்

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்
கொரோனா ஊரடங்கிலும் தமிழகத்தில் ஜோராக இயங்குகின்றன அரசு மதுக்கடைகள். விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளி, மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்திருக்கிறது தமிழக அரசு.

அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தில் மதுவிலக்குக் கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், ‘பூரண மதுவிலக்கு தோல்வியடையும் திட்டம்’ என்று சொல்லியிருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தை அலைபேசியில் தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பூரண மதுவிலக்கு ஏன் தோல்வியடையும்?”

“அது உலகம் முழுவதும் தோல்வியடைந்த விஷயம்தான். எனவே, தமிழகத்திலும் அது சாத்தியமில்லை. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச் சாராயம் உள்ளிட்ட குற்றங்கள் பெருகும். ஆனால், மது விற்பனையைக் கட்டுப்படுத்தலாம். அடையாள அட்டைமூலம் குறிப்பிட்ட வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு மட்டுமே மது விற்கலாம். ஆன்லைன் விற்பனை, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, கண்காணிப்பு கேமராக்களில் கண்காணிப்பது என, தொழிலை ஒழுங்குபடுத்தலாம். ஆந்திராவில் மதுபானங்களுக்கு 75 சதவிகிதம் வரியை உயர்த்தியதால் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. அதே நிலைதான் தமிழகத்துக்கும் ஏற்படும். மதுவுக்கு நான் ஆதரவான நபர் கிடையாது. மது குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதைவிடுத்து, ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிப்பது சரியாக இருக்காது.”

“அப்படியெனில், மதுக்கடை திறப்பு விஷயத்தில் அ.தி.மு.க-வுக்கு நீங்கள் ஆதரவா?”

“பூரண மதுவிலக்கு தொடர்பாக மட்டுமே எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன். ஒரு விஷயத்தை வைத்து அனைத்து விஷயங்களிலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு என்று சொல்லக் கூடாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். எதிர்க்கட்சியாக இருந்தால் அனைத்து கருத்துகளும் எதிர்மறையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.”

“பூரண மதுவிலக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?”

“பூரண மதுவிலக்கு, காங்கிரஸின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக இருக்கலாம். அதே நேரத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலெல்லாம் பூரண மதுவிலக்கு என்று யாரும் சொல்லவில்லை. பூரண மதுவிலக்கு தோல்வியடையும் என்பது என்னுடைய கருத்து மட்டுமே. அதை கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை.”

“கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்த கோப்பில்தான்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. அதுதான் தோல்விக்குக் காரணமா?”

“அதனால்தான் தோல்வி என்று சொல்ல முடியாது. அந்தத் தேர்தலில் பா.ம.க அல்லது தே.மு.தி.க-வை கூட்டணியில் சேர்த்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.”

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

“சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே?”

“சென்னையில் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. அதனால், அதிகமான பாதிப்புகள் வெளியே தெரிகின்றன. மாநிலம் முழுவதும் பரிசோதனைகளை அதிகப்படுத்தினால்தான் உண்மையான நிலவரம் தெரியும்.”

“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?”

“முன்யோசனை இல்லாமல் பல முடிவுகளை எடுக்கிறார்கள். அதிகமான பரிசோதனைகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள், நோய் பாதிக்கப் பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஊரடங்கு, 50 நாள்களைக் கடந்துவிட்டது. ஆனால், நிவாரணப் பணிகள் முழுமையடையவில்லை. ஊரடங்குக்கு முன்பே நிவாரணங்களை வழங்கி, வெளிமாநிலத் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பியிருக்கலாம். காய்கறிகள், அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியவில்லை.”

“பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் திட்டம் குறித்து?”

“இந்த 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் திட்டம்மூலம் யாருக்காவது நேரடியாகப் பணம் கிடைத்துள்ளதா? பெரிய அளவில் நம்பரைச் சொல்லித் திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதனால் யாருக்கும் பயன் கிடையாது. இந்த அரசாங்கத்தின் பெரும்பாலான திட்டங்கள் வெறும் அறிவிப்பு மட்டுமே. அனைத்து வங்கிக்கணக்குகளிலும் தலா 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று சொன்னார்களே, அதுபோல்தான் அனைத்து அறிவிப்புகளும்.”

“ `பொருளாதார வீழ்ச்சியைச் சரிக்கட்ட, கொரோனாவை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது’ என்று சிலர் சொல்வது பற்றி?”

“அது தவறான கருத்து. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல நாடுகளில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவிவருகிறது.”

“தற்போதைய சூழலில் மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் தி.மு.க-வும் ஆட்சியில் இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுத்திருப்பீர்கள்?”

“நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அனைத்துக் கட்சிகளையும் வாரம் ஒருமுறை கூட்டி, யோசனைகளைக் கேட்டுச் செயல்படுத்தியிருப்போம்.”