அரசியல்
Published:Updated:

தாய்மாமன் கமல்ஹாசனை கூட்டணிக்கு அழைக்கிறேன்!

கார்த்தி சிதம்பரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி சிதம்பரம்...

வலைவீசும் கார்த்தி சிதம்பரம்...

புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் கச்சேரி, ஸ்டாலினின் சரண்டருக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால்... விடாப்பிடியாக கதர்த்துண்டைத் தலைக்கு மேலே விறுவிறுவென சுற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். கார்த்தி சிதம்பரத்தைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரியும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்து தி.மு.க-வுக்கு ஜெர்க் ஏற்படுத்தியிருக்கிறார். இந்தநிலையில்தான் கார்த்தி சிதம்பரத்திடம் பேசினோம்...

“கமல்ஹாசனை கூட்டணியில் சேர்க்க தி.மு.க-வே ஆர்வம் காட்டாத சூழலில், நீங்கள் அவரைக் கூட்டணிக்கு அழைப்பது ஏன்?’’

“மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்டவற்றைத்தான் ம.நீ.ம கொள்கைகளாக கமல்ஹாசன் முன்வைக்கிறார். பரந்த மனப்பான்மை, தனிமனித சுதந்திரம், எல்லாமும் எல்லோருக்கும் என்கிற முற்போக்கு சிந்தனையுடைய கமல்ஹாசன், நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியுடன் ஒத்துப்போக முடியும். எனவேதான், எங்கள் கூட்டணிக்கு வர அவருக்கு அழைப்பு விடுத்தேன். ஆனாலும், இதற்கு முதலில் ம.நீ.ம ஒப்புக்கொள்ளவேண்டும். அடுத்து எங்கள் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுதான் நடைமுறை... இது எனது தனிப்பட்ட கருத்து என்றாலும், இறுதி முடிவை தி.மு.க-தான் எடுக்க வேண்டும்.’’

தாய்மாமன் கமல்ஹாசனை கூட்டணிக்கு அழைக்கிறேன்!

“ஆனால், புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், நீங்கள் இப்படி கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுப்பது, தி.மு.க-வுக்கு விடுக்கும் மிரட்டலாக அல்லவா பார்க்கப்படுகிறது?”

“இல்லை. ‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சுமுகமாகத் தொடரும்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினே அறிவித்துவிட்டார். எனவே, எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான கூட்டணியுடன் தேர்தலைச் சந்திப்பது பல வகைகளிலும் நல்லது என்று நினைக்கிறேன். தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, ‘இந்தக் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று தனிப்பட்ட கருத்தைச் சொல்வதில் தவறில்லையே... தவிர, கமல்ஹாசனும் சித்தாந்தரீதியாக நமக்கு விரோதமானவர் இல்லையே.’’

“ம.நீ.ம கட்சியையும் கூட்டணியில் இணைத்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் பலவீனமாக இருக்கிறதா தி.மு.க கூட்டணி?’’

“அப்படியில்லை... ஏற்கெனவே எங்கள் கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. 2021 தேர்தலிலும் நாங்கள்தான் வெற்றிபெறப் போகிறோம். கூட்டணிக்கு வந்தால் ம.நீ.ம கட்சிக்கும் நல்லது என்ற அடிப்படையில்தான் அழைப்பு விடுக்கிறேன்... மற்றபடி கூட்டணிக்குள் ம.நீ.ம வருவதையும், கூட்டணிக்குள் அந்தக் கட்சியை ஏற்பதும் இரு கட்சிகளின் தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இன்னொரு விஷயம்... என் தாய்வழிப் பாட்டிதான் அவருக்கு (கமல்ஹாசன்) தாய் மாதிரி என்று பல மேடைகளில் கமல்ஹாசனே சொல்லியிருக்கிறார். அந்த வகையில், என் தாய் மாமனை நான் அழைப்பதாகக்கூட எடுத்துக்கொள்ளுங்களேன்!’’

தாய்மாமன் கமல்ஹாசனை கூட்டணிக்கு அழைக்கிறேன்!

“சமீபத்தில், அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ‘ஜம்போ’ நிர்வாகிகள் பட்டியலைக் கடுமையாக விமர்சித்திருந்தீர்கள். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?’’

“மிகப்பெரிய கட்சியான தி.மு.க-வில் இப்போதும்கூட தமிழ்நாடு முழுக்க மொத்தமே 32 நிர்வாகிகள்தான் இருக்கிறார்கள். அதில் 21 பேர் உயர்மட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள். மீதம் 11 பேர் மட்டுமே கட்சி நிர்வாகிகள். இப்படிக் குறைவான எண்ணிக்கையில் நிர்வாகிகள் இருந்தால்தான் அது மதிப்பு... மரியாதை. ஆனால், தமிழக காங்கிரஸில், கட்சிப் பதவிகளை கணக்கு வழக்கில்லாமல் நிறைய பேருக்கு வாரி இறைத்திருக்கின்றனர். இதனால், தனிப்பட்ட பொறுப்பு என்று யாருக்கும் எதையும் கொடுக்க முடியாது. நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. எனவே, எனது விமர்சனத்தில் எந்த மாற்றமோ அல்லது கருத்து வேறுபாடோ இப்போதுவரை கிடையாது.’’

“அகில இந்திய தலைமையின் ஒப்புதலின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை விமர்சிப்பது, நேரடியாகக் கட்சியின் தலைமையையே விமர்சிப்பதாகாதா?’’

“காங்கிரஸ் கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் வர வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில், ‘கட்சியின் நிர்வாகிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருக்க வேண்டும்’ என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. இதில் எந்த மாற்றமும் கிடையாது. எனது கட்சியின் நலனுக்காகத்தானே இந்தக் கருத்தை சொல்கிறேன்... எனவே, என் கருத்தில் இப்போதும் நான் உறுதியாகவே இருக்கிறேன்.’’

“ஆனால், ‘காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனத்தை விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம், எத்தனை முறை சத்திய மூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறார்’ என்று கேட்கிறாரே கோபண்ணா?’’

“அவரது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனாலும்கூட உங்கள் புரிதலுக்காக சொல்கிறேன்... இப்போதுகூட பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தேர்தல் அறிக்கைக் குழு அமைத்திருக்கிறார்கள். இந்தக் குழுவில் நானும் இருக்கிறேன். எனக்கென்று குறிப்பிட்ட பொறுப்பும் தரப்பட்டிருக்கிறது. இது விஷயமாக என் கடமையைச் செய்ய இப்போதும் நான் சத்தியமூர்த்தி பவன் சென்றுவருகிறேன். அதுமட்டுமல்ல... கட்சியிலுள்ள மற்ற தலைவர்களைவிட மிக அதிகமாகச் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களைச் சந்தித்துவருகிறேன். சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே காங்கிரஸ் கட்சி இல்லை!’’